Joe Biden – Xi Jinping hopes bilateral friendship should not derail | இரு தரப்பு நட்புறவு தடம் புரளக்கூடாது ஜோ பைடன் – ஷீ ஜின்பிங் நம்பிக்கை

வுட்சைட்ஓராண்டுக்குப் பின் நேரில் சந்தித்து பேசிய, அமெரிக்க அதிபர் ஜோ பைடன், சீன அதிபர் ஷீ ஜின்பிங் ஆகியோர், இரு தரப்பு உறவு தடம் புரளாமல் இருப்பதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள ஒப்புக் கொண்டனர்.

அமெரிக்கா, சீனா இடையேயான உறவு கடந்த ஓராண்டுக்கு மேலாக மிகவும் மோசமான நிலையில் உள்ளது. ஏற்கனவே வர்த்தகம், பொருளாதார விவகாரங்களில் இரு நாடுகளுக்கும் இடையே போட்டி இருந்து வந்தது.

ஆசிய நாடான தைவானை, தங்கள் நாட்டின் ஒரு பகுதியாக சீனா கூறி வருகிறது. அதனுடன் எந்த நாடும் துாதரக உறவு வைத்துக் கொள்வதற்கு சீனா எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

இந்நிலையில், அமெரிக்க பார்லிமென்ட் சபாநாயகராக இருந்த நான்சி பெலோசி, இந்த எதிர்ப்பை மீறி, கடந்தாண்டு ஆகஸ்டில், தைவானுக்கு பயணம் செய்தார்.

இதையடுத்து அமெரிக்கா, சீனா இடையேயான உறவில் கடும் பாதிப்பு ஏற்பட்டது.

கடந்தாண்டு நவம்பரில் நடந்த, ஜி – 20 மாநாட்டின்போது ஜோ பைடன் மற்றும் ஜின்பிங் நேரில் சந்தித்தனர். அதன்பின், இருவரும் சந்திக்கவில்லை.

இந்த சூழ்நிலையில், இரு தரப்பு உறவைத் தொடரும் வகையில் பேச்சு நடத்துவதற்கு ஜின்பிங்குக்கு, ஜோ பைடன் அழைப்பு விடுத்தார். மேலும் அமெரிக்காவில் நடக்கும் ஆசியா – பசிபிக் பொருளாதார மாநாட்டில் பங்கேற்கும்படியும் அழைப்பு விடுத்தார்.

இதன்படி அமெரிக்காவுக்கு சென்றுள்ள ஜின்பிங், ஆசியா – பசிபிக் பொருளாதார மாநாட்டில் நேற்று பங்கேற்றார். இதைத் தொடர்ந்து, கலிபோர்னியா மாகாணத்தின் சான் பிரான்சிஸ்கோ அருகே உள்ள வுட்சைட் பகுதியில் உள்ள பிரமாண்ட மாளிகையில் இருவரும் சந்தித்து பேசினர்.

தனியாக இருவரும் சிறிது நேரம் பேசினர். பின்னர் அங்குள்ள பூங்காவில் சிறிது துாரம் இருவரும் தனியாக நடந்து சென்று பேசிக் கொண்டனர். இதன்பின் மூத்த அமைச்சர்கள், அதிகாரிகள் அடங்கிய குழுக்களுடன், இரு தலைவர்களும் பேசினர்.

இந்த பேச்சின்போது இரு தரப்பு உறவுகள், பல்வேறு சர்வதேச விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இரு தலைவர்களும் தங்களுடைய தரப்பு வாதங்களை முன்வைத்தனர்.

நான்கு மணி நேரம் நடந்த இந்த சந்திப்பில், இரு நாட்டுக்கும் இடையேயான உறவுகள் தடம் புரளாமல், சமாளிக்கக் கூடிய அளவில் இருப்பதை உறுதி செய்யும் நடவடிக்கைகள் எடுக்க இரு தலைவர்களும் ஒப்புக் கொண்டனர்.

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணம் சான்பிரான்சிஸ்கோ நகர் அருகே உள்ள பிரமாண்ட மாளிகையின் பூங்காவில், மனம் விட்டு பேசியபடி நடந்து சென்ற சீன அதிபர் ஷீ ஜின்பிங், அமெரிக்க அதிபர் ஜோ பைடன்.

‘ஜின்பிங் சர்வாதிகாரி’

அமெரிக்கா, சீனா இடையேயான உறவு மோசமான நிலையில் இருந்தது. கடந்த ஜூன் மாதம் ஒரு நிகழ்ச்சியில் பேசும்போது, ஜின்பிங்கை சர்வாதிகாரி என்று ஜோ பைடன் குறிப்பிட்டார்.இந்நிலையில், ஜின்பிங்கை அவர் நேற்று சந்தித்தார். அப்போது இது குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த ஜோ பைடன், ”ஆமாம், அவர் சர்வாதிகாரிதான். மற்ற நாடுகளைப் போல் அல்லாமல், வித்தியாசமான அரசை கொண்டுள்ள கம்யூனிஸ்ட் நாட்டை வழிநடத்தும் தலைவர் என்ற அர்த்தம் கொள்ள வேண்டும்,” என, குறிப்பிட்டார்.

நகைச்சுவை பேச்சு!

ஜின்பிங் உடனான சந்திப்பின்போது, அடுத்த வாரத்தில் ஜின்பிங்கின் மனைவிக்கு பிறந்தநாள் வருவதால், அவருக்கு தன் வாழ்த்தை தெரிவிக்கும்படி ஜோ பைடன் குறிப்பிட்டார். அதற்கு, ”நல்லவேளை நான் மறந்தே போய்விட்டேன். நினைவூட்டியதற்கு நன்றி,” என, ஜின்பிங் குறிப்பிட்டார். இதையடுத்து இரு தலைவர்களும் குலுங்கி குலுங்கி சிரித்தனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.