"சத்தியம் வாங்கினதுக்காக என்னை சாதிவெறியன்னே வெச்சுக்கோங்க!" – கே.கே.சி பாலு

“சத்தியம் சத்தியமே சின்னமலை சத்தியமே.. கல்யாணம் செய்துக்கிறோம் கவுண்ட வீட்டுப் பையனையே” வள்ளி கும்மி ஆட்டத்தில் சுய சாதியில்தான் திருமணம் செய்துகொள்ளவேண்டும் என்று கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியின் பொருளாளர் கே.கே.சி பாலு சத்தியம் கேட்பதும், இளம்பெண்கள் சத்தியம் செய்யாமல் சிரித்ததும்தான் லேட்டஸ்ட் வைரல்.

`தனக்குப் பிடித்தமான வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுப்பது பெண்களின் உரிமை சார்ந்தது. இதில், பெண்கள்தான் முடிவெடுக்கவேண்டும். பெற்றோருக்கே உரிமையில்லாதபோது, அரசியல் கட்சிகளுக்கும் சாதி சங்கங்களுக்கும் எங்கிருந்து வந்தது இந்த உரிமை?’ என்று சமூக வலைதளங்களில் கொதித்தெழுந்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்துக்கொண்டிருக்கிறார்கள். இந்தச் சூழலில், கே.கே.சி பாலுவிடமே பேசினோம்,

வள்ளி கும்மி ஆட்டத்தில் சத்தியம் கேட்கும் கேகேசி பாலு

“எங்க சாதி ஆண்கள், பெரும்பாலும் வேற சாதியில திருமணம் பண்றது கிடையாது. அப்படியே பண்ணாலும் 40 வயசு வரைக்கும் பொண்ணே கிடைக்காம இருந்தாத்தான், சாதி மாறி திருமணம் செய்துக்கிறாங்க. இப்போல்லாம், திருமணத்துக்கு எங்க சாதியில பொண்ணே கிடைக்குறதில்ல. பத்துக்கு ஏழு பெண்கள் அப்படின்னுதான் இருக்காங்க. பெண் குழந்தைங்க பிறப்பு விகிதமும் குறைஞ்சுட்டு வருது. வேற சாதியில திருமணம் பண்ணிக்கிட்டா, அங்கேயும் திருமணத்துக்கு பொண்ணு பற்றாக்குறை ஏற்படும். அதனாலதான், வள்ளி கும்மி ஆட்டத்துல பெண்கள்கிட்டே சத்தியம் வாங்கினேன். எங்க சாதியிலேயும் நல்ல பசங்க இருக்காங்கன்னு சொல்றேன். அதுவும், இந்த சத்தியத்தை நான் பொதுவான இடங்களில் பெண்கள்கிட்டே வாங்குறது இல்ல. எங்களுக்குன்னு இருக்குற இடங்கள்ல நிகழ்ச்சி நடக்கும்போதுதான் வாங்குறேன்.

அழிஞ்சுக்கிட்டிருக்க வள்ளி கும்மி கலையை நான்தான் மீட்டெடுத்தேன்; தொடர்ந்து வளர்த்துக்கிட்டிருக்கேன். அதனாலதான், பெற்றோரே என்னை சிறப்பு விருந்தினரா அழைச்சு பெண்கள்கிட்டே சத்தியம் வாங்கச் சொல்றாங்க. தாய், தந்தை இடத்துலருந்து ‘சொந்த சாதியிலேயே திருமணம் செய்துக்கணும்’னு சொல்றதுல என்ன தப்பு இருக்கு? எங்க வீட்டுப் பெண்களைகிட்டே சத்தியம் வாங்குறதை அடுத்தவங்க ஏன் விமர்சிக்கணும்? நான் என்ன இந்த சாதியில திருமணம் பண்ணாதீங்க… அந்த சாதியில பண்ணாதீங்கன்னா சொல்லி சத்தியம் வாங்கினேன்?

கே.கே.சி பாலு

திருமணத்துக்கு பெத்தவங்களோட சம்மதம்தான் முக்கியம். அவங்க சம்மதத்தோட கவுண்ட வீட்டுப் பசங்களை கல்யாணம் பண்ணிக்கோங்கன்னு சொல்றேன். என்னோட பேச்சை நிறைய பேர் பாராட்டவும் செய்றாங்களே? ஆனா, இதை சிலர் உள்நோக்கத்தோட விமர்சிக்குறது மட்டுமில்லாம உதயநிதியோடவும் முடிச்சுப் போட்டுப் பேசுறாங்க. அவங்க நோக்கம்தான் என்ன? சத்தியம் வாங்கினதுக்காக எனக்கு எந்தக் குற்றவுணர்வும் இல்லை. முதல்ல, நான் தப்பு பண்ணினதாவே நினைக்கல. என்மேல புகார் கொடுக்கிறவங்க தாராளமா கொடுத்துக்கட்டும். இதுக்கெல்லாம் பணிஞ்சுப்போற ஆள் நான் கிடையாது.

அதுவும், இந்த வீடியோ இப்போதான் வெளில வந்திருக்கு. ஆனா, நான் வருஷக்கணக்கா வள்ளி கும்மி ஆட்டத்தை நடத்திக்கிட்டு வர்றேன். எல்லோரும் இதை ஆணாதிக்கம்னெல்லாம் சொல்றாங்க. அப்படி, சொல்றதை வாபஸ் வாங்கிக்கணும். 2009 வரைக்கும் ஆண்கள் மட்டுமே, வள்ளி கும்மி ஆட்டத்துல கலந்துக்கிட்டாங்க. நான்தான், அதைப் பெண்கள்கிட்டே மாத்திவிட்டேன். பெண்களும் எந்த தயக்கமும் இல்லாம வள்ளி கும்மி ஆடணும்னு நினைச்சது ஆணாதிக்கமா? இதுக்கே, என் சொந்தக் காசுல செலவுப்பண்ணி வர்றவங்களுக்கு சோறுபோட்டு இந்தக் கலையை வளர்த்துட்டு வளர்த்தெடுத்திருக்கேன்.

அதேபோல, எல்லோரும் நான் தேர்தலுக்காக பயன்படுத்திக்கிறேன்னு சொல்றாங்க. அதுல உண்மையில்ல. எங்கக் குல பெருமையை காப்பாத்தறது மட்டும்தான் என் நோக்கம். அதை என் மனசாட்சிக்குட்பட்டு செய்துக்கிட்டு வர்றேன். அதுமட்டுமில்லாம, வள்ளி கும்மியை மத்த சமுதாய மக்களுக்கும் சொல்லிக்கொடுக்கிறேன். யாரையும் நாங்க ஒதுக்கல. என் வீட்டுல, நான் என்ன பண்ணனும்னு மத்தவங்க முடிவு பண்ணக்கூடாது. நான் தான் முடிவு செய்வேன்” என்பவரிடம் “வேறு சாதியில் திருமணம் செய்துகொண்டால், பெண்களுக்கு சொத்துக்களை பிரித்துகொடுக்கவேண்டியிருக்கும் என்பதாலும்தான் இப்படி சத்தியம் வாங்குகிறீர்கள் என்று விமர்சிக்கப்படுகிறதே?” என்றோம்,

வள்ளி கும்மி ஆட்டம்

“ஏன் வேற சாதியில யாரும் சொத்தே வெச்சு இல்லையா? எல்லா சாதியிலேயும்தான் சொத்தைக் காப்பாத்துறாங்க. சொந்த சாதியில கல்யாணம் பண்ணச் சொன்னா, எங்களை மட்டும் சொத்தைக் காப்பாத்துறோம்னு வீண்பழி போடுறாங்க. வள்ளி கும்மி ஒரு வழிபாட்டுக்கலை. இதை வெறும் வழிபாடா மட்டுமில்லாம கலாசார ரீதியாகவும் கொண்டுபோறோம்” என்கிறவரிடம், “நீங்க சத்தியம் கேக்குறீங்க… ஆனா, அந்தப் பெண்கள் சத்தியம் பண்ணலியே? கட்டாயப்படுத்துகிறீர்கள் என்றும் சாதிவெறி ஊட்டுகிறீர்கள் என்றும் விமர்சிக்கிறார்களே?”

அந்த வீடியோவை நல்லாப் பாருங்க. திருமணம்னு சொன்னாலே பொண்ணுங்க வெட்கப்பட்டுக்கிட்டு சிரிச்சுக்கிட்டுத்தானே இருப்பாங்க? அப்படி, வெட்கப்பட்டுத்தான் சத்தியம் பண்ணல. அதுக்கு, மறுத்துட்டாங்கன்னு அர்த்தம் கிடையாது. பெண்கள் முடிவெடுக்க முடியாம தவறிப்போய்டுறாங்க. காதல் கல்யாணம் எல்லாம் பண்ணிக்கிட்டா அனாதையாத்தான் இருக்கணும். அதுக்குதான், முன்கூட்டியே சத்தியம் வாங்குறோம். ஆண்களிடமும் மது, சிகரெட், சூதாட்டம் கூடாதுன்னு சத்தியம் வாங்குறோம். இப்படி பண்றது சாதிவெறியா தெரிஞ்சா தெரிஞ்சா தெரிஞ்சுட்டுப் போகட்டும். என்னை சாதிவெறியன்னே வெச்சுக்கோங்க. அதுப்பத்தி எனக்கு கவலை இல்லை.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.