உலகக்கோப்பையில் இந்தியா – ஆஸ்திரேலியா இடையேயான போட்டி சேப்பாக்கம் மைதானத்தில் நடந்து வருகிறது. இந்தப் போட்டியின் போது திடீரென ‘ஜார்வோ’ என்ற பெயரில் ஜெர்சி அணிந்த நபர் மைதானத்துக்குள் ஓடி வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

இந்தியா – ஆஸ்திரேலியா மோதும் இந்தப் போட்டியில் ஆஸ்திரேலியா டாஸை வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது. போட்டி 2 மணிக்கு தொடங்கியது. அதற்கு முன்பாக 1:50 மணிக்கு இரு அணி வீரர்களும் தங்கள் நாட்டின் தேசிய கீததற்காக மைதானத்திற்குள் வந்தனர். மைதானத்தில் கூடியிருந்த 25000 க்கும் அதிகமான ரசிகர்களும் எழுந்து நிற்க தேசிய கீதம் பாடி முடிக்கப்பட்டது. இதற்கடுத்து வீரர்கள் களைந்து செல்லும் சமயத்தில்தான் ‘ஜார்வோ’ என பெயர் பொறிக்கப்பட்டிருந்த இந்திய ஜெர்ஸி அணிந்த அந்த நபர் உள்ளே நுழைந்தார்.

விராட் கோலியை நோக்கி ஓடியவரை பாதுகாவலர்கள் தடுத்து இழுத்து சென்றனர். அப்போதும் அவர் விராட் கோலி மற்றும் சிராஜிடம் எதையோ பேசிவிட்டுதான் சென்றார்.
இதே நபர் இந்திய அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்திருந்த போதும் டெஸ்ட் தொடரின் போது இந்திய ஜெர்சியுடன் மைதானத்துக்குள் புகுந்து சர்ச்சையை கிளப்பினார்.

தன்னை இந்திய அணியின் வீரராக கூறிக்கொண்டு அவர் இவ்வாறான செயல்களில் ஈடுபட்டு வந்தார். இங்கிலாந்தில் யூடியூபராக ஒரு ப்ராங்ஸ்டாராக அறியப்பட்ட அவர், தொடர்ந்து இப்படியான செயல்களில் ஈடுபட ஒரு கட்டத்தில் ரசிகர்கள், வீரர்கள் என அனைத்து தரப்புமே இவரை வேடிக்கையாகவும் நகைப்பாகவும் பார்க்கத் தொடங்கினர். இப்போது உலகக்கோபையில் இந்திய அணி தனது முதல் போட்டியில் களமிறங்கியிருக்கிறது. இங்கேயும் ஜார்வோ வந்துவிட்டார்.

ரசிகர்களுக்கும் பத்திரிகையாளர்களுக்கும் மைதானத்திற்குள் நுழைய கடுமையான கட்டுப்பாடுகள் விதிப்பவர்கள், இதேமாதிரியான நபர்கள் விஷயத்தில் மட்டும் எப்படி அலட்சியமாக இருக்கிறார்கள் எனும் கேள்வியே தொக்கி நிற்கிறது.