உத்தரகாசி, உத்தரகண்டில், சுரங்கப் பாதை இடிபாடுகளில் சிக்கியுள்ள, 40 தொழிலாளர்களை மீட்பதற்காக, புதுடில்லியில் இருந்து எடுத்து வரப்பட்ட கனரக துளையிடும் இயந்திரம் வாயிலாக, இடிபாடுகளுக்குள் இரும்பு குழாய்களை செலுத்தும் பணி வேகம் எடுத்துள்ளது.
திட்டமிட்டபடி அனைத்தும் சரியாக நடந்தால், தொழிலாளர்கள் விரைவில் மீட்கப்படுவர் என எதிர்பார்க்கப்படுகிறது.
விமானத்தில் இயந்திரம்
உத்தரகண்டில் சார்தாம் எனப்படும் யமுனோத்ரி, கங்கோத்ரி, கேதார்நாத், பத்ரிநாத் ஆகிய நான்கு முக்கிய ஹிந்து மத வழிபாட்டு தலங்களை இணைக்கும் வகையில் சாலை அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக, பிரம்மகால் – யமுனோத்ரி தேசிய நெடுஞ்சாலையில், சில்க்யாரா மற்றும் தண்டல்காவ்ன் இடையே மலையைக் குடைந்து சுரங்கப் பாதை அமைக்கும் பணி நடந்து வந்தது.
கடந்த 12ம் தேதியன்று சுரங்கப் பாதை அமைக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டிருந்தபோது, திடீரென அதன் ஒரு பகுதி சரிந்து விழுந்தது. இந்த இடிபாடுகளுக்குள், 40 தொழிலாளர்கள் சிக்கினர்.
கடந்த நான்கு நாட்களாக இடிபாடுகளுக்குள் சிக்கி உள்ளவர்களுக்கு தேவையான உணவு, குடிநீர், மருந்துகள், ஆக்சிஜன் உள்ளிட்டவை குழாய் வாயிலாக அளிக்கப்பட்டு வருகின்றன. அவர்கள் நலமுடன் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இடிந்து விழுந்த சுரங்க இடிபாடுகளுக்குள், 3 அடி விட்டம் உடைய இரும்பு குழாய்களை ஒன்றன் பின் ஒன்றாக உள்ளே நுழைத்து, அதன் வழியாக சிக்கியுள்ள தொழிலாளர்களை மீட்கும் நோக்கில், கடந்த 14ம் தேதி, பிரத்யேக இயந்திரம் வரவழைக்கப்பட்டது.
அந்த இரும்பு குழாய்களை இயந்திர உதவியுடன் இடிபாடுகளுக்குள் நுழைக்க முற்பட்டபோது, சுரங்கத்தில் மேலும் விரிசலை உண்டாக்கியது.
சுரங்கத்திலிருந்து விழுந்த இடிபாடுகளால், அந்த இயந்திரமும் சேதமடைந்தது. இதில், மீட்புப் பணியில் ஈடுபட்டு இருந்த இரண்டு பணியாளர்கள் காயம் அடைந்தனர்.
இதையடுத்து பணிகள் உடனடியாக நிறுத்தப்பட்டது. இதைவிட மிகவும் வேகமாக துளையிடக்கூடிய, 25 டன் எடை உடைய அதிநவீன கனரக துளையிடும் இயந்திரம், புதுடில்லியில் இருந்து வரவழைக்கப்பட்டது.
நம் விமானப் படைக்கு சொந்தமான, ‘சி 130 ஹெர்குலஸ்’ விமானத்தில், கனரக இயந்திரத்தின் பாகங்கள் தனித்தனியாக பிரிக்கப்பட்டு உத்தரகாசிக்கு நேற்று முன்தினம் மாலை எடுத்து வரப்பட்டன.
இந்த இயந்திரம் மணிக்கு, 16 அடி வரை துளையிடக்கூடிய திறன் உடையது. இரவோடு இரவாக இந்த இயந்திரம் பொருத்தப்பட்டு, இடிபாடுகளுக்குள், 3 அடி விட்ட இரும்பு குழாயை செலுத்தும்பணி நேற்று காலை துவங்கியது.
கண்காணிப்பு
அப்போது, மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை இணை அமைச்சர் வி.கே.சிங், துளையிடும் பணியை நேற்று நேரில் பார்வையிட்டார்.
மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி கூறியதாவது: புதிகாக வந்துள்ள கனரக துளையிடும் இயந்திரம் தற்போது, 23 அடி வரை துளையிட்டு உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. துளையிடும் பணி வேகமாக நடப்பதால், தொழிலாளர்கள் சிக்கியுள்ள பகுதியை இரும்பு குழாய்கள் விரைவில் சென்றடையும் என எதிர்பார்க்கிறோம்.
இதுபோன்ற மீட்பு பணிகளில் அனுபவம் உள்ள தாய்லாந்து உள்ளிட்ட சர்வதேச நிபுணர்களின் கருத்துக்களையும் கேட்டு பெற்றுள்ளோம். பிரதமர் மோடி மீட்புப்பணிகளை தொடர்ந்து கண்காணித்து வருகிறார்.
உத்தரகண்டில் கட்டப்பட்டு வரும் அனைத்து சுரங்கப்பாதைகளையும் மறுஆய்வு செய்ய மாநில அரசு முடிவு செய்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த இரும்புக் குழாய் இடிபாடுகளுக்குள் முழுவதுமாக செலுத்தப்பட்ட பின், உள்ளே சிக்கியுள்ள, 40 தொழிலாளர்களும் அந்த குழாய் வழியே வெளியே மீட்கப்படுவர்.
திட்டமிட்டபடி பணிகள் நடந்து முடிந்தால், நான்கு நாட்களாக தொடரும் உயிர் போராட்டம் முடிவுக்கு வரும்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்