மதுரை: மதுரை மீனாட்சியம்மன் கோயிலை சுற்றியுள்ள மாசி வீதிகள், ஆவணி மூல வீதிகளில் வாகனப் போக்குவரத்த நெரிசலை குறைக்க ‘ஸ்மார்ட் பார்கிங்’ திட்டத்தை மாநகராட்சி நடைமுறைப்படுத்த யோசனை முன்வைக்கப்பட்டது. இதையொட்டிய, ஆலோசனைக் கூட்டம் நடத்தி வியாபாரிகளிடம் கடைகளுக்கு வரும் வாடிக்கையாளர்கள், பணியாளர்களுடைய வாகனங்கள் விவரங்கள் அடங்கிய “டேட்டா”வை கேட்டுள்ளது.
மதுரை மீனாட்சியம்மன் கோயிலை சுற்றியுள்ள வீதிகளில் போக்குவரத்து நெரிசலை குறைக்க மாநகர போக்குவரத்து காவல்துறை அதிகாரிகள், வியாபாரிகள் சங்க நிர்வாகிகளுடன் மாகநராட்சி அதிகாரிகள் ஆலோசனைக் கூட்டம் இன்று நடந்தது. மாநகராட்சி ஆணையாளர் லி.மதுபாலன் தலைமை வகித்தார். மாநகர போக்குவரத்து காவல் துணை ஆணையர் குமார், தலைமை பொறியாளர் ரூபன் சுரேஷ், கண்காணிப்பு பொறியாளர் அரசு ஆகியோர் முன்னிலை வகித்தார். மாநகராட்சி ஆணையாளர் லி.மதுபாலன் கூறுகையில், “மீனாட்சியம்மன் கோயிலை சுற்றியுள்ள மாசி வீதிகள், ஆவணி மூல வீதிகளில் போக்குவரத்து தீராத பிரச்சினையாக உள்ளது. மக்கள் தொகை, வாகனப் போக்குவரத்து அதிகரித்ததால் மக்கள், இந்த சாலைகளில் நடமாட முடியவில்லை.
நகரின் போக்குவரத்தையே முடக்கிப்போடும் அளவிற்கு இந்த சாலைகளில் நெரிசல் நீடிக்கிறது. அதை குறைப்பதற்காகவும், இந்த சாலைகளில் நிறுத்தப்படும் வானகங்களை முறைப்படுத்துவதற்கும் திட்டமிட்டுள்ளது. இந்த நடவடிக்கைகளை வியாபாரிகள் ஒத்துழைப்பு இல்லாமல் செயல்படுத்த முடியாது” என்றார். தமிழ்நாடு உணவுப் பொருள் வியாபாரிகள் சங்க கவுரவத் தலைவர் ஜெய பிரகாஷ் கூறும்போது, “மாசி வீதிகளில் உள்ள வரும் இரு சக்கர வாகனங்கள், குட்டி யானைகள், ட்சைசைக்களுக்கு தனித் தனி பார்க்கிங் வசதிகள் ஏற்படுத்த வேண்டும்.
சபாநாயகராக பி.டி.ஆர்.பழனிவேல் ராஜன் இருந்தபோது, பார்க்கிங்கை முறைப்படுத்துவதாக கூறி மாநகராட்சி, மீனாட்சியம்மன் கோயிலை சுற்றி கட்டணப் பார்க்கிங் அமுல்படுத்த முயற்சித்தது. அதற்கு பழனிவேல் ராஜன் எதிர்ப்பு தெரிவித்து அந்த திட்டத்தை கைவிட செய்தார். அதனால், பார்க்கிங்குக்கு கட்டணம் அமல்படுத்தாமல் கூடுதலாக பார்க்கிங் வசதிகளை ஏற்படுத்தினாலே மாசி வீதிகள், ஆவணி மூல வீதிகளில் நெரிசலை குறைக்கலாம். மேலும், பழைய கல்பாலம் இருந்த இடத்தை பார்க்கிங்குக்கு ஒதுக்கினாலே நெரிசலை குறைக்கலாம். இந்த இடத்தில் குறைந்தப் பட்சம் 500 இரு சக்கர வாகனங்களை நிறுத்த முடியும்” என்றார்.
மாநகராட்சி ஆணையாளர் லி.மது பாலன் கூறும்போது, “மாசி வீதிகள், ஆவணி மூல வீதிகளில் பொதுமக்கள் வாகனங்களுக்கு பார்க்கிங் கட்டணம் வசூல் செய்யும் திட்டம் எதுவும் இல்லை” என்றார். ஆயில் அசோசியேஷன் செயலாளர் கிருஷ்ண மூர்த்தி, “மாநகர காவல் ஆணையாளராக ஜாங்கீட்டும், தற்போயை சுகாதாரத் துறை செயலாளர் ககன் தீப் சிங் பேடி மாநகராட்சி ஆணையாளராக மதுரையில் பணிபுரிந்த 25 ஆண்டிற்கு முன்பிருந்தே மீனாட்சியம்மன் கோயில் பகுதிகளில் போக்குவரத்து நெரிசலை குறைக்க பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. ஆனால் தற்போது வரை அதற்கு தீர்வு காண முடியவில்லை. அதிகாரிகள் முயற்சி செய்கிறார்கள். ஆனால் அதை தீவிரப்படுத்தாமல் சில வாரங்களிலே விட்டு செல்வதாலே மீனாட்சியம்மன் கோயிலை சுற்றி நெரிசலை கட்டுப்படுத்த முடியவில்லை” என்றார்.
தமிழ்நாடு பைப் வியாபாரிகள் சங்க பொருளாளர் சாகுல் அமீது பேசும்போது, “மாசி வீதிகளில் சிறு கடைகளால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதில்லை. கார்ப்பரேட் ஜவுளி கடை நிறுவனங்கள், பெரிய ஜவுளிக்கடைகளில் அவர்கள் கடைகளில் பணிபுரியும் ஊழியர்கள், வரும் வாடிக்கையாளர்களுக்கு போதுமான பார்க்கிங் வசதி இல்லை. அப்படியே இருந்தாலும் 10 முதல் 25 கார்களுக்கு மட்டுமே பார்க் கிங் வசதி உள்ளது. அவர்கள் கடைக்கு தினமும் வரும் ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்கள் தங்கள் கார்கள், இரு சக்கர வாகனங்களை மாசி வீதிகளில் நிறுத்தி செல்கிறார்கள். அதுபோல், அவர்கள் ஊழியர்கள் வாகனங்களையும், காலை முதல் இரவு வரை வாகனங்களை சாலையில் நிறுத்துகிறார்கள். அதனாலே, மாசி வீதிகளில் டபுள் பார்க் கிங் நிறுத்துவதற்கும், போக்குரவத்து நெரிசல் அதிகரிப்பதற்கு முக்கிய காரணம். இதற்கு தீர்வு கண்டாலே மாசி வீதிகளில் நெரிசலே ஏற்படாது” என்றார்.
மாநகராட்சி ஆணையாளர் லி.மதுபாலன் கூறும்போது, “மாசி வீதிகள், ஆவணி மூலவீதிகளில் தற்போது உள்ளதுபோல் இனி டபுள் பார்க்கிங் கிடையாது. ஒரே ஒரு வரிசையில் மட்டுமே இனி பார்க்கிங் நிறுத்த அனுமதிக்கப்படும். அதுவும், அந்த பார்க்கிங்கில் வாடிக்கையாளர்கள் மட்டுமே இலவசமாக அனுமதிக்கப்படுவார்கள். கடைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு மட்டும் மல்டிலெவல் மாநகராட்சி பார்க்கிங்கில் வாகனங்களை சலுகை விலையில் மாத சீசன் டிக்கெட் பெறுவதற்கு முன் வர வேண்டும். அதுபோல், ஒவ்வொரு கடைகள், நிறுவனத்திற்கு எத்தனை சரக்கு வாகனங்கள், ஊழியர்கள் வாகனங்கள், வாடிக்கையாளர்கள் வாகனங்கள் வருகின்றன என்ற பட்டியலை ஒரு வாரத்திற்கு மாநகராட்சிக்கு வழங்க வேண்டும். அதன் பிறகு தான் மீண்டும் உங்களை அழைத்து பார்க்கிங் வசதிகளை எப்படி ஏற்பாடு செய்யலாம் மாநகராட்சி உறுதியான முடிவெடுக்கும்” என்றார்.
வெங்காய மார்க்கெட் வியாபாரிகள் சங்க தலைவர் இஸ்மாயில் கூறும்போது, “மீனாட்சிம்மன் கோயிலை சுற்றியுள்ள ஒவ்வொரு வீதிகளுக்கும் ஒவ்வொரு பிரச்சினைகளும் உள்ளன. அதற்கு தனித்தனியாக ஒரு தீர்வு கண்டால் மட்டுமே நெரிசலுக்கு தீர்வு காண முடியும். அந்த அடிப்படையில் ஜவுளிக் கடைகள் உள்ள வீதிகளில் மட்டுமே அதிகளவு நெரிசல் ஏற்படுகிறது. அதுவும் முகூர்த்த நாட்கள், விழா காலங்களில் கோயில் பக்கம் யாருமே வர முடியாது. ஜவுளிக் கடைகளுக்கு வரும் வாடிக்கயைாளர்களை குறிவைத்து ஹோட்டல்கள் வருகிறது. அதற்கு எங்கிருந்தோ வாடிக்கையாளர்கள் சாப்பிட வருகிறார்கள். அதற்கு தனியாக மாரட் வீதியில் பார்க்கிங்கில் கொண்டு போய் விட சொன்னால் அது சரியாக காலை 4 மணிக்கு வர வேண்டும். அவர்கள் அங்கு சென்று வர முடியாத. கீழ மாரட் வீதிகளில், ஒரு கடைக்கு 15 பேர் பணிபுரிகிறார்கள்” என்றார்.
லாரி உரிமையாளர்கள் சங்க நிர்வாகி சேது கூறும்போது, “மாசி வீதிகள், ஆவணி மூல வீதிகளில் உள்ள நடைபாதைகளில் உள்ள ஆக்கிரமிப்பை முதலில் எடுங்கள். போலீஸாரிடம் கேட்டால் நாங்கள் அபராதம் மட்டுமே விதிக்க முடியும். பொருட்களை பறிமுதல் செய்ய முடியாது. பொதுமக்கள் நடைபாதைகளை பயன்படுத்த முடியாமல் சாலையில் நடப்பதால் அதுவும் போக்குரவத்து நெரிசல் ஏற்படுவதற்கு காரணமாகிறது” என்றார்.
தொழில் வர்த்தக சங்கத் தலைவர் ஜெகதீசன் கூறும்போது, “மும்பை, டெல்லி, சென்னை போன்ற நகரங்களை போல் மீனாட்சியம்மன் கோயிலை ஸ்மார்ட் பார்க்கிங் வசதிகளை ஏற்படுத்த வேண்டும். வியாபாரிகள் வழங்கும் வாகனங்கள் டேட்டா குறைவாக கூட இருக்கலாம். அதனால், வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் உதவியுடன் நேரடியாக ஒவ்வொரு கடைக்கும் வரும் வாகனங்களை ஆராய்ந்து டேட்டா சேகரித்து அதன் அடிப்படையிலே நெரிசலை குறைக்க தீர்வு காணுங்கள்” என்றார்.
மாநகராட்சி ஆணையாளர்கள் கூறும்போது, “இந்த ஒரு கூட்டமே இறுதியானது இல்லை. வியாபாரிகள் வழங்கும் வாகனங்கள் விவரங்களை வைத்து அடுத்தக்கட்டமாக பார்க்கிங் வசதிகளை மேம்படுத்தி மீனாட்சியம்மன் கோயில் வீதிகளில் நெரிசலை குறைக்க நடவடிக்கை எடுக்கும்” என்றார்.