மணிப்பூர்: மத்திய அரசுடன் அமைதி ஒப்பந்தம் செய்த ஆயுதக் குழு…!

டெல்லி,

மணிப்பூர் மாநிலத்தில் கடந்த மே மாதம் 3-ம் தேதி முதல் மெய்தி மற்றும் குக்கி சமூகத்தினருக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இது கலவரமாக வெடித்த நிலையில், கடந்த 7 மாதங்களில் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். இதையடுத்து, மணிப்பூரில் அமைதியை நிலைநாட்ட, ஆயுதக் குழுக்களுடன் மத்திய, மாநில அரசுகள் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தி வந்தன.

இந்த நிலையில் மணிப்பூரில் ஆயுதமேந்தி போராடிவந்த ஆயுதக் குழுவான ஐக்கிய தேசிய விடுதலை முன்னணி , மத்திய அரசு மற்றும் மணிப்பூர் மாநில அரசுடன் தில்லியில் அமைதி ஒப்பந்தத்தில் நேற்று கையெழுத்திட்டது.

நாட்டின் வட கிழக்குப் பகுதியிலும் குறிப்பாக மணிப்பூரிலும் அமைதியின் புதிய சகாப்தத்தை உருவாக்குவதற்கு இந்த ஒப்பந்தம் வழிவகுக்கும் என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இது குறித்து அந்த அமைச்சகம் கூறியதாவது, மணிப்பூரில் ஆயுதக் குழு வன்முறையைக் கைவிட்டு, தேசிய நீரோட்டத்திற்குத் திரும்ப ஒப்புக்கொள்வது இதுவே முதல் முறையாகும். மணிப்பூரின் ஆயுதக் குழுவான யு.என்.எல்.எஃப்., மத்திய அரசு, மணிப்பூர் மாநில அரசுடன் தில்லியில் அமைதி ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டது.

மேலும் மத்திய உள்துறை அமைச்சகம் மற்றும் மணிப்பூர் அரசின் மூத்த அதிகாரிகளும், ஐக்கிய தேசிய விடுதலை முன்னணியின் பிரதிநிதிகளும் ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டனர். இந்த உடன்படிக்கையின் மூலம் கடந்த அரை நூற்றாண்டுக்கும் மேலாக நிலவிய சிக்கல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது என உள்துறை அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.

இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தனது எக்ஸ் சமூக வலைதளத்தில், பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் வடகிழக்கு மாநிலங்களுக்கு சிறந்த எதிர்காலத்தை உருவாக்கும் நடவடிக்கைகளில் இது ஒரு மைல்கல் ஆகும். ஆயுதக் குழுக்கள் ஜனநாயக நடைமுறைக்கு மாறி வருவது வரவேற்கத்தக்கது. மேலும் ஜனநாயக செயல்முறைகளுக்கு திரும்புவதும் வளர்ச்சிப்பாதைக்கான பயணத்தில் யு.என்.எல்.எஃப். அமைப்பு வருவதும் வரவேற்கத்தக்கது எனத் தெரிவித்துள்ளார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.