உத்தரகாசி, உத்தரகண்டில் சுரங்க விபத்தில் சிக்கியுள்ள 40 தொழிலாளர்களை பத்திரமாக மீட்பதற்காக, கனரக துளையிடும் இயந்திரத்தை கொண்டு இரவு பகலாக நடந்த பணியில், 72 அடி வரை துளையிடப்பட்டுள்ளதாக மீட்புக்குழுவினர் தெரிவித்தனர்.
உத்தரகண்டின், உத்தரகாசி மாவட்டத்தில் உள்ள பிரம்மகால் – யமுனோத்ரி தேசிய நெடுஞ்சாலையில், சில்க்யாரா மற்றும் தண்டல்காவ்ன் இடையே மலையை குடைந்து சுரங்கப் பாதை அமைக்கும் பணி நடந்து வந்தது.
இரவு பகல்
கடந்த 12ம் தேதியன்று சுரங்கப் பாதை அமைக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தபோது, சுரங்கப் பாதையின் முகப்புக்கும், தொழிலாளர்கள் பணி செய்து கொண்டிருந்த பகுதிக்கும் இடைப்பட்ட பகுதி திடீரென சரிந்து விழுந்தது.
இதையடுத்து, 40 தொழிலாளர்கள் சுரங்கத்துக்குள் சிக்கிக்கொண்டனர். கடந்த ஐந்து நாட்களாக அவர்களை மீட்கும் பணி நடந்து வருகிறது.
புதுடில்லியில் இருந்து வரவழைக்கப்பட்ட கனரக துளையிடும் இயந்திரம் வாயிலாக துளையிட்டு, அதில் 3 அடி விட்டம் உள்ள இரும்பு குழாய்களை நுழைத்து, அதன் வழியே தொழிலாளர்களை மீட்க முயற்சிகள் நடந்து வருகின்றன.
நேற்று முன்தினம் காலை துவங்கி இரவு பகலாக நடந்து வரும் துளையிடும் பணியில் இதுவரை, 72 அடி துளையிடப்பட்டுள்ளதாக மீட்புக்குழுவினர் நேற்று தெரிவித்தனர்.
தொழிலாளர்களை மீட்க மொத்தம் 197 அடிக்கு துளையிட வேண்டிய தேவை உள்ளதாக, தேசிய நெடுஞ்சாலை மற்றும் உட்கட்டமைப்பு மேம்பாட்டு கழக இயக்குனர் அன்ஷு மணிஷ் கால்கோ தெரிவித்தார்.
நம்பிக்கை
துளையிடப்பட்ட பகுதிக்குள் இதுவரை ஐந்து இரும்பு குழாய்கள் நுழைக்கப்பட்டுள்ளதாக மீட்புக் குழுவினர் தெரிவித்தனர்.
சுரங்கத்தை துளையிடும் பணி தடையின்றி நடந்து வருவதால், தொழிலாளர்கள் விரைவில் மீட்கப்படுவர் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement