ராமநாதபுரம்: பாஜக, அதிமுக கூட்டணி பிரிவு என்பது ஒரு நாடகம். அவர்கள் சேர்ந்து வந்தாலும் சரி, தனியாக வந்தாலும் சரி அவர்களை சந்திக்க திமுக தயாராக உள்ளது என அமைச்சர் ஆர்.எஸ்.ராஜ கண்ணப்பன் தெரிவித்தார்.
ராமநாதபுரம் மாவட்ட திமுக இளைஞரணி செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் தலைமை வகித்தார். திமுக மாவட்டச் செயலாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ., மாவட்ட பொருளாளர் முருகேசன் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தார். இளைஞரணி மாவட்ட அமைப்பாளர் சம்பத் ராஜா வரவேற்றார்.
அமைச்சர் ராஜகண்ணப்பன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஒரு வண்டியில் பூட்டிய இரண்டு மாடுகளை போன்று கட்சியும், ஆட்சியும் ஒரே சீராகச் செல்ல வேண்டும். அதனை முதல்வர் ஸ்டாலின் சிறப்பாக நடத்திக் கொண்டிருக்கிறார். திமுகவை யாராலும் வீழ்த்த முடியாது. அண்ணாமலையால் ஒன்றும் செய்ய முடியாது. பாஜக, அதிமுக கூட்டணி பிரிவு என்பது ஒரு நாடகம்.
அதைப் பற்றி கருத்துச் சொல்வதற்கு ஒன்றுமில்லை. அவர்கள் சேர்ந்து வந்தாலும் சரி, தனியாக வந்தாலும் சரி அவர்களைச் சந்திக்க திமுக தயார் என்று கூறினார்.