பட்டாசு  விற்பனை  தொடர்பான விதிகளை கடுமையாக்க நடவடிக்கை எடுத்திடு: அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: “அண்மைக்காலங்களில் பட்டாசு விபத்துகள் அதிகரித்து வரும் நிலையில், அவற்றைத் தடுக்கும் வகையில் பட்டாசு உற்பத்தி, இருப்பு வைத்தல், கையாளுதல், விற்பனை தொடர்பான விதிகளை கடுமையாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக தனது எக்ஸ் தளப்பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே அத்திப்பள்ளி என்ற இடத்தில் பட்டாசுக் கடையில் பட்டாசுகளை இறக்கி வைக்கும் போது ஏற்பட்ட வெடி விபத்தில் 14 பேர் உயிரிழந்தனர்; 15-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவம் பெற்று வருகின்றனர் என்ற செய்தி அறிந்து மிகுந்த வேதனையடைந்தேன். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

விபத்தில் காயமடைந்த அனைவருக்கும் தரமான மருத்துவம் அளிக்கப்படுவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும். காயமடைந்த அனைவரும் விரைவில் முழு நலம் பெற என விருப்பங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அண்மைக்காலங்களில் பட்டாசு விபத்துகள் அதிகரித்து வரும் நிலையில், அவற்றைத் தடுக்கும் வகையில் பட்டாசு உற்பத்தி, இருப்பு வைத்தல், கையாளுதல், விற்பனை தொடர்பான விதிகளை கடுமையாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்” என்று அவர் பதிவிட்டுள்ளார்.

முன்னதாக, ஓசூர் அருகே கர்நாடக மாநில எல்லையான அத்திப்பள்ளியில் உள்ள பட்டாசுக் கடைக்கு கன்டெய்னர் லாரியிலிருந்து வெடிகளை இறக்கியபோது ஏற்பட்ட தீ விபத்தில், தமிழகத்தைச் சேர்ந்த 13 பேர் உயிரிழந்தனர். கடை உரிமையாளர் உள்ளிட்டோர் காயம் அடைந்தனர். மேலும், 11 வாகனங்கள் எரிந்து சேதமடைந்தன.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.