கனவு -124 | `நெல்லிக்காய் மிட்டாய் முதல் மீன் உணவு வரை…' | விருதுநகர் வளமும் வாய்ப்பும்!

குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள்
(MSME – Micro, Small and Medium Enterprises):

விருதுநகர் மாவட்டத்தின் வளங்களில் ஒன்றான சூர்யகாந்தி விதையிலிருந்து பெறப்படும் புண்ணாக்கிலிருந்து, மீன்களுக்கான உணவைத் (Sunflower Seed Fish Food) தயாரிக்கலாம். இது ஓர் உயர் புரத உணவு என்பதால் மீன்களின் வளர்ச்சிக்கு பெரிதும் உதவும். கொழுப்பு அமிலங்களில் ஒன்றான லினோலிக் அமிலம் (Linoleic acid) இந்தப் புண்ணாக்கில் அடங்கியுள்ளதால், மீன்கள் இதை உண்ணும்போது, அவற்றுக்குத் தேவையான ஆற்றல் கிடைக்கும். மேலும், வைட்டமின் ஈ, செலினியம் (selenium) போன்ற ஊட்டசத்துகளும் அடங்கியிருப்பதால், மீன்களின் நோய் எதிர்ப்புச் சக்தியும் அதிகரிக்கும். இதனால், மீன்கள் ஆரோக்கியமாக வளர்வதுடன், ஒமேகா 3 கொழுப்பு அமிலமும் அதிகரிக்கும். அதோடு, மீன் முட்டை உற்பத்தியை அதிகரிக்க உதவுவதால், மீன்கள் இனப்பெருக்கமும் அதிகரிக்கலாம்.

ஒரு கிலோ சூர்யகாந்தி விதையிலிருந்து எண்ணெய்யைத் தனியாகப் பிரித்தெடுத்த பின்னர், சுமார் 700 கிராம் அளவுக்கு சூர்யகாந்தி புண்ணாக்கு கிடைக்கும். இதில் மீன் எண்ணெய், தண்ணீர், பைன்டர் (Binder) ஆகியவற்றை ஒன்றாகச் சேர்த்து பேஸ்ட்டாக மாற்றிக் (Paste) கொள்ள வேண்டும். பைன்டர் என்பது சாந்தன் கம் (Xanthan Gum) எனும் இயற்கையான பிஸின் வகையைச் சேர்ந்தது. இது உணவுப்பொருள்களை ஒன்றோடு ஒன்று கலந்திருக்க பயன்படுத்தப்படுகிறது. இந்தப் பைன்டரானது சோளத்திலிருந்து உருவாக்கப்படுகிறது.

தயாரிக்கப்பட்ட பேஸ்ட்டை, மீன்கள் உண்ணும் அளவுக்கு சிறு சிறு உருண்டைகளாக உருட்டி, அவற்றை உலர்த்தி பின்னர் பாக்கெட், டப்பாக்களில் அடைத்து விற்கலாம் என்பதால், இதற்கான தொழிற்சாலை ஒன்றை விருதுநகர் மாவட்டத்தில் அமைக்கலாம்.

விருதுநகர் மாவட்டத்தில் திருச்சுளி, சிவகாசி, ஸ்ரீவில்லிப்புத்தூர் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமார் 20,000 ஏக்கர் பரப்பளவில் சூர்யகாந்தி பயிரிடப்படுகிறது. ஏக்கர் ஒன்றுக்கு ஒன்றரை டன் வீதம் ஆண்டொன்றுக்கு ஏறக்குறைய 30,000 டன் அளவுக்கு மகசூல் கிடைக்கிறது. இவற்றிலிருந்து சூர்யகாந்தி எண்ணெய் தயாரிக்கும் நிறுவனங்கள் விருதுநகர் மாவட்டத்தில் ஏராளமாக இருக்கின்றன. இங்கே எண்ணெய்யைப் பிரித்தெடுத்த பிறகு, கிடைக்கும் புண்ணாக்கு பெரும்பாலும் கால்நடைத் தீவனங்களுக்கே பயன்படுத்தப்படுகிறது. அதனால், சூர்யகாந்தி எண்ணெய் தயாரிப்பு நிறுவனங்களிடமிருந்து, சுமார் 10 டன் (10,000 கிலோ) அளவுக்கு புண்ணாக்கைப் பெற்று, மீன் உணவையும் தயாரிக்கலாம்.

பொதுவாக, ஒரு கிலோ மீன் உணவு தயாரிக்க, சுமார் 750 கிராம் அளவுக்கு புண்ணாக்கு தேவைப்படும் எனில், 10 டன்னிலிருந்து ஏறக்குறைய 13 டன் (13,000 கிலோ) அளவுக்கு மீன் உணவை உருவாக்கி, 100 கிராம் அளவுள்ள ஒரு பாக்கெட்களில் 80 ரூபாய் என விலை நிர்ணயம் செய்து, விற்பனை செய்தால், ஆண்டொன்றுக்கு சுமார் 1 கோடி ரூபாய் அளவுக்கு வருமானம் பெறலாம்.

விருதுநகர் மாவட்டத்திலுள்ள அருப்புக்கோட்டையை சேர்ந்தவர் நவிராஜன். இவர் நெல்லிக்காயை மதிப்புக்கூட்டி நெல்லிக்காய் மிட்டாய் தயாரித்து, உள்ளுர், வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து, லாபம் ஈட்டி வருகிறார். அவரிடம் பேசினோம்.

“இளம் வயதிலிருந்தே ஒரு தொழில்முனைவோர் ஆகணும்கிறதுதான் என்னோட கனவு. அந்தக் கனவு நிறைவேற்றிக்கொள்ள எனக்கு ஒரு வாய்ப்பு 2014-ம் ஆண்டில் அமைந்தது. எங்கள் ஊருக்கு அருகிலுள்ள கோயிலாங்குளத்தூரில் வேளாண் அறிவியல் நிலையம் இருக்கிறது. அங்கே நெல்லிக்காய், சப்போட்டா, கொய்யா, சிறுதானியங்கள் போன்ற பொருள்களை மதிப்புக்கூட்டி, வருமானம் ஈட்டுவது குறித்த பயிற்சிக்கு ஏற்பாடு செய்திருந்தார்கள்.

அந்தப் பயிற்சி வகுப்பில் சேர்ந்து, பயிற்சிகளை முடித்த கையோடு நெல்லிக்காயை மதிப்புக்கூட்டி விதை நீக்கிய தேன் நெல்லி தயாரிக்க ஆரம்பித்தேன்.

அதன் தொடர்ச்சியாக உருவாக்கினதுதான் நெல்லிக்காய் மிட்டாய். வழக்கமாக, நெல்லிக்காய்க்கு ஷெல்ப் லைஃப் (Shelf life) கிடையாது. அதாவது, சீக்கிரம் நெல்லிக்காய் அழுகிப்போய்விடும். ஆனால், அதனை மிட்டாயாக மாற்றும்போது, சுமார் ஒரு வருட காலம் வரை கெட்டுப்போகச் செய்யாமல், அதன் ஷெல்ப் லைஃபை நீட்டிக்கலாம். எங்களது தயாரிப்பான இந்த நெல்லி மிட்டாய்க்கு வாடிக்கையாளர்களில்டம் நல்ல வரவேற்பு கிடைக்க ஆரம்பித்திருக்கிறது. அதன் தயாரிப்பு முறையை அடுத்த தலைமுறையினரிடமும் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற நோக்கத்தில், பள்ளி, கல்லூரிகளில் இறுதியாண்டு படிக்கும் மாணவர்களுக்கும் நெல்லி மிட்டாய் தயாரிப்பது குறித்து பயிற்சி அளிக்கிறோம்.

விவசாயப் பொருள்களை மதிப்புக்கூட்டல் செய்வதன் வழியாக, அந்தப் பொருளின் மதிப்பைப் பன்மடங்கு அதிகரிக்கலாம் என்பதை அவர்களும் புரிந்துகொண்டு, தங்களின் குடும்ப உறுப்பினர்கள் உதவியுடன் தயாரித்து வழங்குகிறார்கள். இதை இன்னும் பெரிய அளவில் விரிவுப்படுத்த வேண்டும் என்ற கனவுடன் அதற்கான முயற்சிகளில் இறங்கியிருக்கிறோம்” என்றார். அவரது முயற்சி வெல்லட்டும். வாழ்த்துவோம்!

நம் அடுத்த `கனவு’ சிவகங்கை

(இன்னும் காண்போம்)

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.