காசாநகர்: காசாவின் அல் ஷிபா மருத்துவமனையில் 32 கைக்குழந்தைகள் உள்பட 291 நோயாளிகள் தவித்து வருகின்றனர். இதனை மருத்துவமனையை ஆய்வு செய்த உலக சுகாதார அமைப்பின் தலைமையிலான ஐ.நா. குழு உறுதி செய்துள்ளது.
இஸ்ரேல் – ஹமாஸ் போர் நாளுக்குநாள் தீவிரமடைந்துவரும் சூழலில் நேற்று (சனிக்கிழமை) இஸ்ரேல் ராணுவம் காசாவின் அல் ஷிபா மருத்துவமனையை காலி செய்ய உத்தரவிட்டது .அந்த மருத்துவமனையில் இருந்து 2500 பேர் வெளியேற்றப்பட்டனர்.
பொதுமக்கள், மருத்துவர்கள், நகரக்கூடிய நோயாளிகள் அப்புறப்படுத்தப்பட்டனர். இதனால் அங்கு இப்போது 32 கைக்குழந்தைகள் உள்பட 291 நோயாளிகள் தவித்து வருகின்றனர். இதனை மருத்துவமனையை ஆய்வு செய்த உலக சுகாதார அமைப்பின் தலைமையிலான ஐ.நா. குழு உறுதி செய்துள்ளது.
மரணப் படுக்கையில் நடுக்கம்: 291 நோயாளிகளில் 32 பேர் கைக்குழந்தைகள். மற்ற நோயாளிகள் பலரும் தீவிரக் காயங்கள், முதுகுத் தண்டுவட பிரச்சினைகள் என பாதிக்கப்பட்டு நகரக்கூட இயலாமல் இருப்பவர்களாவர்.
அங்கிருந்த நோயாளிகளும் ஐ.நா.வின் சுகாதாரப் பணியாளர்களும் கூறிய விஷயங்கள் தங்களை நிலைகுலைய வைத்ததாக ஐ.நா. குழு தெரிவித்துள்ளது. உயிருக்குப் பயந்தும், உடல்நலம் தேறுமா என்ற அச்சத்திலும் நோயாளிகள் இருக்கின்றனர். தங்களை எப்படியாவது காப்பாற்றுமாறு அவர்கள் கெஞ்சிக் கதறியுள்ளனர். அல் ஷிபா மருத்துவமனை ‘மரணப் பகுதி’ போல் இருக்கிறது. வரும் நாட்களில் நோயாளிகளை காசாவின் தெற்குப் பகுதிக்குக் கொண்டு செல்ல ஏதுவாக ஐ.நா. சுகாதாரப் பணியாளர்கள் இன்னும் நிறைய பேர் வருவார்கள் என ஐ.நா. குழு தெரிவித்துள்ளது.இப்போது அல் ஷிபா மருத்துவமனையில் இஸ்ரேலியப் படையினரும் தங்கியுள்ளனர்.
முன்னதாக, சனிக்கிழமை காலை அல் ஷிபாவில் இருந்து மக்கள் தாமாகவே வெளியேறியதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்தாலும் வலுக்கட்டாயமாகவே தாங்கள் வெளியேற்றப்பட்டதாக காசாவாசிகள் சிலர் தெரிவித்தனர்.
மகமூது அபு ஆஃப், நாங்கள் துப்பாக்கி முனையில் வெளியேற்றப்பட்டோம் என்று ஏபி செய்தி நிறுவனத்துக்கு தொலைபேசி வாயிலாக தெரிவித்துள்ளார். மருத்துமனையைச் சுற்றி டாங்கர்களும், உள்ளே ஸ்னைப்பர்களும் இருந்ததாக அவர் கூறியுள்ளார். மேலும் மூன்று பேரை இஸ்ரேல் ராணுவம் கைது செய்ததாகவும் கூறியுள்ளார்.