சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் வழிபாட்டில் ஈடுபட்ட இந்து முன்னணி பொறுப்பாளர்களை, அத்துமீறி ஆலயத்துக்குள் நுழைந்து வலுக்கட்டாயமாக கைது செய்துள்ள மயிலாப்பூர் சரக காவல் அதிகாரியின் செயல் கண்டிக்கத்தக்கது என்று இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சி. சுப்பிரமணியம் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சில தினங்களுக்கு முன்பு டாக்டர் தேவநாதன் யாதவ் அலுவலக வாசலில் வைக்கப்பட்டிருந்த பெயர் பலகையை நள்ளிரவில் காவல்துறை அதிகாரிகள் துணைக் கொண்டு மாநகராட்சி அதிகாரிகள் அகற்றினர். இதற்கு கண்டனம் தெரிவித்திருந்தோம். இந்நிலையில் நேற்று யாதவ மகாசபை சார்பில், மயிலை காபாலீஸ்வரரிடம் வேண்டுதல் மனு அளிப்பதாக அறிவித்து இருந்தனர். அதற்கு இந்து முன்னணி சார்பில் ஆதரவு தெரிவித்து இருந்தோம்.
காலம் காலமாக மக்கள் தங்கள் குறைகளை, தங்களுக்கு இழைக்கப்படும் அநீதியை இறைவனிடம் மனுவாக, வேண்டுதல் சீட்டாக சமர்ப்பிப்பது நடைமுறை. அதன் அடிப்படையில் யாதவ மகாசபையினர் தங்களுக்கு எதிராக ஆட்சியாளர்கள் அதிகார துஷ்பிரயோகம் செய்ததை இறைவனிடம் முறையிட சென்றபோது காவல்துறை தடுத்துள்ளது. இது மிகவும் கண்டிக்கத்தக்கது. இறைவனை வழிபடுவதற்கு யாரிடமும் அனுமதி வாங்க வேண்டியதில்லை. இறைவனை வழிபட தடுப்பதுதான் சட்டப்படி குற்றம்.
இதற்கிடையில் இந்து முன்னணி மாநில செய்தித் தொடர்பாளர் ஏ.டி.இளங்கோவன் மற்றும் சென்னை பொறுப்பாளர்கள் செந்தில், முருகன் ஆகியோர் கபாலீஸ்வரர் கோயிலில் வழிபட்டு பிரகாரத்தை சுற்றி வரும்போது மயிலாப்பூர் சரக போலீஸ் அதிகாரி அத்துமீறி ஆலயத்துக்குள் நுழைந்து தகாத வார்த்தைகளைப் பேசி வலுக்கட்டாயமாக கைது செய்துள்ளார். ஆலயத்துக்குள் அத்துமீறி போலீஸ் நுழைந்து அநாகரிகமாக நடந்து கொண்டதை கண்டிக்கிறோம்.
இதேபோல முஸ்லிம், கிறித்துவ வழிபாட்டு தலங்களில் காவல் துறையினர் நடந்து கொள்வார்களா? அதற்கு திராணி உள்ளதா? அந்த காவல்துறை அதிகாரி தனது ஊரில் காலமான தனது அம்மாவின் சிலையை விசிக தலைவர் திருமாவளவனைக் கொண்டு திறந்தார் எனக் கூறப்படுகிறது. அவர் அரசியல் சார்பு உடையவராகவே தொடர்ந்து செயல்படுவதாகவும் பொது மக்களால் குற்றம்சாட்டப்படுகிறது. இத்தகைய அதிகாரிகளால் காவல்துறை செயல்பாட்டுக்கு களங்கம் ஏற்படுகிறது. அதுமட்டுமின்றி கைது செய்யப்பட்டவர்களில் பல பெண்களும் இருந்துள்ளனர்.
எனவே, கைது செய்யப்பட்டவர்களை சந்தித்து ஆறுதலும் ஆதரவும் தெரிவிக்க வந்த பாஜக மாநில அமைப்பு செயலாளர் கேசவவிநாயகத்தை அனுமதிக்கவில்லை. இதுவும் அதிகார துஷ்பிரயோகம். அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜியை முதல்வர் உள்பட அமைச்சர்கள் அவர்தம் குடும்பத்தார் மருத்துவமனையில் சந்தித்தனர் என்பதை சுட்டிக் காட்டுகிறோம். பரோலில் வந்த குண்டு வெடிப்பு பயங்கரவாதியை சந்திக்க அனுமதிக்கும் காவல்துறை, தேசபக்தர்களை, ஆன்மிகவாதிகளை சந்திக்க அனுமதி மறுப்பது சரியா? எனவே அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபட்ட காவல்துறை அதிகாரிகள் மீது துறைரீதியான விசாரணை செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்து முன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.