மூணாறு:இடுக்கி மாவட்டம் சத்திரத்தில் இருந்து சபரிமலைக்கு வனப்பகுதி வழியாக முதல் நாளான நேற்று 265 பக்தர்கள் நடந்து சென்றனர்.
சபரிமலையில் மண்டல கால பூஜை, மகரவிளக்கு சீசன் துவங்கியதால் இடுக்கி மாவட்டம் சத்திரத்தில் இருந்து பரம்பரை வனப்பாதை வழியாக முதல் நாளான நேற்று 265 ஐயப்ப பக்தர்கள் நடந்து சென்றனர்.
அங்கிருந்து புல்மேடு வழியாக 12 கி.மீ. தொலைவில் சன்னிதானம் உள்ளது. சத்திரத்தில் இருந்து தினமும் காலை 7:00 முதல் மதியம் 2:00 மணி வரை சபரிமலை செல்ல அனுமதிக்கின்றனர். அதே போல் சபரிமலையில் இருந்து சத்திரம் திரும்ப காலை 9:00 முதல் 11:00 மணி வரை மட்டுமே அனுமதியுண்டு.
வசதி குறைவு
சீசன் துவங்கிய நிலையில் சத்திரம், புல்மேடு ஆகிய பகுதிகளில் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் முழுமையாக செய்யப்படவில்லை. அப்பகுதிகளில் ஓட்டல், கழிப்பறைக்கு ஏலத்தொகை அதிகமாக நிர்ணயிக்கப்பட்டதால் யாரும் எடுக்கவில்லை.
வண்டிபெரியாறு ஊராட்சி திசைகளை குறிக்கும் போர்டுகள் வைப்பதற்கும், தற்காலிக கழிப்பறைகள் அமைக்கவும் நேற்று முன்தினம் தான் டெண்டர் வழங்கினர். அதேசமயம் சுகாதாரம், வனம், போலீஸ் ஆகிய துறைகள் சார்பில் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
சத்திரம், புல்மேடு ஆகிய பகுதிகளில் மூன்று மருத்துவ குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. வனத்துறையினர் சத்திரம், புல்மேடு வனப்பாதையை சீரமைத்து தற்காலிக விளக்குகள் அமைத்தனர். வனத்துறை சேவை மையம் தயார் நிலையில் உள்ளதாக அழுதை வனத்துறை அதிகாரி ஜோதிஷ் தெரிவித்தார்.
ஒருவழிப்பாதை
குமுளி, புல்மேடு, வண்டிபெரியாறு, குட்டிக்கானம், பெருவந்தனம், உப்புத்தரா ஆகிய பகுதிகள் ஆறு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு ஒரு இன்ஸ்பெக்டர் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். 44 எஸ்.ஐ.க்கள் உட்பட 273 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவதாக இடுக்கி எஸ்.பி. விஷ்ணுபிரதீப் தெரிவித்தார்.
கட்டப்பனை, குட்டிக்கானம் இடையே மலையோர நெடுஞ்சாலை பணி நடப்பதால் கம்பம்மெட்டு, குட்டிக்கானம் வழியில் ஐயப்ப பக்தர்கள் செல்ல முடியாது.
பக்தர்கள் குமுளி வழியாக சபரிமலை செல்ல வேண்டும். திரும்பி வரும் பக்தர்கள் செழிமடை விலக்கில் இருந்து ஒன்றாம் மைல் வழியாக வண்டன்மேடு ஜங்ஷனுக்கு வந்து தமிழகம் செல்லலாம்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்