ஹைதராபாத்: “பாஜகவைப் பொறுத்தவரை தெலங்கானா முதல்வர் கேசிஆர் மிகப் பெரிய ஊழல்வாதி, என்றாலும் அவர் மீது பாஜக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஏனென்றால், அவர்கள் ஒன்றாக இருக்கிறார்கள்” என்று விஜயசாந்தி விமர்சித்துள்ளார். மேலும், தான் காங்கிரஸில் இணைந்தது குறித்து விளக்கமும் அளித்துள்ளார்.
இது குறித்து விஜயசாந்தி கூறுகையில், “பாஜகவும், பிஆர்எஸ் கட்சியும் ஒன்றாக இருப்பதால் நான் காங்கிரஸில் இணைந்துள்ளேன். ஒவ்வொரு முறையும் தெலங்கானாவுக்கு வரும் பாஜக முக்கிய தலைவர்கள் ‘கேசிஆர் ஓர் ஊழல்வாதி, அவரது மகள் மதுபான ஊழலில் குற்றம்சாட்டப்பட்டுள்ளார், பிஆர்எஸ் ஒரு குடும்பக் கட்சி’ என்று கூறுவார்கள். ஆனால், டெல்லிக்குத் திரும்பிச் சென்றதும் பிறத் தலைவர்களின் வீடுகளில் மட்டும் சோதனை நடத்துவார்கள். ஆனால் சிபிஐயோ, அமலாக்கத் துறையோ கேசிஆர் வீட்டுக்கு வராது.
கேசிஆர் சிறையில் அடைக்கப்பட வேண்டும். கேசிஆருக்கு எதிராக இருந்தார் என்பதற்காக பாஜக பண்டி சஞ்சய் குமாரை கட்சியில் இருந்து நீக்கியது. தேர்தலுக்கு நான்கு மாதங்களுக்கு முன்பாக இந்த முடிவினை எடுத்தது அநீதியானது. சஞ்சயின் நீக்கத்தால் பாஜக தனது சொந்தக் கட்சியையே துண்டாடியது. தெலங்கானாவில் பாஜக ஏற்படுத்திய பேரழிவுக்கு நாங்கள் பொறுப்பல்ல” என்று விஜயசாந்தி கூறினார்.
முன்னதாக, பாஜகவில் இருந்து விலகிய நடிகை விஜயசாந்தி, காங்கிரஸில் இணைந்துள்ளார். காங்கிரஸ் தேசிய தலைவர் கார்கே முன்னிலையில் அக்கட்சியில் இணைந்துக் கொண்டார். தென்னிந்திய சினிமாவில் மிகவும் பிரபலமாக திகழ்ந்த நடிகை விஜயசாந்தி, பாஜகவில் தனது அரசியல் பயணத்தை தொடங்கினார். பிறகு தனிக்கட்சி தொடங்கிய அவர், அக்கட்சியை தெலங்கானா ராஷ்டிர சமிதி (டிஆர்எஸ்) கட்சியுடன் இணைத்தார். பிறகு அக்கட்சியை விட்டு வெளியேறி காங்கிரஸில் சேர்ந்தார். இந்நிலையில், கடந்த 2020-ல் மீண்டும் பாஜகவுக்கு திரும்பிய அவர், அக்கட்சியில் தேசிய செயற்குழு உறுப்பினராக செயல்பட்டு வந்தார்.
எனினும், கடந்த ஆண்டு முதலே பாஜகவில் தனக்கு முக்கியத்துவம் கிடைப்பதில்லை என்பதை பொதுவெளியில் பேசிவந்தார். தற்போது பாஜகவில் இருந்து விலகி காங்கிரஸில் இணைந்துள்ளார். தெலங்கானா சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் இரண்டு வாரங்களே உள்ளன. இந்நிலையில், விஜயசாந்தி காங்கிரஸுக்கு சென்றிருப்பது பாஜகவுக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது. ஏனென்றால், இவர் ஒரு மாதத்துக்குள் பாஜகவில் இருந்து விலகிய 4-வது முக்கிய தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது.