நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூரில் கபிலர்மலைக்குச் செல்லும் சாலையில் பழைய தேசிய நெடுஞ்சாலை அருகே அ.தி.மு.க சார்பில் அறிஞர் அண்ணாவின் 115-வது பிறந்தநாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்தப் பொதுக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளர்களாக, முன்னாள் அமைச்சரும், மாவட்டக் கழகச் செயலாளரும், குமாரபாளையம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான தங்கமணி, வேடசந்தூர் தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பரமசிவம் ஆகியோர் கலந்துகொண்டனர். அப்போது பேசிய முன்னாள் அமைச்சர் தங்கமணி,

“தி.மு.க ஆட்சி அமைந்து இரண்டரை ஆண்டுகள் ஆகியும் அவர்கள் தேர்தல் நேரத்தில் சொன்ன வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. அதேபோல், அ.தி.மு.க ஆட்சியில் நடைமுறையில் இருந்த படித்த பெண்களுக்கு திருமணத்துக்குத் தாலிக்குத் தங்கம் மற்றும் பணம் வழங்கும் திட்டத்தை தி.மு.க ஆட்சியில் நிறுத்திவிட்டனர். அதேபோல், ரூ. 25,000 மானியத்தில் பெண்களுக்கு வழங்கப்படும் அம்மா ஸ்கூட்டர் திட்டத்தையும் நிறுத்திவிட்டனர்.

தவிர, அ.தி.மு.க அரசு கொண்டு வந்த அனைத்து திட்டங்களையும் ரத்து செய்துவிட்டனர். தற்போது நாடாளுமன்றத் தேர்தல் வருவதாலும், எதிர்க்கட்சியான அ.தி.மு.க கொடுத்த நெருக்கடியாலும் குடும்பப் பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் தி.மு.க அரசால் வழங்கப்பட்டிருக்கிறது. அதுவும், 50 சதவிகித குடும்பத்தினருக்கு மட்டும் வழங்கப்பட்டிருக்கிறது. ஏன் மற்ற பெண்கள் இவர்களுக்கு வாக்களிக்கவில்லையா… அவர்களுக்கு உரிமைத்தொகை வழங்காமல் இந்த அரசு ஏன் ஒதுக்க வேண்டும்… இதை மக்கள் நன்கு சிந்தித்துப் பார்க்க வேண்டும். அதனால், தி.மு.க அரசின் மோசமான செயல்பாடுகளைச் சிந்தித்துப் பார்த்து, வரும் நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க-வுக்கு வாக்களித்து, 40 தொகுதிகளிலும் 40 உறுப்பினர்களைத் தேர்வுசெய்ய வேண்டும். வரும் தேர்தலில் அ.தி.மு.க 40 தொகுதிகளிலும் வெல்லும்” என்றார்.