கொலராடோ மலைப் பகுதியில் கடும் குளிரில் 72 நாள்கள் சிக்கித் தவித்த நாய் ஒன்று உயிருடன் மீட்கப்பட்ட சம்பவம் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி இருக்கிறது.
அமெரிக்காவின் கொலராடோ பகுதியைச் சேர்ந்தவர் ரிச் மூர். 71 வயதான இவர் கடந்த ஆகஸ்ட் 19-ம் தேதி அன்று கொலராடோ மலைப் பகுதியில் உள்ள பிளாக்ஹெட் சிகரத்திற்கு ட்ரெக்கிங் செல்ல முடிவு செய்திருக்கிறார். அவருடன் அவர் செல்லமாக வளர்த்த ஃபின்னி என்ற நாயையும் அழைத்துச் சென்றிருக்கிறார். மலை ஏறும்பொழுது கடும் குளிரைத் தாங்க முடியாமல் ரிச் மூர் உயிரிழந்திருக்கிறார். ஃபின்னி என்ற அந்த நாய் இறந்துப்போன தனது உரிமையாளரின் அருகிலேயே 72 நாள்களாக கடும் குளிரைத் தாங்கிக் கொண்டு இருந்திருக்கிறது.

ரிச் மூரின் உறவினர்கள் அவரையும், ஃபின்னியையும் தேடி அலைந்திருக்கின்றனர். நீண்ட நாள்களுக்குப் பிறகு இறந்துப்போன ரிச் மூரின் உடலை உறவினர்கள் கண்டுபிடித்திருக்கின்றனர். இறந்துபோன அவரின் உடல் அருகிலேயே கடும் குளிரில் 72 நாள்கள் சிக்கித் தவித்திருந்த ஃபின்னியைக் காப்பாற்றியிருக்கின்றனர். ஃபின்னியின் எடைக் குறைந்து அதன் எலும்புகள் எல்லாம் தெரிகிற அளவிற்கு மோசமான நிலையில் இருந்திருக்கிறது.

இருப்பினும் ஃபின்னி 72 நாள்கள் கடும் குளிரைத் தாக்குப் பிடித்துகொண்டு உயிருடன் இருந்தது ரிச் மூரின் உறவினர்கள், அப்பகுதி மக்கள் என பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியிருக்கிறது. தற்போது ஃபின்னி மருத்துவச் சிகிச்சைக்கு பிறகு நலமாக இருப்பதாக ரிச் மூரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.