பிரபாகரன் குறித்த சர்ச்சை கருத்து: தமிழச்சி தங்கபாண்டியனுக்கு காங்கிரஸ், பாஜக கண்டனம்

சென்னை: விடுதலை புலிகள் இயக்க தலைவர் பிரபாகரனை தேசிய தலைவர் என திமுக எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன் தெரிவித்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், அவரது கருத்துக்கு காங்கிரஸ், பாஜக சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென்சென்னை திமுக எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன், ஆங்கில இணையதள நிறுவனம் நடத்திய நேர்காணலில் பங்கேற்றார். அப்போது, ஆளுமைமிக்க தலைவர் ஒருவரை சந்திப்பது குறித்த கேள்விக்கு, அவர் தேசிய தலைவர் பிரபாகரன் என தெரிவித்ததுடன், அவரை சந்தித்தால் முள்ளிவாய்க்கால் சம்பவத்துக்கு மன்னிப்பு கோருவேன் என்றும் தெரிவித்தார்.

தமிழச்சியின் இந்த கருத்து சர்ச்சையாகியுள்ள நிலையில், பல்வேறு தரப்பிலும் கண்டன குரல்கள் வலுத்துள்ளன.

தமிழக காங்கிரஸ் செயல் தலைவர் மோகன் குமாரமங்கலம் தனது சமூக வலைதளப் பக்கத்தில் கூறியதாவது: முள்ளிவாய்க்கால் நிகழ்வுக்கு இவர் ஏன் மன்னிப்பு கேட்க வேண்டும். அந்த நிகழ்வுக்கு காரணம் திமுகதான் என்ற ஒப்புதல் வாக்குமூலமே இது என்பதை உணர்த்துகிறது.

குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கிறதோ? இந்தியாவில் தடை செய்யப்பட்ட ஒரு இயக்கத்தைச் சேர்ந்தவரை, முன்னாள் பிரதமரை கொன்ற இயக்கத்தை வழிநடத்திய ஒருவரை தேசிய தலைவர் என்று ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் சொல்வது திமுகவின் ஆணவம். இப்போதுகூட இந்திய காங்கிரஸ் தலைவர்களுக்கு ரோஷம் வரவில்லை என்றால் அது வெட்கக்கேடே. இவ்வாறு கூறியுள்ளார்.

காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரம்: பிரபாகரனை புகழ்ந்து பேசுவதை காங்கிரஸார் யாரும் விரும்ப மாட்டார்கள். கொலை குற்றவாளியை ஹீரோ ஆக்க வேண்டாம். ராஜீவ்வுடன் 17 பேர் கொல்லப்பட்டதை யாரும் பேசுவதில்லை. பிரபாகரன், வீரப்பன், தமிழ் தேசியம் என்பதெல்லாம் இந்துத்துவா தேசியவாதத்தை போன்றதுதான். விடுதலைப் புலிகளின் ரசிகர்களாக இல்லாமல் இலங்கைத் தமிழர்களுடன் நிற்க முடியும் என்பதை ஏன் புரிந்துகொள்ள மறுக்கிறார்.

பாஜக துணைத் தலைவர் நாராயண் திருப்பதி: முள்ளிவாய்க்கால் படுகொலைக்கு திமுகதான் காரணம் என தமிழச்சி ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார். பிரதமரை கொன்ற இயக்கத் தலைவரை அவர் தேசிய தலைவர் என்று கூறியிருப்பது திமுகவின் ஆணவத்தை காட்டுகிறது. திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் இனியாவது வெளியேறுமா?

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.