சென்னை: கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி அரசு மருத்துவர்கள் வரும் 16-ம் தேதி சென்னையில் வெள்ளை அங்கி அணிவகுப்பு பேரணி நடத்தவுள்ளனர்.
தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம், ஜனநாயக தமிழ்நாடு அரசு டாக்டர்கள், அரசு மருத்துவர்கள் மற்றும் பட்டமேற்படிப்பு மருத்துவர்கள் சங்கம், அரசு அனைத்து டாக்டர்கள் சங்கம் உட்பட 8 அரசு மருத்துவர்கள் சங்கங்கள் ஒருங்கிணைந்து அரசு மருத்துவர்கள் சங்கங்களின் கூட்ட மைப்பை தொடங்கியுள்ளன. இந்த கூட்டமைப்பின் ஒருங்கி ணைப்பாளர்கள் கே.செந்தில், பி.பாலகிருஷ்ணன், ஏ.ராமலிங் கம், சி.சுரேந்திரன் உள்ளிட்டோர் சென்னையில் நேற்று செய்தி யாளர்களிடம் கூறியதாவது:
சுகாதாரத் துறை அமைச்சர் தலைமையில் கடந்த செப். 15-ம்தேதி நடந்த உயர்நிலைக் கூட்டத்தில் அனைத்து அரசு டாக்டர்கள் சங்கங்களும் ஒருங்கி ணைந்து கையெழுத்திட்டு, அரசு மருத்துவர்களின் ஊதிய உயர்வுக்காக மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி கொண்டு வந்த அரசாணை 354-ஐ மதிப்பாய்வு செய்ய வலியுறுத்தப்பட்டது.
இந்தக் கூட்டம் நடந்து 2 மாதங்கள் கடந்துவிட்ட போதி லும், அந்த அரசாணையை மதிப்பாய்வு செய்வதில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. அதேநேரம், தற்போதைய அரசு ஊதிய உயர்வுக்காக கொண்டு வந்த அரசாணை 293-ல் சங்கங்கள் கோரிய மாற்றங்களும் இடம்பெறவில்லை.
வருத்தம் அளிக்கிறது: அரசு மருத்துவர்கள் ஒருங்கிணைந்த கோரிக்கைகளை அரசுக்கு அளித்து தங்கள் ஒற்றுமையை வெளிப்படுத்திய பிறகும், அரசு தரப்பில் இருந்து தொடர்ந்து செயல்படாமல் இருப்பது வருத்தம் அளிக்கிறது.
அதனால், கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 16-ம் தேதி சென்னை அண்ணாசாலையில் உள்ள அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை வளாகத்தில் அமைந்துள்ள கருணாநிதி சிலை முன்பு வெள்ளை அங்கி அணிவகுப்பு பேரணி நடத்துவது என்று அரசு மருத்துவர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற் றப்பட்டுள்ளது. இவ்வாறு தெரிவித்தனர்.