ஆசியாவின் மிகப்பெரிய மாட்டினமாக அறியப்படும் ( Indian Gaur) இந்திய காட்டுமாடுகள் நீலகிரியில் அதிக எண்ணிக்கையில் காணப்படுகின்றன. காட்டை இழந்து தவிக்கும் காட்டுமாடு மந்தைகள், பல வனப்பகுதிகளை ஒட்டியுள்ள தனியார் தேயிலைத் தோட்டங்களிலும் குடியிருப்புப் பகுதிகளிலும் அதிகம் தென்படுகின்றன. உணவு மற்றும் தண்ணீர் தேடி அலையும் காட்டுமாடுகளால் மனித – காட்டுமாடு எதிர்கொள்ளல்கள் அதிக அளவில் ஏற்படுகின்றன. மேலும், திறந்தவெளி கிணறுகள், கழிவுநீர் தொட்டிகளில் விழுந்து ஏராளமான காட்டுமாடுகள் பரிதாபமாக உயிரிழந்து வருகின்றன.

இந்த நிலையில், நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகிலுள்ள காட்டேரி அணைப்பகுதி சாலையோரத்தில் இன்று காலை காட்டுமாடு ஒன்று இறந்துகிடப்பதைக் கண்ட உள்ளூர் மக்கள், வனத்துறையினருக்குத் தகவல் தெரிவித்திருக்கின்றனர். நிகழ்விடத்துக்கு விரைந்து சென்ற வனத்துறையினர், காட்டுமாடு உயிரிழந்ததை உறுதிசெய்து அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்திருக்கின்றனர். மேலும், இறந்த காட்டுமாட்டின் இடது நெற்றியில் துப்பாக்கி தோட்டா பாய்ந்ததற்கான அடையாளங்கள் இருப்பதாகவும் தெரிவித்திருக்கின்றனர். இரண்டு கால்நடை மருத்துவர்களை வரவழைக்கப்பட்டு, கூறாய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
காட்டுமாடு உயிரிழப்பு குறித்து வனத்துறை அதிகாரிகள், “உயிரிழந்த இந்தக் காட்டுமாட்டுக்கு சுமார் 4 வயது இருக்கலாம். காயம்பட்ட நெற்றியில் கூறாய்வு செய்தபோது உள்ளே தோட்டா ஒன்று இருப்பதைக் கண்டறிந்தோம். துப்பாக்கியின் ரகம் மற்றும் துப்பாக்கிச்சூடு நடத்தியவர்கள் குறித்து கண்டறிய விசாரணை மேற்கொண்டு வருகிறோம்” என்றனர்.

இது குறித்து நம்மிடம் பேசிய சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆர்வலர்கள், “நீலகிரியில் வனவிலங்குகளின் பாதுகாப்பு நாளுக்குநாள் கேள்விக்குறியாகி வருகிறது. கூடலூர் வனக்கோட்டத்தைப் போன்று நீலகிரி கோட்டத்திலும் வனவிலங்கு வேட்டைத் தலைத்தூக்கியிருக்கிறது. இந்தப் போக்கைத் தடுக்க வனத்துறை தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்” என்றனர்.