உலகக் கோப்பைக்கு ரெடியானது ஆஸ்திரேலியா… இந்தியா தோற்றது எந்த இடத்தில் தெரியுமா?

IND vs AUS 3rd ODI: இந்தியா – ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் உள்ள சௌராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெற்றது. ஏற்கெனவே, இந்த தொடரின் முதலிரண்டு போட்டிகளை வென்று தொடரை கைப்பற்றியிருந்தாலும், ரோஹித் சர்மா, விராட் கோலி, குல்தீப் யாதவ், பும்ரா ஆகியோரின் வருகையால் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. மேலும், இந்த தொடரை இந்தியா வைட்வாஷ் செய்யமா எனவும் எதிர்பார்க்கப்பட்டது. 

அந்த வகையில், போட்டியின் டாஸை வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. ஆடுகளம் முழுவதுமாக பேட்டிங்கிற்கே சாதகமாக இருந்தது. புது பந்தில் கூட பெரிதாக ஸ்விங் கிடைக்கவில்லை. இதனால், ஆஸ்திரேலிய அணி தொடக்கத்தில் இருந்தே அதிரடியை ஆரம்பித்தது. மிடில் ஓவர்களிலும் சீரான வேகத்தில் ரன்களை வரவழைத்தது. எனவே, ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 352 ரன்களை எடுத்தது. 

அதிகபட்சமாக மார்ஷ் 96, ஸ்டீவ் ஸ்மித் 74, லபுஷேன் 72, வார்னர் 56 ரன்களை எடுத்தனர். இந்திய அணி தரப்பில் பும்ரா 3 விக்கெட்டுகளையும், குல்தீப் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். சிராஜ் மற்றும் பிரசித் கிருஷ்ணா தலா 1 விக்கெட்டை கைப்பற்றினர். 353 ரன்கள் என்ற மெகா இலக்குடன் இந்தியா களமிறங்கியது. 

மிரட்டிய ரோஹித்

இன்று கில், இஷான் ஆகியோருக்கு ஓய்வளிக்கப்பட்டதால், வலது – இடது காம்பினேஷனுக்காக வாஷிங்டன் சுந்தர் ஓப்பனிங் இறங்கினார். ரோஹித் சர்மா அதிரடியாக ஆடி பவுண்டரிகளையும், சிக்ஸர்களையும் பறக்கவிட்டார். ஆனால், வாஷிங்டன் ரன்களை குவிக்க தடுமாறினார். இந்த ஜோடி 11ஆவது ஓவர் வரை தாக்குபிடித்தது. 

10.5ஆவது ஓவரில் வாஷிங்டன் சுந்தர் 18(30) மேக்ஸ்வெல் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அப்போது இந்திய அணி ஸ்கோர் 74 ஆக இருந்தது. ரோஹித் சர்மா அரைசதமும் கடந்திருந்தார். தொடர்ந்து, களத்திற்கு வந்த விராட் கோலியும் தொடர்ந்து ரன்களை குவிக்கும் முனைப்பில் சில பவுண்டரிகளை அடித்தார். ஸ்கோர் நிதானமாக ஏறிக்கொண்டிருந்தது. இந்த ஜோடியும் அடுத்த 10 ஓவரில் 70 ரன்களை குவித்தபோது, ரோஹித் சர்மா துரதிருஷ்டவசமாக மேக்ஸ்வெல் வீசிய பந்தில் அவரிடமே கேட்ச் கொடுத்து வெளியேறினார். அவர் 57 பந்துகளில் 5 பவுண்டரிகள், 6 சிக்ஸர்கள் உடன் 81 ரன்களை குவித்தார். 

விராட் அரைசதம்

இதையடுத்து, ஷ்ரேயாஸ் உடன் 62 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த விராட் கோலி, மேக்ஸ்வெல் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அவர் 61 பந்துகளில் 1 சிக்ஸர், 5 பவுண்டரிகள் என 56 ரன்களை எடுத்திருந்தார். அடுத்து வந்த ராகுல், ஷ்ரேயாஸ் உடன் இணைந்து சற்று நிதானம் காட்டினார். இவர்கள் பொறுப்புடன் ஆடி இந்தியாவை நல்ல நிலைக்கு எடுத்துச் செல்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.

சொதப்பிய மிடில்-ஆர்டர்

ராகுல் இடதுகை வேகப் பந்துவீச்சாளர் ஸ்டார்க்கிடம் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். மேலும், ஷ்ரேயாஸ் அரைசதத்தை நோக்கி சென்றபோது, சற்று மெதுவாக ரன்களை எடுக்க தொடங்கினார். இருப்பினும், ஆட்டத்தை முடித்துக்கொடுப்பார் என எதிர்பார்க்கப்பட்ட சூர்யகுமார் யாதவ் 8 ரன்களில் ஆட்டமிழக்க, ஷ்ரேயாஸ் 48 ரன்களில் வீழ்ந்தார். கடைசி கட்டத்தில் ஜடேஜா மட்டும் சற்று ரன்களை எடுத்தார். அவரும் 35 ரன்களில் இறுதிக்கட்டத்தில் ஆட்டமிழந்தார். 

டெயிலெண்டர்களும் ஆட்டமிழக்க 49.4 ஓவர்களில் இந்தியா 286 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது. மேக்ஸ்வெல் 4, ஹேசில்வுட் 2, ஸ்ட்ராக், கிரீன், கம்மின்ஸ், தன்வீர் சங்கா ஆகியோர் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர். ஒருநாள் தொடரை இந்தியா 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியிருந்தாலும், தொடரை வைட்வாஷ் செய்ய இயலவில்லை. ஆஸ்திரேலியாவுக்கு எதிராத ஒருமுறை கூட ஒருநாள் தொடரை வைட்வாஷ் செய்ய முடியாத இந்தியாவின் சோகக் கதை இன்றும் தொடர்ந்தது. மேலும், தொடர் நாயகன் விருதை சுப்மான் கில்லும், ஆட்ட நாயகனாக மேக்ஸ்வெல்லும் தேர்வானார்கள்

3RD ODI. Australia Won by 66 Run(s) https://t.co/H0AW9UXI5Y #INDvAUS @IDFCFIRSTBank

— BCCI (@BCCI) September 27, 2023

தோல்விக்கான காரணங்கள்…

ரோஹித் ஓப்பனிங்கில் நன்றாக ஆடினாலும் வாஷிங்டன் சுந்தர் தொடக்க ஓவர்களில் சொதப்பியது இந்திய அணிக்கு சற்று பின்னடைவை ஏற்படுத்தியது. அதுமட்டுமின்றி ரோஹித் – விராட் ஆகியோர் ரன்களை குவிப்பதில் இன்னும் வேகத்தை கூட்டியிருக்க வேண்டும், அதுவும் பின்னடைவாக அமைந்தது. ஷ்ரேயாஸ் – கேஎல் ராகுல் இன்று அவர்களின் வேலையை சரிவர செய்யாதது அதிரடியான தொடக்கத்தை பாழாக்கியது எனலாம். 

இது ஒருபுறம் இருக்க, சூர்யகுமார் யாதவ் ஒருநாள் போட்டிக்கு என இன்னும் முழுமையாக தயாராகவில்லை என்பது இன்றும் அவரது ஷாட் செலக்ஷனில் வெளிப்பட்டது. எனவே, இந்திய அணி உலகக் கோப்பையை வெல்ல வேண்டும் என்றால் சரியான காம்பினேஷ் உடன் பிளேயிங் லெவனை தேர்வு செய்தாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இன்று ஆடுகளம் பேட்டிங்கிற்கே சாதகமானது என்பதால் பந்துவீச்சை குறைசொல்வது சரியாக இருக்காது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.