நுாஹ் ஹரியானாவின் நுாஹ் மாவட்டத்தில் பூஜையில் பங்கேற்க சென்ற பெண்கள் மீது, அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் நடத்திய கல் வீச்சு தாக்குதலில், எட்டு பெண்கள் காயம் அடைந்தனர்.
ஹரியானாவில், முதல்வர் மனோகர் லால் கட்டார் தலைமையில், பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது.
கோடை காலத்தில் கிணறு வற்றாமல் இருக்கவும், தண்ணீர் குளிர்ச்சியாக இருக்கவும், ‘குவான்’ என்ற பூஜை செய்யப்படுகிறது. இதில், பெண்கள் மட்டுமே பங்கேற்பர். கோடை காலம் துவங்குவதற்கு முன், இந்த பூஜை நடத்தப்படும்.
இந்நிலையில், இந்த பூஜையை செய்ய, நுாஹ் மாவட்டத்தில், 10க்கும் மேற்பட்ட பெண்கள் ஒரு குழுவாக நேற்று முன்தினம் இரவு சென்றனர்.
மசூதி வழியாக சென்ற போது, அடையாளம் தெரியாத மர்ம நபர்கள், அவர்கள் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர்.
இதில் எட்டு பெண்கள் காயம் அடைந்தனர். இதனால் அப்பகுதியில் பதற்றம் நிலவியது.
இது குறித்து தகவலறிந்து வந்த போலீசார், நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர். மேலும், அப்பகுதியில் முன்னெச்சரிக்கையாக ஏராளமான போலீசார் பாதுகாப்பில் ஈடுபடுத்தப்பட்டனர்.
இச்சம்பவம் குறித்து போலீசார் கூறுகையில், ‘குவான் பூஜையில் பங்கேற்க சென்ற பெண்கள் மீது, மதரசாவில் இருந்து சில சிறுவர்கள் கற்களை வீசி தாக்கிஉள்ளனர். இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறோம்.
‘தாக்குதல் நடத்தியவர்களில், மூன்று சிறுவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களிடம் தொடர் விசாரணை நடக்கிறது’ என்றனர்.
நுாஹ் மாவட்டத்தில், ஜூலை 31ல், வி.எச்.பி., எனப்படும் விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் ஊர்வலத்தில், மர்ம கும்பல் தாக்குதல் நடத்தியதை அடுத்து நிகழ்ந்த வன்முறையில், ஆறு பேர் கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்