மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டத்தில் கனமழையால் உயிரிழந்த 39 கால்நடைகள், சேதமடைந்த 150 வீடுகளுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என அமைச்சர் சிவ.வீ.மெய்ய நாதன் தெரிவித்தார்.
வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் மயிலாடுதுறை மாவட்டத்தில் 3 நாட்களாக கனமழை பெய்து வந்த நிலையில், நேற்று மழை பெய்யவில்லை. இந்நிலையில், சீர்காழி வட்டம் நல்லூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை பாதிப்புகள் குறித்து தமிழக சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் நேற்று பார்வையிட்டு, ஆய்வு செய்தார். அப்போது, பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ள வயல்களை பார்வையிட்ட அவர், விவசாயிகள் மற்றும் பொதுமக்களிடம் கோரிக்கைகள், குறைகளைக் கேட்டறிந்தார்.
பின்னர், செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறியது: ”மயிலாடுதுறை மாவட்டம் முழுவதும் 3 நாட்களில் மொத்தம் 16 செ.மீ. மழை பெய்துள்ளது. இதனால், சீர்காழி பகுதியில் 1,088 ஹெக்டேர், கொள்ளிடத்தில் 1,200 ஹெக்டேர், செம்பனார்கோவில் பகுதியில் 600 ஹெக்டேர் பரப்பளவிலான நெல் வயல்களில் தேங்கியிருந்த மழைநீர், தற்போது மழையில்லாததால் வடிந்து வருகிறது. மழையால் 39 கால்நடைகள் உயிரிழந்துள்ளன. 150-க்கும் மேற்பட்ட குடிசை, ஓட்டு வீடுகள் சேதமடைந்துள்ளன.
இது குறித்து ஆட்சியர் ஆய்வு செய்து, நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுத்து வருகிறார். மழை பாதிப்புகள் குறித்துகட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொள்ள இலவச தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. மக்களை பாதுகாப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. வருவாய், தீயணைப்பு, பேரிடர் மீட்பு, காவல் துறையினர் தொடர்ந்து பாதுகாப்பு மற்றும் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
பழைய பாளையம் பகுதியில் உள்ள உப்பனாற்றை ஆழப்படுத்தி, வடிகாலை சீரமைக்க வேண்டும் என்றும், பழைய கதவணைகளை அகற்றி விட்டு, புதிதாக அமைத்துக் கொடுக்க வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 20 நாட்களுக்குள் கதவணைகளை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். மயிலாடுதுறை மாவட்டத்துக்கு கடந்த ஆண்டு ரூ.34 கோடி பயிர்க் காப்பீடு இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டது.
நிகழாண்டு, 68 ஆயிரம் ஹெக்டேரில் சம்பாபயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ள நிலையில், 52 ஆயிரம் ஹெக்டேருக்கு மட்டுமே பயிர்க் காப்பீடு செய்யப்பட்டுள்ளது. தற்போது, பயிர்க் காப்பீடு செய்வதற்கான காலக்கெடு நவ.22-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதால், இதைப் பயன்படுத்தி மீதியுள்ள 16 ஆயிரம் ஹெக்டேருக்கும் விவசாயிகள் பிரீமியம் செலுத்தி பயிர்க் காப்பீடு செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆய்வின் போது எம்.பி செ.ராமலிங்கம், ஆட்சியர் ஏ.பி.மகா பாரதி, எம்.எல்.ஏ எம்.பன்னீர் செல்வம், மாவட்ட வருவாய் அலுவலர் மு.மணி மேகலை, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகளின் திட்ட இயக்குநர் ஸ்ரீலேகா தமிழ்ச்செல்வன், வேளாண்மைத் துறை இணை இயக்குநர் ஜெ.சேகர், நீர்வளத் துறை செயற்பொறியாளர் வே.சண்முகம், சீர்காழி கோட்டாட்சியர் உ.அர்ச்சனா, கொள்ளிடம் ஒன்றியக் குழுத் தலைவர் ஜெயப் பிரகாஷ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.