வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சான் பிரான்சிஸ்கோ : “சீனா ஒரு போதும் போரையோ மோதலையோ துாண்டவில்லை; இதுவரை வெளிநாட்டு நிலங்களை ஒரு அங்குலம் கூட நாங்கள் ஆக்கிரமிக்கவில்லை,” என அந்நாட்டு அதிபர் ஜின்பிங் கூறியுள்ளார்.
ஆசிய — பசிபிக் பொருளாதார கூட்டமைப்பு மாநாடு அமெரிக்காவில் நேற்று முடிவடைந்தது. இதில் பங்கேற்க அமெரிக்கா சென்ற சீன அதிபர்ஜின்பிங், சான் பிரான்சிஸ்கோவில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர் “சீனாவில் மக்கள் குடியரசு நிறுவப்பட்டதில் இருந்து 70 ஆண்டுகள் மற்றும் அதற்கும் மேலாக எந்த நாட்டுடனும் எந்தவிதமான மோதலையோ, போரையோ துாண்டவில்லை. இன்னும் சொல்ல போனால் இதுவரை ஒரு அங்குலம் கூட எந்தவொரு வெளிநாட்டு நிலத்தையும் எங்கள் நாடு ஆக்கிரமித்தது இல்லை,” என்றார்.கடந்த 2020ல் கொரோனா காலத்தில் இந்திய எல்லை அருகே உள்ள கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இந்தியா மற்றும் சீன ராணுவத்திற்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது.
இரு தரப்பிலும் உயிர் சேதங்களும் ஏற்பட்டன.
இந்திய பகுதிகளில் அத்துமீறி சீன வீரர்கள் ஊடுருவியதே இந்த மோதலுக்கு காரணம். இதனால் இருதரப்பிக்கும் இடையே போர் மேகம் சூழும் அபாயம் ஏற்பட்டது. இதையடுத்து இரு நாட்டு எல்லைகளிலும் ராணுவம் குவிக்கப்பட்டது.
நிலைமை இவ்வாறு இருக்க இதற்கு நேர்மறையான கருத்துகளை சீன அதிபர் கூறியுள்ளதுஅதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியா மட்டுமின்றி ஜப்பான், தைவான் நாடுகளிலும் சீனா அத்துமீறலில் ஈடுபட்டு வரும் நிலையில் எந்த வெளிநாட்டு நிலங்களையும் ஆக்கிரமிக்கவில்லை என அந்நாடு கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
கண்டனம்
அதிபர் ஜின்பிங்கை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ‘சர்வாதிகாரி’ என விமர்சித்ததற்கு சீனா கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து அந்நாட்டு வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் மாவோ நிங் கூறுகையில், ”சீன அதிபர் மீதான இந்த வகையான பேச்சு மிகவும் தவறானது. இது பொறுப்பற்ற முறையில் அரசியலை கையாள்வதை காட்டுகிறது. இதை சீனா எதிர்க்கிறது. சீனா – அமெரிக்க உறவுகளில் முரண்பாட்டை விதைப்பதற்கும், அந்த உறவை சிதைப்பதற்கும் தவறான நோக்கங்களுடன் சிலர் பல முயற்சிகளை செய்து வருகின்றனர். இது எப்போதும் வெற்றி பெறாது,” என்றார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement