சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐ.சி.சி சில புதிய விதிமுறைகளை அறிவித்திருக்கிறது. அவை கிரிக்கெட் உலகில் விவாதத்தைக் கிளப்பியிருக்கிறது.
முதலாவதாக பௌலிங் செய்யும் அணி ஒரு ஓவருக்கும் அடுத்த ஓவருக்கும் இடையில் எடுத்துக்கொள்ளும் இடைவேளையை குறைக்க முடிவு செய்திருக்கிறது ஐ.சி.சி. ஒரு ஓவரை வீசி அடுத்த ஓவரை வீச அதிக நேரம் எடுக்கும்போது மொத்தமாகப் போட்டியின் நேரமே அதிகரித்துவிடுகிறது. இதற்காக ‘Slow Over Rate’ எனும் விதிமுறையை ஏற்கெனவே அமல் செய்திருக்கிறது. அதன்படி, குறிப்பிட்ட நேரத்திற்குள் அணிகள் இன்னிங்ஸின் கடைசி ஓவரை வீசத் தொடங்காவிட்டால் எஞ்சியிருக்கும் ஓவர்களுக்கு வட்டத்திற்கு வெளியே ஒரு ஃபீல்டரைக் குறைவாகவே வைக்க முடியும். மேலும், இப்படி மெதுவாக ஓவர்களை வீசி போட்டிக்குக் கொடுக்கப்பட்ட நேரத்திற்கும் மேலாக எடுத்துக் கொள்ளும் அணிகளுக்கு அபராதமும் விதிக்கப்படுகிறது.

இதை மேலும் இறுக்கும் வகையில்தான் தற்போது இந்த ’60 நொடி’ கெடு விதிமுறை கொண்டு வரப்பட்டிருக்கிறது. இதன்படி, ஒரு ஓவரை வீசிவிட்டு அடுத்த ஓவரை வீச 60 நொடிக்குள் பந்துவீசும் அணி தயாராக இருக்க வேண்டும். ஒரு ஆட்டத்தில் மூன்று முறை இந்த 60 நொடி கெடுவை மீறி அதிக நேரம் எடுத்துக் கொள்ளும்பட்சத்தில் பேட்டிங் செய்யும் அணிக்கு 5 ரன்கள் போனஸாக வழங்கப்படும். இதன் மூலம் போட்டியைத் தாமதம் இல்லாமல் முடிக்க நினைக்கிறது ஐ.சி.சி.
இதுமட்டுமல்லாமல், இனி பெண்களுக்கான சர்வதேச கிரிக்கெட்டில் திருநங்கைகளுக்கு அனுமதியில்லை எனவும் ஐ.சி.சி அறிவித்திருக்கிறது. பெண்களுக்கான கிரிக்கெட்டில் சமஅளவிலான போட்டியை உறுதி செய்யும்பொருட்டு இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக ஐ.சி.சி அறிவித்திருக்கிறது. மேலும், இந்த விதிமுறை சர்வதேச கிரிக்கெட்டுக்கு மட்டும்தான் பொருந்தும் என்றும் உள்ளூர் கிரிக்கெட்டைப் பொறுத்தவரைக்கும் அந்தந்த நாட்டு சட்டத்திட்டங்களின் படி விதிகளை வகுத்துக் கொள்ளலாம் எனவும் ஐ.சி.சி அறிவித்திருக்கிறது.

கனடாவைச் சேர்ந்த திருநங்கை டேனியெல்லே மெக்கே என்பவர் கனடா அணிக்காக இரண்டு மாதங்களுக்கு முன்புதான் சர்வதேச கிரிக்கெட்டிலேயே அறிமுகமாகியிருந்தார். இப்போது அவர் சர்வதேச கிரிக்கெட்டில் ஆட முடியாது என்பது குறிப்பிடத்தக்கது. கிரிக்கெட் 2028 ஒலிம்பிக்ஸில் இடம்பெறப்போகிறது. அதற்காக ஒலிம்பிக்ஸின் பாலின விதிமுறைகளையும் மனதில் வைத்தே இந்த முடிவு எடுக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.