பெங்களூரு : பெங்களூரில் பி.ஜி.,க்களில் அளவுக்கு அதிகமாக நபர்கள் தங்குவதாகவும், அக்கம் பக்கத்தில் வசிப்போருக்கு தொந்தரவாக இருப்பதாக வந்த புகாரையடுத்து, அவற்றைக் கட்டுப்படுத்த பெங்களூரு மாநகராட்சி முடிவு செய்துள்ளது.
பெங்களூரு நகரில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பி.ஜி.,க்கள் உள்ளன. இதில், 17 லட்சத்துக்கும் அதிகமான தொழில்நுட்ப வல்லுனர்கள், மாணவர்கள் தங்கி வருகின்றனர்.
இந்நிலையில், நகரில் உள்ள பி.ஜி.,க்களால், அக்கம் பக்கத்தில் வசிப்போருக்கு தொந்தரவு ஏற்படுவதாக, பெங்களூரு மாநகராட்சிக்கு புகார்கள் வந்துள்ளது.
இது தொடர்பாக மாநகராட்சி தலைமை கமிஷனர் துஷார் கிரிநாத் கூறியதாவது:
சில விடுதிகளில் கூட்டம் அதிகமாக இருப்பதாகவும், இங்கு வசிப்போரிடம் அதிக கட்டணம் வசூலிப்பதாகவும் புகார்கள் வருகின்றன.
எனவே, பி.ஜி.,க்களை ஒழுங்குபடுத்த விதிமுறைகளை உருவாக்கி வருகிறோம்.
ஒவ்வொரு பி.ஜி.,யிலும் எத்தனை பேர் தங்க வேண்டும், கழிப்பறைகள் எண்ணிக்கை, பாதுகாப்பு, ஆரோக்கியம் போன்ற விதிமுறைகள் விரைவில் அமல்படுத்தப்படும்.
நகரின் புறநகரில் உள்ள தங்கும் விடுதிகள், தங்களை வணிக நிறுவனங்களாக அறிவிக்காமல், தண்ணீர், மின்சாரம், வீட்டு உபயோக கட்டணத்தை செலுத்துகின்றன.
இவ்வாறு அவர் கூறினார்.
பி.ஜி.,க்கள் சங்க தலைவர் அருண் குமார் கூறியதாவது:
மாநகராட்சியின் இந்த நடவடிக்கை, அனைத்து வசதிகளையும் பாதிக்கும். பெரும்பாலான உரிமையாளர்கள் வர்த்தக உரிமம் எடுத்துள்ளனர்.
திடீரென மாநகராட்சி ஏன் இத்தகைய நடவடிக்கை எடுக்கிறது என்று தெரியவில்லை. பி.ஜி.,க்களை கட்டுப்படுத்த தனி விதிகள், வழிகாட்டுதல்கள் தேவையில்லை.
உண்மையில் பெங்களூரு மாநகராட்சி மற்றும் பிற அரசு நிறுவனங்கள் எங்கள் வணிகத்தை ஆதரிக்க வேண்டும். ஏனென்றால், அது தங்குமிடத்தையும், பாதுகாப்பையும் வழங்குகிறது.
பெங்களூரில் வாடகைகள் தாறுமாறாக உயர்ந்து கொண்டிருக்கும்போது, பி.ஜி.,க்கள் மாணவர்கள், தொழில்நுட்ப வல்லுனர்களுக்கு ஆதரவாக உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்