திருவாரூர்: கோட்டூர் ஒன்றியம் விக்கிரபாண்டியம் ஊராட்சியில் பிரதமர் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டு வரும் வீடுகள் பாதியிலேயே நிற்பதால் பயனாளிகள் அவதியடைந்துள்ளனர். திருவாரூர் மாவட்டம் கோட்டூர் ஒன்றியம் விக்கிர பாண்டியம் ஊராட்சியைச் சேர்ந்த 19 பேருக்கு பிரதமர்வீடு கட்டும் திட்டத்தின் கீழ் கடந்த 2019-20-ம் நிதியாண்டில் வீடுகள் கட்டித் தர ஊராட்சி நிர்வாகத்தின் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டது. ரூ.2 லட்சத்து 65 ஆயிரம் மதிப்பில் கட்டப்படும் இந்த தொகுப்பு வீடுகளை பயனாளிகளே கட்டிக் கொள்ள வேண்டும்.
இதில், வீடு கட்டுவதில் முன் அனுபவம் இல்லாத பொதுமக்களுக்கு உதவும் நோக்கத்தில், ஊராட்சி ஒன்றியத்தின் மேற்பார்வையில் ஒப்பந்ததாரர் நியமிக்கப்பட்டு, அவர் மூலமாக வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், விக்கிரபாண்டியம் கிராமத்தில் தனலட்சுமி, முத்துலட்சுமி, அஞ்சம்மாள், நாகம்மாள் உட்பட 19 பயனாளிகளுக்கு ஒப்பந்ததாரர் மூலம் வீடு கட்டும் பணிகள் நடைபெற்று வந்தன. ஆனால், அவர் அந்தப் பணியை பாதியிலேயே விட்டுவிட்டதால், பயனாளிகள் அவதியடைந்துள்ளனர்.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட பயனாளி நாகம்மாள், தனலட்சுமி ஆகியோர் கூறியது: எங்களுக்கு கட்டிக் கொடுக்கப்படும் தொகுப்பு வீட்டின் பணிகள் கடந்த பல மாதங்களாக பாதியிலேயே உள்ளன. இன்னும் தரைத்தளம் போடவில்லை. சிமென்ட் பூச்சு பூசவில்லை. கதவு, ஜன்னல் உட்பட எந்த வசதியும் செய்து தரப்படவில்லை.
மேலும், மழைக் காலங்களில் வீட்டுக்குள் மழை நீர் கசிகிறது. இதுகுறித்து கோட்டூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும், ஊராட்சி மன்ற அலுவலகத்திலும் புகார் தெரிவித்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றனர். இதனால் பலர் புதிதாக வீடு கட்டுவதற்காக தாங்கள் இருந்த வீட்டையும் இடித்துவிட்டதால், தங்க வசதியின்றி வீதியில் வசிக்கும் பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து கோட்டூர் வட்டார வளர்ச்சி அலுவலர் மாலதி கூறியதாவது: மத்திய அரசின் வீடு கட்டும் திட்டத்தின் கீழ், மொத்தம் ரூ.2 லட்சத்து 65 ஆயிரம் திட்ட மதிப்பில் வீடுகள் கட்டிக் கொடுக்கப்படுகின்றன. அந்தத் தொகையில் மத்திய அரசின் தொகையான ரூ.1 லட்சத்து 20 ஆயிரம், கட்டுமானப்பணி தொடங்கியதிலிருந்து 3 தவணைகளாக நடைபெற்ற பணிகளுக்கு ஏற்ப வழங்கப்படுகிறது.
கட்டுமானத்துக்கு தேவையான 75 மூட்டை சிமென்ட், 320 கிலோ இரும்பு கம்பிகள் வழங்கப்படுகின்றன. 100 நாள் வேலை திட்டத்தின் கீழ் 90 நாட்கள் பணி புரிந்ததற்கான செலவு தொகை ரூ. 25 ஆயிரம் வழங்கப்படுகிறது. இது தவிர ரூ.70 ஆயிரம் நிதி வழங்கப்படுகிறது. இவை அனைத்தும் சேர்த்து ரூ.2.65 லட்சம் என கணக்கிடப்பட்டுள்ளது.
இவற்றைக் கொண்டு பயனாளிகளே வீடுகள் கட்டிக் கொள்ள வேண்டும். அவ்வாறு கட்டிக் கொள்ள இயலாதவர்களுக்காக வட்டார வளர்ச்சி அலுவலகத்தின் மூலமாக ஒரு நபரை நியமித்து, அவர் மூலமாக கட்டுமானப் பணிகள் செய்யப்படுகின்றன. அவர்களிடம் பயனாளிகள் தங்களுக்கு ஏற்றவாறு வீடுகளை கட்டித்தர கூறுகிறார்கள். அதற்குரிய தொகையை வழங்குவதில் ஏற்படும் காலதாமதம் காரணமாக சில வீடுகளை விரைவாக முழுமையாக முடிக்க முடியாத நிலை உள்ளது.
குறிப்பாக 100 நாள் வேலை திட்டத்தில், நிதி ஒதுக்கீடு தாமதமாகும் நிலையில், அந்தத்தொகையைப் பெற்று வீடு கட்டுவதற்கு கொடுப்பதற்கு காலதாமதமாகிறது. இதை முறைப்படுத்தி, ஒருங்கிணைத்து விரைவாகவும், முழுமையாகவும் வீடுகளை கட்டித் தர நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.