டிசம்பர் 4-ம் தேதி வந்த மிக்ஜாம் புயலின் பாதிப்பிலிருந்து இன்னும் பரிபூரணமாக சென்னை மக்கள் மீளவில்லை. சில பகுதிகளில் இன்னும் பாதிப்பின் தாக்கம் இருக்கிறது. இந்த நிலையில், தமிழ்நாட்டுக்கு சென்னை வானிலை மையம் அடுத்த மழை அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது. அந்த அறிக்கையின்படி, இன்று தென் தமிழகத்தில் பல இடங்களிலும், வட தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன்கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்பிருக்கிறது. நாளை புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன்கூடிய லேசானது முதல் மிதமான மழையும், ராமநாதபுரம், புதுக்கோட்டை, தூத்துக்குடி, சிவகங்கை, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், திருநெல்வேலி, கன்னியாகுமரி, மதுரை, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும் பெய்ய வாய்ப்பிருக்கிறது. இந்த இரு தினங்களுக்கு தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளுக்கு ஆரஞ்ச் அலர்ட் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
அதனால், இந்த இரண்டு நாள்களில் ஒரிரு இடங்களில் 12 முதல் 20 செ.மீ கனமழைப் பெய்யக்கூடும். 17-ம் தேதி மேற்கூறிய மாவட்டங்களுடன் கடலூர், விழுப்புரம், தென்காசி, தேனி, திண்டுக்கல், திருச்சி, கரூர், பெரம்பலூர், அரியலூர், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் கனமழைப் பெய்ய வாய்ப்பிருக்கிறது. 18-ம் தேதி கடலோர தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன்கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்பிருக்கிறது.

19, 20, 21 ஆகிய தேதிகளில், கடலோர தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன்கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்பிருக்கிறது. அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் (சென்னை) ஒருசில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.