மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டம் தில்லையாடியில் பொலிவு இழந்து காணப்படும் தியாகி வள்ளியம்மை நினைவு மண்டப சீரமைப்பு பணிகள் விரைவில் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டு பல மாதங்கள் ஆகியும் இன்னும் பணிகள் தொடங்கப்படவில்லை என வரலாற்று ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
தியாகி தில்லையாடி வள்ளியம்மைக்கு தில்லையாடியில் தமிழக அரசு சார்பில் கட்டப்பட்ட நினைவு மண்டபத்தை 13.8.1971 அன்று அப்போதைய முதல்வர் கருணாநிதி திறந்து வைத்தார். இதன் ஒரு பகுதியில் கிளை நூலகம் இயங்கி வருகிறது. மண்டபத்தின் மையப் பகுதியில் வள்ளியம்மையின் சிலை, தென்னாப்பிரிக்க போராட்டக் கள காட்சி அமைப்புகள், காந்தி தனது கைப்பட தமிழ் மொழியில் எழுதிய கடிதங்கள் உள்ளிட்டவை பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.
மேலும், மண்டபத்துக்கு எதிரில் மகாத்மா காந்தி நினைவுத்தூண் அமைக்கப்பட்டுள்ளது. இவை தற்போது சிதிலமடைந்தும், பொலிவிழந்தும் காணப்படுகின்றன. கட்டிடத்தின் மேல் பகுதியில் மரங்கள் வளர்ந்தும், சுற்றுப்பகுதியில் புதர் மண்டியும் காணப்படுகிறது. செய்தி- மக்கள் தொடர்பு துறை கட்டுப்பாட்டில் உள்ள இம்மண்டபத்தை சீரமைக்க மதிப்பீடு தயார் செய்யப்பட்டுள்ளதாக, கடந்த ஆண்டு டிசம்பரில் மயிலாடுதுறைக்கு வந்திருந்த தமிழக செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் கூறியிருந்தார்.

அதன்பின், கடந்த ஜூன் 22-ம் தேதி இந்த நினைவு மண்டபத்தை பார்வையிட்டபோது, ரூ.89.54 லட்சம் செலவில் பொதுப்பணித்துறை மூலம் மதிப்பீடு தயார் செய்யப்பட்டுள்ளதாகவும், விரைவில் பணிகள் தொடங்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்திருந்தார். ஆனால், இதுவரை பணிகள் தொடங்கப்படவில்லை என சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
இதுகுறித்து தில்லையாடி அருணாசலக்கவிராயர் இயல் இசை நாடக மன்றச் செயலாளர் எஸ்.ரவிச்சந்திரன் ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் கூறியது: தியாகி வள்ளியம்மை நினைவு மண்டபத்தை சுற்றுலாப் பயணிகள், வரலாற்று ஆர்வலர்கள், கல்லூரி, பள்ளி மாணவர்கள் அவ்வப்போது வந்து பார்வையிட்டுச் செல்கின்றனர். ஆனால் தேவையான அடிப்படை வசதிகள் இல்லை. மண்டபத்தின் நிலையை கண்டு வேதனை தெரிவிக்கின்றனர். கழிப்பறை முற்றிலும் சிதிலமடைந்துள்ளது. குடிநீர் வசதி இல்லை. கட்டிடத்தின் மேல் மரக்கன்றுகள் வளர்ந்து சுவர்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
சில ஆண்டுகளுக்கு முன்னர் சுற்றுச்சுவரின் ஒரு பகுதி இடிந்து விழுந்துவிட்டது. இரும்பு மற்றும் மரக்கதவுகள் முற்றிலும் சேதமடைந்துள்ளன. எனவே வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த மண்டபத்தை விரைந்து சீரமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். மேலும், இந்த நினைவு மண்டபம் தொடர்பான முழு விவரங்களை தெரிந்து கொள்ளும் வகையில் இங்கு ‘க்யூ ஆர்’ கோடு வசதியும் ஏற்படுத்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.