இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி, அண்மை காலமாக சச்சினின் சாதனைகளை ஒவ்வொன்றாக முறியடித்துக் கொண்டு வருகிறார். யாராலும் எட்ட முடியாத உயரம் என பார்க்கப்பட்ட டெண்டுல்கரின் சாதனைகளை எல்லாம் அசால்டாக தகர்க்கும் விராட் கோலி அண்மையில் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 50 சதங்களை அடித்து அமர்களப்படுத்தினார். அவருக்கு முன்பாக சச்சின் 49 சதங்கள் எடுத்தே சாதனையாக இருந்தது. இதனை முறியடித்த விராட் கோலி சச்சின் டெண்டுல்கரின் 100 சதங்கள் சாதனையையும் தகர்பார் என கூறி வருகின்றனர். ஆனால் வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் கேப்டன் பிரையன் லாராவுக்கு அதில் நம்பிக்கையில்லை. அவர் விராட் கோலியால் சச்சினின் இந்த சாதனையை முறியடிக்க முடியாது என தெரிவித்துள்ளார்.
அப்படி அவர் கூறுவதற்கு ஒருசில காரணங்களும் உண்டு. இப்போது விராட் கோலிக்கு 35 வயதாகிறது. அவர் இன்னும் குறைந்தபட்சம் 4 ஆண்டுகள் விளையாடினால் மட்டுமே சச்சின் சர்வதேச கிரிக்கெட்டில் அடித்த 100 சதங்களின் சாதனையை தகர்க்க முடியும். அதற்கேற்ப இந்திய அணிக்கு சர்வதேச போட்டிகள் இருக்க வேண்டும். இந்தியாவுக்கு அடுத்த ஆண்டு ஐந்து ஒருநாள் போட்டிகள் மட்டுமே திட்டமிடப்பட்டுள்ளன. மேலும் அவரது T20I எதிர்காலம் குறித்து இன்னும் தெளிவு இல்லை. அவர் டிசம்பர் 2022 முதல் அந்த வடிவத்தில் இந்திய அணிக்காக விளையாடவில்லை. டெஸ்ட் கிரிக்கெட் மற்றும் ஒருநாள் கிரிக்கெட் என இரண்டு வடிவத்திலும் சேர்த்து ஆண்டுக்கு குறைந்தபட்சம் 5 சதங்களாவது அடிக்க வேண்டும். அப்படி விளையாடினால் மட்டுமே விராட் கோலியால் சச்சினின் 100 சதங்கள் என்ற சாதனையை தகர்க்க முடியும்.
அப்படி பார்க்கும்போது என்னை பொறுத்தவரையில் சாத்தியமில்லை என பிரையன் லாரா தெரிவித்துள்ளார். விராட் கோலியின் பேட்டிங்கிற்கு நான் மிகப்பெரிய ரசிகன் என்றாலும் கிரிக்கெட்டின் பார்வையில் இருந்து பார்க்கும்போது விராட் கோலியால் சச்சினின் இந்த சாதனையை மட்டும் தகர்க்க முடியாது என்னால் உறுதியாக சொல்ல முடியும் என தெரிவித்துள்ளார். அதேநேரத்தில் டெண்டுல்கரைப் போல் சர்வதேச கிரிக்கெட்டில் விராட் கோலி 100 சதங்கள் அடித்தால் நான் மகிழ்ச்சியடைவேன், இருப்பினும் என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து இதனை கூறுகிறேன் லாரா தெரிவித்திருக்கிறார்.