மாஞ்சோலை: மின்சாரம் இல்லாத மலை வாழ்க்கை; டார்ச் லைட், பேட்டரி காலம் |1349/2 எனும் நான்|பகுதி 29

“சொர்க்கம்” என்ற கற்பிதத்தில், மின்சாரம் மட்டும் இல்லாவிட்டால், அதனைத் திரும்பிக்கூட பார்க்க தயாரில்லாத இன்றைய ஆண்டிராய்ட் / ஆப்பிள் தலைமுறையினரால், மின்சாரம் இல்லா உலகினை நினைத்துக்கூட பார்க்க இயலாது.

ஆனால், ஒப்பீட்டளவில், மின்சாரத்தின் தேவை அதிகமான, மலைப்பகுதியான மாஞ்சோலையில், 1978 வரையிலும் மின்சாரம் இல்லாமல், இருளுக்குள்ளேயே தங்களது வாழக்கையைக் கடத்தினர் எங்கள் முந்தைய தலைமுறையினர்.

என் தாயாரின் தாய்மாமா தாசன் மாஞ்சோலை பகுதியில் திமுக தொழிற்சங்கத் தலைவர். அவரின் தொடர்முயற்சியின் பலனாய், 1978ஆம் ஆண்டு மாஞ்சோலையிலும், 1979ஆம் ஆண்டு இதர எஸ்டேட் பகுதிகளிலுள்ள தொழிலாளர் குடியிருப்புகளுக்கும் மின்சாரம் வந்தது. அவ்வளவு காலமாய் இரவில் இருட்டுக்குள் வாழ்ந்துவந்த எஸ்டேட் மக்கள் தமது வீட்டில் பல்ப் எரிவதை முதன்முதலில் பார்த்ததும், திக்குமுக்காடிப் போனார்கள். கொஞ்ச காலத்திற்கு எஸ்டேட் முழுக்க மின்சாரம் குறித்த பேச்சுதான்.

கோதையாறு

ஓர் ஆண்டுக்கு முன்பாகவே குடியிருப்புகளில் வயரிங் வேலைகள் துவங்கிவிட்டது. அதனால் ஏறத்தாழ ஒரே நேரத்தில் எல்லோருடைய வீட்டிலும் பல்ப் எரிந்தது. அந்த சமயத்தில் ஒவ்வொரு எஸ்டேட்டிலும் இஞ்சின் டிரைவர்கள் உள்பட மின் பணியாளர்களை கம்பெனி நியமித்தது. மாஞ்சோலையில் வேலாயுதம், பிலிப்பு, சீலன், தபசுவேல் போன்றோரும், நாலுமுக்கில் மணி, சுந்தர்ராஜன், கொம்பையா போன்ற தொழிலாளிகளும் நீண்ட காலமாய் எலெக்ட்ரீசியன்களாகப் பணியாற்றினார்கள்.

பாபநாசத்தில் 1942ல் அணை கட்டப்பட்டு, 1944ஆம் ஆண்டு முதல் அங்கு புனல் மின்நிலையம் செயல்படத் தொடங்கியது. எஸ்டேட்டின் ஒருபகுதி எல்கை முடியும் பாபாநாசத்தில் இருந்து, காட்டு வழியே இணைப்பு உருவாக்கப்பட்டு, மாஞ்சோலைக்கு மின்சாரம் கொண்டு வர 34 ஆண்டுகள் ஆனது. கோதையாறு பகுதியில் மின்சாரம் தயாரிக்க ஆரம்பிக்கப்பட்ட பின்னர், மாஞ்சோலை தவிர்த்த இதர பகுதிகளுக்கு, கோதையாறிலிருந்து மின்சாரம் வரத்தொடங்கியது. வீடுகளுக்கு வருவதற்கு கொஞ்சம் முன்னதாகவே, தேயிலைத் தொழிற்சாலைக்கு மின்சாரம் வந்துவிட்டது. மின்சாரம் இல்லாத நேரத்தில், ஜெனரேட்டர் பயன்படுத்தி தேயிலைத் தொழிற்சாலையை இயக்கினார்கள்.

வீட்டுக்கு ஒரு குண்டு பல்பினை கொடுத்தது கம்பெனி. கூடுதல் பல்ப் வேண்டுபவர்கள் வெளியில் வாங்கிக்கொள்ள வேண்டும். அதனால், மின்சாரம் வந்த சமயத்தில், எஸ்டேட் கடைகளில் பல்புகளை வரிசையாக அடுக்கி வைத்திருப்பார்கள். டங்க்ஸ்டன் இழையுடன் கூடிய சாதாரண பல்புகளை பயன்படுத்தி வந்தவர்களுக்கு நடுவே, முழுவதும் வெள்ளையாக இருக்கும் பால் பல்பினை வீட்டில் போட்டிருந்தால், அவருக்கு கொஞ்சம் மவுசு ஜாஸ்தி.

எரியாத குண்டு பல்பின் மூடியைக் கழற்றி, உள்ளே இருக்கும் டங்க்ஸ்டன் இழையை ஒட்டவைத்து மாட்டியிருக்கிறேன். அது மீண்டும் எரிந்தால் குதியாட்டம் தான். 1980களின் பிற்பாதியில் தான் எஸ்டேட்டில் டியூப் லைட் பயன்பாட்டுக்கு வந்தது.

கோதையாறு அணை

எஸ்டேட்டில் தொழிலாளர்கள் / அதிகாரிகள் குடியிருப்புகள், பள்ளிக்கூடம், கேண்டீன் உள்ளிட்ட கட்டிடங்கள் அனைத்தும், நிர்வாகத்தின் பெயரில்தான் பதிவாகி இருக்கும். அதனால் மின் கட்டண அட்டையானது, அந்த வீட்டில் குடியிருக்கும் தொழிலாளியின் பெயரில் இருக்காது. மாறாக, குரூப் மேனேஜர், பிபிடிசி லிமிடெட் என்ற பெயரில் இருக்கும். மின் கட்டணத்தை அந்ததந்த தொழிலாளர்களின் சம்பளத்தில் பிடித்தம் செய்து, மின்சார வாரியத்திற்கு நிர்வாகம் செலுத்திவிடும்.

கிராம, நகர பகுதிகளின் சூழலைப் போலல்ல எஸ்டேட்டின் நிலை. இருட்டிவிட்டால் கண்ணுக்கு ஒன்றுமே புலப்படாது. முற்றிலும் பார்வைத்திறனை இழந்தவர்கள் போலாகி விடுவோம். மின்சார வசதி இல்லாததால், மண்ணெண்ணெய் ஊற்றி எரிக்கும் சிம்னி விளக்கு தான் இரவு நேரத்தில் தொழிலாளர்களுக்கு ஆபத்பாந்தவன். சில தேநீர் கடைகளிலும், கோயில்களிலும் பெட்ரோமாக்ஸ் விளக்கு பயன்பாட்டில் இருக்கும்.

பெட்டிக் கடைகள் மட்டுமே உள்ள எஸ்டேட் பகுதியில் பல சமயங்களில், அத்தியாவசிய பலசரக்கு சாமான்கள் கூட கிடைக்காது. அதனால் அம்மா உள்ளிட்ட பல தொழிலாளர்கள், ஒவ்வொரு மாதமும் சம்பளம் போட்ட ஏழாம் தேதியை அடுத்துவரும் ஞாயிற்றுக்கிழமையில், கீழே கல்லிடை, அம்பை, விகே புரம், நெல்லை என ஏதாவது ஒரு பகுதிக்குப் போய், ஒரு மாதத்துக்குத் தேவையான மளிகை சாமான்கள், காய்கறிகள் வாங்கி வருவார்கள். அவ்வாறு கிளம்பும் முன்னர் எழுதி வைத்துக்கொள்ளும் மளிகை சாமான் பட்டியலில் சின்ன மெழுகுவர்த்தி ஒரு பாக்கெட்டும், பெரிய மெழுகுவர்த்தி இரண்டு பாக்கெட்டும் மாதம் தவறாமல் இடம்பெறும்.

காட்டு வழியாகவே மின்கம்பங்கள் நடப்பட்டு, அதன் மூலமாய் மின்சார ஒயர்கள் கொண்டுவரப் பட்டிருக்கும். எஸ்டேட்டில் வேகமாக காற்று அடிப்பது சாதாரண நிகழ்வு. அவ்வப்போது காற்றில் மரம் சரிந்து மின்கம்பத்தில் விழுந்துவிடும். அதனால் அடிக்கடி மின் இணைப்பு துண்டிக்கப்படும். திரும்ப மின்சாரம் கிடைக்க ரொம்பநேரம் ஆகும். அதிக வேகத்தில் காற்றும், மழையும் இருக்கும் சமயங்களில், இரண்டு மூன்று நாட்கள் கழித்தே மின் இணைப்பு திரும்பக்கிடைக்கும். அந்த சமயத்தில் வெளிச்சத்திற்கு மெழுகுவர்த்தியின் துணையையே பெரும்பாலும் நாடுவோம்.

மது புட்டியில் விளக்கு.jpeg

எஸ்டேட் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தபோது, பப்பு கங்காணி முக்கில் ஒயர் அறுந்து தொங்கிக்கொண்டிருந்த ஒரு காலையில், கடையில் ரவை வாங்கிவிட்டு திரும்ப வந்தபோது, அந்த ஒயரை “என்னது இது” என்று பிடித்த அடுத்த நொடியில் தூக்கி எறியப்பட்டேன். லோ வோல்டேஜோ என்னவோ தூக்கி எறியப்பட்டதைத் தவிர வேறு சேதாரம் எதுவும் இல்லை. நல்லவேளை கையில் இருந்த ரவை பார்சலுக்கும் ஒன்றும் ஆகவில்லை. இல்லையென்றால் வீட்டில் அன்று பூசைதான். தப்பித்தோம் என்று நினைத்துக்கொண்டு வீடு திரும்பினேன். கரண்டு அடித்து நான் டிக்கெட் வாங்கிவிட்டதாக செய்திபரவி, துக்கம் விசாரிக்க வீட்டுக்கு ஆட்கள் வந்தபிறகுதான் வீட்டுக்கு செய்தி தெரிந்தது.

பெரும்பாலும் காலி சாராய புட்டிகள் எஸ்டேட்டில் மண்ணெண்ணெய் விளக்காக உருபெறும். பழைய துணியைக் கிழித்துச் சுருட்டி, திரி போல உருவாக்கி, அந்த புட்டியின் மூடியில் ஒரு ஓட்டை போட்டு, அதன் வழியே உள்ளேவிட்டு விளக்கு உருவாக்குவோம். கண்ணாடி புட்டி என்பதால் அதிலிருக்கும் மண்ணெண்ணெய் அளவினை எளிதாகக் கண்டறியமுடியும்.

1980களின் துவக்கம் வரையிலும் சாராய புட்டி விளக்குகளே வீட்டில் பயன்பாட்டில் இருந்தது. 1980களின் பிற்பகுதியில், சிறியது ஒன்று, கொஞ்சம் பெரியது ஒன்றென இரண்டு வெங்கல மண்ணெண்ணெய் விளக்குகளை வாங்கினோம். மண்ணெண்ணெய் விளக்கு அதிகமாக புகை கக்கும். வீடு சீக்கிரமாகக் கரி பிடிக்கும். குளிருக்குப் பயந்து வீட்டை முழுவதுமாகப் பூட்டி வைத்திருப்போம். அதனால் விளக்கின் புகை கொஞ்ச நேரத்தில் வீடு முழுக்க படர்ந்துவிடும். இருப்பினும், காற்று கொஞ்சம் வேகமாக வந்தால் மெழுகுதிரி அணைந்துவிடும் என்பதால் மின்சாரம் இல்லா இருள் வியாபித்த இரவுகளில் மண்ணெண்ணெய் விளக்கையே பயன்படுத்துவோம்.

டார்ச் லைட்

எஸ்டேட்டில் வசிக்கும் மக்களுக்கு மட்டுமல்ல, மலைப்பகுதிகளில் இரவு தங்கியிருக்கும் வகையில் சுற்றுலா செல்பவர்களுக்கும் தவிர்க்க இயலா தேவைகளில் ஒன்று டார்ச் லைட். ஆண்டில் பெரும்பகுதியும் மழை பெய்துகொண்டே இருக்கும். மழை இல்லா நாட்களிலும் கூட பெரும்பாலும் கரு மேகங்கள் சூழ்ந்து இருக்கும். அதனால் இரவு நேரத்தில், வீட்டிலிருந்து வெளியில் போக வேண்டுமென்றால், டார்ச் லைட் அத்தியாவசியத் தேவை. ஆனால் ஆரம்பத்தில் அதிகாரிகளிடம் மட்டுமே டார்ச்லைட் இருந்தது. பிற்பாடு தொழிலாளர்கள் மத்தியிலும் புழக்கத்திற்கு வந்தது. பெரும்பாலானோர் இரண்டு பேட்டரி கட்டைகள் கொண்டதும், சிலர் மூன்று பேட்டரி கட்டைகள் போடும் பெரிய டார்ச் லைட்டும் வைத்திருப்பார்கள்.

எஸ்டேட்டில் இருந்து வெளிநாட்டுக்கு வேலைக்குச் சென்ற சில மலையாளிகள் மூலமாகவும், வெளிநாட்டுக்குச் சென்று திரும்பிய அவர்களது சொந்தக்காரர்கள் மூலமாகவும் சார்ஜ் செய்துகொள்ளும் வகையிலான டார்ச் லைட்டுகள் எஸ்டேட்டில் அவதரித்தன. அதுவரையிலும் கட்டை போட்ட டார்ச்சை பயன்படுத்திவந்த நாங்கள், மின்சாரத்தில் சார்ஜ் செய்துகொள்ளும் வகையிலான கையடக்க டார்ச் லைட்டுகளைப் பார்த்து அதிசயித்துப் போனோம்.

டார்ச் லைட்டில் போடும் அதே பேட்டரி கட்டைகளை, அதைப் பயன்படுத்தாத நேரங்களில் கழற்றி, வீட்டிலிருந்த ரேடியோ பெட்டிக்கும் போடுவார்கள். அதனால் பேட்டரி கட்டைகள் அடிக்கடி தீர்ந்து போய்விடும். மட்டுமின்றி, எஸ்டேட்டில் அடிக்கும் குளிருக்கு, தாக்குப்பிடிக்க முடியாமல் பேட்டரி கட்டைகள் அவ்வப்போது செயலிழந்துவிடும்.

பேட்டரி

ஒரு தடவை வீட்டிலிருந்த டார்ச் லைட்டுக்கு, பேட்டரி கட்டைகள் இரண்டும் தீர்ந்துவிட்டன. அப்போது நல்ல மழைக்காலம். எஸ்டேட்டில் இருந்த கடைகளில் எல்லாம் கேட்டுப்பார்த்தோம், எங்கும் பேட்டரி கட்டைகள் கிடைக்கவில்லை. அப்போதுதான் அதனுடைய தேவையினை அதிகமாக உணரமுடிந்தது. அடுத்தமாத சாமான் வாங்கும் பட்டியலில், பேட்டரி கட்டையை முதலில் எழுதியதுடன், கூடுதலாக இரண்டு சேர்த்து எழுதிக்கொண்டோம்.

தீப்பெட்டி, பேட்டரி கட்டைகள், மெழுகுவர்த்தி, மண்ணெண்ணெய் போன்ற அத்தியாவசிய பொருட்கள் எஸ்டேட் பெட்டிக்கடைகளில் தீர்ந்துவிட்டால், அவைகளை வாங்குவதற்கு, ஒரு மாதகாலம் வரையிலும் காத்திருக்க வேண்டிய நிலை இருக்கும். அதுவரையிலும் அவரது வீட்டில் வானொலி கேட்காது, இரவு நேரத்தில் இருட்டுக்குள் வேலை செய்தாகவேண்டும். இரவில் வெளியில் செல்லும்போது பல்வேறு சங்கடங்களை எதிர்கொள்ள வேண்டும். அது போன்ற தருணங்களில் அக்கம்பக்கத்தினர் உதவுவர்.

இரவு வேளையில் டார்ச் லைட் இருந்தால், தைரியமாக வெளியே செல்லலாம். காரணம் வீட்டருகே இருந்த தோட்டங்களில் உள்ள காய்கறிகளைத் தின்பதற்காக இரவு வேளைகளில் யானை, காட்டுப்பன்றி போன்ற காட்டு விலங்குகள் அடிக்கடி வந்துசெல்லும். விலங்குகள் ஏதேனும் இருக்கிறதா என்று டார்ச்லைட் அடித்துப்பார்த்து உறுதிசெய்த பிறகுதான் அச்சமின்றி போகமுடியும்.

மின்சாரம் வந்த சில ஆண்டுகளுக்குப் பின்னர் லயத்திற்கு ஒன்றெனவும், முக்கியமான சந்திப்புகளிலும் மின்கம்பம் நடப்பட்டு பொதுவெளியில் மின் விளக்குகள் பொறுத்தப்பட்டன. மின்சாரம் வந்தபிறகே வானொலியும், டேப் ரிக்கார்டரும், தொலைக்காட்சியும் எஸ்டேட்டுக்கு வந்தன.

மின்சாரம் காரணமாக இரவிலும் கல்வி கற்க முடிந்தது. வெளியில் செல்ல அச்சம் நீங்கியது. எஸ்டேட் வாழ் மக்களின் வாழ்வு கொஞ்சம் கொஞ்சமாக பிரகாசமானது.

படங்கள்: படங்கள்: மாஞ்சோலை செல்வகுமார், கார்த்திக், சுஹைல் அஹமது, அருண் பாஸ், இராபர்ட் சந்திர குமார்

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.