உலகக்கோப்பைத் தொடரில் நியூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி 70 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறி இருக்கிறது.
அந்தப் போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி, தனது 50வது சதத்தைப் பதிவு செய்து அசத்தியிருந்தார். இதன் மூலம் உலக அரங்கில் அதிக சதங்கள் விளாசிய சச்சினின் சாதனையை முறியடித்திருக்கிறார். ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் 50 சதங்களை எட்டிய முதல் வீரர் என்ற பெருமையையும் கோலி பெற்றிருக்கிறார். இந்த மைல்கல் சாதனையை விராட் கோலி தனது 279-வது இன்னிங்ஸில் நிகழ்த்தியிருக்கிறார். சச்சினின் சாதனையை கோலி முறியடித்தது போலவே கோலியின் இந்த 50 சதங்கள் சாதனையை யாரால் முறியடிக்க முடியும் என்பது குறித்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரரான கம்ரான் அக்மல் கருத்து தெரிவித்திருக்கிறார்.

இதுகுறித்து பேசிய அவர், “டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களால்தான் விராட் கோலியின் ரெக்கார்ட்டை முறியடிக்க முடியும். மிடில் ஆர்டர் பேட்டர்களால் இதை முறியடிக்க முடியாது. அந்த வகையில் பாகிஸ்தான் வீரர் பாபர் அசாம், மற்றும் இந்திய வீரர் சுப்மன் கில் இந்த இரு வீரர்களால் மட்டுமே கோலியின் சாதனையை முறியடிக்க முடியும்” என்று தெரிவித்திருக்கிறார்.
இது குறித்து உங்களின் கருத்து என்ன? கோலியின் சாதனையை யாரால் முறியடிக்க முடியும்?