புதுடெல்லி: ராஜஸ்தான் சட்டப்பேரவை தேர்தலில் 3 மடங்களின் துறவிகள் பாஜக சார்பில் போட்டியிடுகின்றனர். இத்துடன், ஒரு முஸ்லிம் வேட்பாளருக்கும் வாய்ப்பளிக்காததால் அக்கட்சி, ‘இந்துத்துவா அரசியல்’ செய்வதாகக் கருதப்படுகிறது. இந்துத்துவா கொள்கையை அடிப்படையாகக் கொண்ட கட்சியாகவுள்ள பாஜக தமது கொள்கையை ராஜஸ்தானின் சட்டப்பேரவைத் தேர்தலிலும் கடைப்பிடிக்கிறது.
ராஜஸ்தானில் மடத்தின் தலைவர்களான மூன்று துறவிகளுக்கு போட்டியிட பாஜக வாய்ப்பளித்துள்ளது. இதன் பின்னணியில் அம்மடத் துறவிகளின் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஆதரவும் தமக்கு கிடைக்கும் என்ற பாஜகவின் நம்பிக்கை காரணமாகிவிட்டது. ராஜஸ்தானின் திஜாரா மடத்தின் பாலக்நாத், அழ்வரில் போட்டியிடுகிறார். பிரபல ஹவா மெஹல் மடத்தின் ஆச்சார்யா பால்முகுந்த், ஜெய்பூரில் போட்டியிடுகிறார். போக்ரான் மடத்தின் பிரதாப்புரி அதே தொகுதியில் நிறுத்தப்பட்டுள்ளார்.
இந்த மூன்று துறவிகளுமே அதிக சொத்துகள் கொண்ட செல்வ செழிப்பான மடங்களின் துறவிகள். இவர்களுக்கு அன்றாடம் பக்தர்கள் மூலம் காணிக்கையாக நிதி குவிகின்றது. இந்த மூன்று துறவிகளில் பாலக்நாத்தை எதிர்த்து திஜாரா தொகுதியில் காங்கிரஸ் முஸ்லிமான இம்ரான்கானுக்கு வாய்ப்பளித்துள்ளது. இவர் உ.பி.யின் முன்னாள் முதல்வர் மாயாவதியின் பகுஜன் சமாஜில் இருந்து காங்கிரஸுக்கு வந்தவர்.
ஜெய்சல்மேர் மாவட்டத்தின் போக்ரானில் போட்டியிடும் பாலக்நாத்தை எதிர்த்து காங்கிரஸின் மாநில அமைச்சரான சாலே முகம்மது போட்டியிடுகிறார். 2018 தேர்தலிலும் பாஜகவில் போட்டியிட்ட துறவி பாலக்நாத்தை எதிர்த்த இந்த முகம்மது வெற்றி பெற்றிருந்தார். ஜெய்ப்பூரில் போட்டியிடும் துறவி பால்முகுந்த் தனது பரபரப்பான பேச்சுக்களுக்கு பெயர் போனவர்.
கடந்த முறை பால்முகுந்தை வென்ற தன் கேபினேட் அமைச்சரான மஹேஷ் ஜோஷிக்கு பதிலாக கே.கே.திவாரிக்கு காங்கிரஸ் வாய்ப்பளித்துள்ளது. இந்த மூன்று துறவிகளில் பாலக்நாத் தவிர மற்ற இருவரின் தொகுதிகளில் பாஜக அதிருப்தியாளர்களும் போட்டியில் உள்ளனர்.
ராஜஸ்தானின் பாஜகவில் ஒரே முஸ்லிம் தலைவராக யூனுஸ்கான் இருந்தார். இந்த ஒரு முஸ்லிம் பிரமுகருக்கும் இந்த முறை பாஜக வாய்ப்பளிக்கவில்லை. இதனால், யூனுஸ்கான் சுயேச்சையாக போட்டியிடுகிறார். இதன்மூலம், முஸ்லிம்களுக்கும் பாஜகவில் இனி போட்டியிட வாய்ப்பளிக்கப்படும் என்ற கருத்து தவறானதாகிவிட்டது.
காங்கிரஸில் 15 முஸ்லிம் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதற்கு ராஜஸ்தானில் சுமார் 10 சதவிகித முஸ்லிம்கள் இருப்பதுதான் காரணம். இதுபோல், துறவிகளின் போட்டி பாஜகவில் துவக்கம் முதல் இருந்து வருகிறது. உத்தரப் பிரதேசத்தின் முதல்வராக இருக்கும் யோகி ஆதித்யநாத்தும் ஒரு துறவியே. உபி முதல்வர் யோகியை போல், மேலும் பல துறவிகள் பாஜகவில் முன்னாள் எம்பிக்களாகவும் தற்போதைய எம்பிக்களாகவும் உள்ளனர் என்பது நினைவுகூரத்தக்கது.