"பத்திரமாக வெளியேறிக் கொள்ளுங்கள்" – வடக்கு காசா மக்களுக்கு 3 மணி நேரம் அவகாசம் கொடுத்த இஸ்ரேல் ராணுவம்

டெல் அவிவ்: காசாவில் தாக்குதலைத் தீவிரப்படுத்தியுள்ள இஸ்ரேல் ராணுவம் தொடர்ந்து மக்கள் தெற்குப் பகுதிக்குச் செல்லுமாறு வலியுறுத்தி வருகிறது. இந்நிலையில், இஸ்ரேல் நேரப்படி இன்று காலை 10 மணி முதல் 1 மணி வரை மூன்று மணி நேரம் காசாவின் வடக்கே உள்ளவர்கள் தெற்கு நோக்கிச் செல்ல இஸ்ரேல் அவகாசம் கொடுத்துள்ளது.

இது தொடர்பாக இஸ்ரேல் பாதுகாப்புப் படை தனது எக்ஸ் பக்கத்தில், “உங்களின் பாதுகாப்பும், உங்களது குடும்பத்தினரின் பாதுகாப்பும் மட்டும்தான் முக்கியம். எங்கள் அறிவுரைகளைக் கேட்டு தெற்கே செல்லுங்கள். ஹமாஸ் தலைவர்கள் எல்லோரும் ஏற்கெனவே, அவர்களுடைய குடும்பத்தினரை பாதுகாத்துக் கொண்டுவிட்டனர். அவர்களும் பாதுகாப்பாக இருக்கின்றனர். எனவே நீங்கள் உங்கள் பாதுகாப்பை உறுதி செய்து கொள்ளுங்கள். நாங்கள் குறிப்பிடும் வழித்தடத்தில் சென்று சேருங்கள். அந்த மூன்று மணி நேரத்தில் எவ்வித தாக்குதலும் நடத்தப்படாது” என்று பதிவிட்டுள்ளது.

— Israel Defense Forces (@IDF) October 15, 2023

லெபனான் எல்லைக்கு சீல் வைப்பு: இதற்கிடையில் இஸ்ரேலை நோக்கி லெபனானில் இருந்து ஹெஸ்புல்லா அமைப்பு தாக்குதலைத் தொடங்கியுள்ளது. இதில் இதுவரை இஸ்ரேலைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்ததை ராணுவம் உறுதி செய்துள்ளது. இந்தச் சூழலில் இஸ்ரேல் – லெபனான் எல்லைக்கு ராணுவம் சீல் வைத்துள்ளது. முன்னதாக நேற்று (வெள்ளிக்கிழமை) இஸ்ரேலுக்கு எதிரான போரில் சரியான நேரத்தில் ஹமாஸுக்கு ஆதரவாக சேர முழுமையாக தயாராக இருக்கிறோம் என்று ஈரான் ஆதரவு பெற்ற ஹெஸ்புல்லா அமைப்பு அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

சீன தூதர் கண்டனம்: “காசா மீதான இஸ்ரேலின் தாக்குதல் தற்காப்பு என்பதையும் தாண்டி அரங்கேறிக் கொண்டிருக்கிறது. போரில் ஈடுபட்டுள்ள அனைத்துத் தரப்புகளும் ஆயுதங்களைக் கைவிட்டு பேச்சுவார்த்தைக்குத் திரும்ப வேண்டும்” என்று சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி கூறியுள்ளார்..பாலஸ்தீனப் பிரச்சினையில் ஐ.நா. தலையிட்டு சுமுகத் தீர்வு ஏற்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் சீன வெளியுறவுத் துறை அமைச்சர் கூறியுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.