ராஜஸ்தானில் வாக்குப்பதிவு முடிந்தது: 5 மணி நிலவரப்படி 68.24 % வாக்குகள் பதிவு

ஜெய்பூர்,

200 உறுப்பினர்களை கொண்ட ராஜஸ்தான் மாநில சட்டசபையின் பதவிக்காலம் விரைவில் முடிவடைகிறது. எனவே அங்கு சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட்டு இருந்தது. காங்கிரஸ் கட்சி ஆளும் இந்த மாநிலத்தில் ஆட்சியை தக்க வைப்பதற்காக அந்த கட்சி தீவிரமாக போராடி வருகிறது. இதற்காக முதல்-மந்திரி அசோக் கெலாட், கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் துணை முதல்-மந்திரியுமான சச்சின் பைலட், மாநில காங்கிரஸ் தலைவர் கோவிந்த் சிங் தோதஸ்ரா என கட்சியின் மாநில தலைவர்கள் தீவிர பிரசாரம் மேற்கொண்டனர்.

இதைப்போல காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, மூத்த தலைவர்கள் ராகுல் காந்தி, பிரியங்கா மற்றும் முன்னாள் மத்திய மந்திரிகள் என கட்சியின் தேசிய தலைவர்களும் மாநிலத்தில் சூறாவளி பிரசாரம் மேற்கொண்டனர். மாநிலத்தில் கடந்த 5 ஆண்டுகளாக மேற்கொள்ளப்பட்ட திட்டங்கள் மற்றும் தற்போது அந்த கட்சி வழங்கியிருக்கும் 7 வாக்குறுதிகளை முன்வைத்து மக்களிடம் வாக்கு சேகரித்தனர்.

அதேநேரம் மாநிலத்தில் 5 ஆண்டுகளுக்கு முன்பு இழந்த அதிகாரத்தை மீண்டும் கைப்பற்ற பா.ஜனதா தீவிர களப்பணி ஆற்றி வருகிறது. இதனால் கடந்த சில வாரங்களாக மாநிலத்தில் அனல் பறக்கும் வகையிலான பிரசாரம் நடந்தது. இந்த பிரசாரம் நேற்று முன்தினம் மாலை 6 மணியுடன் ஓய்ந்தது.

இதைத்தொடர்ந்து மாநிலத்தில் இன்று (சனிக்கிழமை) வாக்குப்பதிவு தொடங்கியது. மொத்தமுள்ள 200 தொகுதிகளில் 199 இடங்களில் ஒன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்றது. பெரிய அளவில் அசம்பாவிதங்கள் எதுவும் இன்றி வாக்குப்பதிவு அமைதியாகவே நடந்து முடிந்தது. மாலை 5 மணி நிலவரப்படி 68.24 % வாக்குகள் பதிவாகியுள்ளது. இன்றைய தேர்தலில் பதிவாகும் வாக்குகள் அனைத்தும் வருகிற 3-ந்தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.