"இதயம் நொறுங்கியது" தோல்வியை நினைத்து வருந்தும் ரவிச்சந்திரன் அஸ்வின்

அகமதாபாத்,

13-வது உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் கடந்த மாதம் 5-ந்தேதி இந்தியாவில் தொடங்கியது. 10 அணிகள் பங்கேற்ற இந்த கிரிக்கெட் திருவிழாவில் லீக் மற்றும் அரைஇறுதி முடிவில் இந்தியா- ஆஸ்திரேலியா இறுதி போட்டிக்கு முன்னேறின.

இந்த நிலையில் இவ்விரு அணிகளில் மகுடம் யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் இறுதி போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நேற்று அரங்கேறியது.

இந்த ஆட்டத்தில் ‘டாஸ்’ வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் கம்மின்ஸ் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த இந்தியா 50 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 240 ரன்கள் எடுத்தது.

இதனை தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலியா 43 ஓவரில் 4 விக்கெட்டுகளை இழந்து 241 ரன்கள் எடுத்தது. இதனால், இந்தியாவை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ஆஸ்திரேலியா உலகக்கோப்பையை வென்றது. டிராவிஸ் ஹெட் ஆட்டநாயகன் விருதையும், இந்திய வீரர் விராட் கோலி தொடர்நாயகன் விருதையும் பெற்றனர்.

வலுவான அணிகளை தோற்கடித்த இந்தியா வரலாற்றிலேயே முதல் முறையாக ஒரு உலகக்கோப்பையில் தொடர்ச்சியாக 10 வெற்றிகளை பதிவு செய்து சாதனை படைத்தது. மேலும் தற்போதைய அணியில் அனைத்து வீரர்களுமே உச்சகட்ட பார்மில் இருந்ததால் கண்டிப்பாக இம்முறை கோப்பையை வெல்வோம் என்று ரசிகர்கள் உறுதியாக நம்பினர். ஆனாலும் வழக்கம்போல முக்கியமான ஆட்டத்தில் சொதப்பிய இந்தியா தோல்வியை சந்தித்தது.

இந்நிலையில் இந்த தோல்வி குறித்து இந்திய அணியில் இடம்பெற்றிருந்த தமிழகத்தை சேர்ந்த ரவிச்சந்திரன் அஸ்வின் தனது எக்ஸ் பக்கத்தில் வருத்தம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில்,‘ இதயம் நொறுங்கியது. இந்த தொடரில் அணியில் உள்ள ஒவ்வொரு வீரர்களும் நினைவில் கொள்ள பல தருணங்கள் உள்ளன. விராட் கோலி, முகமது ஷமி, ரோகித் சர்மா மற்றும் பும்ரா ஆகியோருக்கு தனிப்பாராட்டுகள். நவீன கிரிக்கெட்டின் ஜாம்பவானான ஆஸ்திரேலிய அணியை பாராட்டாமல் இருக்க முடியாது. நேற்று அவர்கள் களத்தில் சிறப்பாக விளையாடினார்கள். 6-வது உலகக்கோப்பையை வென்றதற்கு வாழ்த்துகள்’ என பதிவிட்டுள்ளார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.