நல்ல கதைகள் என்றும் கொண்டாடப்படும் – அடித்து சொல்லும் ‛ஹர்ஹரா' இயக்குனர் ராம் அருண்

தற்போதெல்லாம் பிரமாண்டம், வன்முறை என பல கோடி ரூபாயை கொட்டி நரம்புகளை முறுக்கும் மசாலா படங்கள் வெளியாகி ரசிகர்கள் கொண்டாடினாலும், வித்தியாசமாக கதை சொல்லும் படங்களையும் அவர்கள் ரசிக்கத்தான் செய்கின்றனர். இதற்கு சமீபத்திய உதாரணம் 'ஹர்ஹாரா' திரைப்படம். ஓ.டி.டி.,யில் வெளியாகி 'ஜெயிலர்' உள்ளிட்ட மெகா ஹீரோக்கள் படங்களுக்கு மத்தியிலும் தொடர்ந்து சில வாரங்கள் முன்னிலை வகித்து 'மாஸ்' காட்டியது.

அந்த படத்தின் இயக்குநரும் ஹீரோவும் ஒருவரே. அவர் ராம் அருண் கேஸ்ட்ரோ. தினமலர் சண்டே ஸ்பெஷல் பகுதிக்காக அவர் நம்மிடம்…

சொந்த ஊர் தேனி அருகே சமதர்மபுரம். பள்ளி படிப்பு சென்னையில். பொறியியல் படித்தது துபாயில். அப்பா துபாயில் பொறியாளராக இருந்ததால் அங்கேயே என் கல்லுாரி காலமும் ஓடியது. கல்லுாரியில் நாடகங்களில் நடிக்க துவங்கியது முதல் என் நடிப்பு தேடல் துவங்கியது. துபாயில் பகுதி நேரமாக அங்குள்ள நியூயார்க் பிலிம் அகாடமியில் நடிப்பு பயிற்சி பெற்றேன். சென்னை வந்து படவாய்ப்பு தேடினேன். பல படங்களில் 'பேக்கிரவுண்ட் ஆர்ட்டிஸ்ட்டா' பின்வரிசையில் நின்று நடித்துள்ளேன்.

நான் 2019 ல் முதன்முறையாக இயக்கி நடித்த படம் 'வி1 மர்டர் கேஸ்' வரவேற்பை பெற்றது. அடுத்து 'ஹர்ஹாரா'. இப்படம் தான் தமிழ் சினிமாவில் என்னை அடையாளப்படுத்தியது என்றுகூட சொல்லலாம். பாராட்டுகள் குவிகின்றன.

'ஹர்ஹாரா' என்றால் தபால்காரர் என அர்த்தம். நாட்டில் முதல் தபால்காரராக பணியாற்றியவர் என்னென்ன சிரமங்களை சந்தித்தார். ஆங்கிலேயர்களை அவர் எப்படி எதிர்த்தார், நாட்டிற்கான அவரது தியாகம் எப்படி இருந்தது என 1850ல் நடந்த ஒரு உண்மை சம்பவத்தை சினிமாவாக எடுத்திருக்கிறேன். மலைப்பாங்கான இடத்தில் 150 ஆண்டுகளுக்கு முன் ஒரு போஸ்ட்மேன் எப்படி பணியாற்றியிருப்பார் என்பதை கூறும் படம். அனைத்து தரப்பு ரசிகர்களிடமும் தாக்கத்தை ஏற்படுத்தியது.

நல்ல கதையை நம்பிக்கையுடன் படமாக்கலாம். அது கண்டிப்பாக ஜெயிக்கும். அடுத்து 'நெபுலா', 'ராசாத்தி' உள்ளிட்ட சில படங்களை நானே தயாரித்து நடித்து வருகிறேன். தமிழ் சினிமா இன்டஸ்ட்டிரியில் தற்போது வணிகம் சார்ந்த படங்கள் மட்டும் எடுக்கப்படுகின்றன. ரஜினி, கமல், விஜய், அஜித் என அவர்களுக்கான ஒரு மெகா பட்ஜெட்டில் பிரமாண்ட படம் எடுத்தாலும், அடுத்து சிறிய பட்ஜெட்டில் இரண்டு படங்கள் எடுக்க தயாரிப்பாளர்கள் முன்வரவேண்டும்.

ஆயிரக்கணக்கான சிறிய இயக்குநர்கள் வித்தியாச கதைகளுடன் அலைந்து கொண்டிருக்கிறார்கள். சிறிய பட்ஜெட் படங்கள் தான் அவர்களை அடையாளம் காட்டும். 70 சதவீதம் சினிமா உலகம் சிறிய பட்ஜெட் படங்களை நம்பி உள்ளன. நல்ல படங்களை மக்கள் கொண்டாடுவார்கள் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை என்கிறார் நம்பிக்கையாக.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.