சென்னை: அதிமுகவில் காலியாக இருந்த 5 மாவட்டச் செயலாளர்கள் பதவிக்கு புதிய நிர்வாகிகளை நியமித்து அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். கன்னியாகுமரி மாவட்டச் செயலாளராக முன்னாள் அமைச்சர் தளவாய் சுந்தரம் நியமிக்கப்பட்டுள்ளார்.
அதிமுகவில் காலியாக இருந்த பதவிகளுக்கு புதிதாக நிர்வாகிகளை நியமித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். அதிமுகவில் இருந்து ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் வெளியேறிய நிலையில், அதிமுகவில் கன்னியாகுமரி, தேனி, பெரம்பலூர், தஞ்சை உள்பட சில மாவட்டச் செயலாளர் பதவிகள் காலியாக இருந்து வந்தன. இந்நிலையில், அந்தப் பதவிகளுக்கு புதிய நிர்வாகிகளை நியமித்து எடப்பாடி பழனிசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன்படி கன்னியாகுமரி (கிழக்கு) மாவட்டச் செயலாளராக முன்னாள் அமைச்சர் தளவாய் சுந்தரம் நியமிக்கப்பட்டுள்ளார்.
திருச்சி மாநகர் மாவட்டச் செயலாளராக, முன்னாள் துணை மேயர் சீனிவாசன் புதிய மாவட்டச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். பெரம்பலூர் மாவட்டச் செயலாளராக முன்னாள் எம்எல்ஏ இளம்பை தமிழ்ச்செல்வன் நியமிக்கப்பட்டுள்ளார். தஞ்சாவூர் (கிழக்கு) மாவட்டச் செயலாளராக முன்னாள் எம்எல்ஏ ராமநாதன் நியமிக்கப்பட்டுள்ளார். தஞ்சாவூர் (மத்திய) மாவட்டச் செயலாளராக சரவணன் நியமிக்கப்பட்டுள்ளார்.
அதிமுகவின் அமைப்புச் செயலாளராக முன்னாள் எம்.பி. அன்வர் ராஜா, முன்னாள் அரசு தலைமை கொறடா மனோகரன், ராயபுரம் மனோ உள்ளிட்ட 7 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். அதிமுக வழக்கறிஞர் பிரிவு செயலாளராக முன்னாள் எம்எல்ஏ இன்பதுரை, கட்சியின் கொள்கை பரப்பு இணைச் செயலாளராக விந்தியா, மருத்துவ அணி இணைச் செயலாளராக முன்னாள் எம்எல்ஏ டாக்டர் சரவணன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அதேபோல், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டச் செயலாளர்கள் பொறுப்பில் ஏற்கெனவே இருந்த நிர்வாகிகள் விடுவிக்கப்பட்டு, புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு பல்வேறு காலியாக இருந்த கட்சிப் பொறுப்புகளுக்கு புதிய நிர்வாகிகளை நியமித்து எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.