கலிபோர்னியா: டெக் உலகின் சாம்ராட் ஆக வலம் வரும் கூகுள் நிறுவனம் 25 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இந்நேரத்தில் கால் நூற்றாண்டு காலமாக தங்களுடன் பயணித்தப் பயனர்களுக்கு கூகுள் நன்றி தெரிவித்துள்ளது.
கடந்த 1996-ல் முனைவர் பட்ட ஆய்வு பணியாக தொடங்கப்பட்டது கூகுள். லாரி பேஜ் மற்றும் செர்ஜி பிரின் இணைந்து மேற்கொண்ட முயற்சி அது. வேர்ல்ட் வைட் வெப்பை அக்சஸபிள் இடமாக மாற்றும் நோக்கத்துடன் கூகுள் பயணம் தொடங்கியது. அவர்கள் இருவரும் கூகுள் தேடு பொறியின் மாதிரியை உருவாக்கினர். தொடர்ந்து அவர்கள் அதில் முன்னேற்றம் காண கடந்த 1998, செப். 27-ம் தேதி அன்று கூகுளின் முதல் அலுவலகத்தை நிறுவினர். இன்று ஒட்டுமொத்த உலகமும் இணையத்தில் ஏதேனும் தேடுவது என்றால் நேரடியாக கூகுளை நாடுவது வழக்கம். அந்த அளவுக்கு அதன் பயன்பாடு உள்ளது.
கூகுள் சேர்ச் என்பதை கடந்து ஜிமெயில், கூகுள் மேப்ஸ், கூகுள் குரோம், யூடியூப், ஆண்ட்ராய்டு இயங்குதளம், கூகுள் டிரைவ், கூகுள் டிரான்ஸ்லேட், கூகுள் லென்ஸ், கூகுள் அசிஸ்டண்ட், பார்ட் ஏஐ என தொழில்நுட்பம் சார்ந்து பல்வேறு சேவைகளை கூகுள் வழங்கி வருகிறது. உலக அளவில் அதிக பார்வைகளைப் பெற்ற தளங்களாக கூகுள் மற்றும் யூடியூப் அறியப்படுகின்றன. சுமார் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் நேரடியாக கூகுள் நிறுவனத்தில் பணியாற்றி வருகின்றனர். இதன் சிஇஓ-வாக தமிழரான சுந்தர் பிச்சை இயங்கி வருகிறார்.
இந்தச் சூழலில் கூகுளின் 25-வது ஆண்டை முன்னிட்டு சிறப்பு டூடுல் ஒன்றை வெளியிடப்பட்டுள்ளது. அதில் 1998-ல் கூகுள் அறிமுகமான போது இருந்த லோகோ தொடங்கி படிப்படியாக மாற்றம் கண்ட லோகோக்கள் பகிரப்பட்டுள்ளது. கூகுள் நிறுவனத்துக்கு அண்மைய காலமாக ஜெனரேட்டிவ் ஏஐ பயன்பாடு சங்கடத்தை கொடுத்து வருகிறது. அதனை தனது அனுபவத்தின் மூலம் கூகுள் கடந்து வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
Google Released a new Doodle to mark their 25th birthday.
It’s been 25 years since Google started changing the world… pic.twitter.com/fORXdme4G9
— Saadh Jawwadh (@SaadhJawwadh) September 27, 2023