‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ படத்தை அடுத்து விக்னேஷ் சிவன் இயக்கும் படம், ‘எல்.ஐ.சி’. இதில் ‘லவ் டுடே’ பிரதீப் ரங்கநாதன், கீர்த்தி ஷெட்டி, எஸ்.ஜே.சூர்யா, யோகி பாபு எனப் பலர் நடிக்கின்றனர். இப்படத்தின் பூஜையுடன் படப்பிடிப்பு நேற்று தொடங்கியது. இளைய தலைமுறையினரைப் பிரதிபலிக்கும் காதல் கதையாக உருவாகிறது. ‘ஜப்பான்’ ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்ய, அனிருத் இசையமைக்கிறார்.
இந்நிலையில் “எல்.ஐ.சி. தலைப்பு என்னுடையது. விக்னேஷ் சிவன் மீது வழக்குத் தொடுப்பேன்” என குற்றம்சாட்டியிருக்கிறார் இசையமைப்பாளரும், இயக்குநருமான எஸ்.எஸ்.குமரன்.

“விக்னேஷ் சிவன் இயக்கும் புதிய படத்திற்கு ‘எல்.ஐ.சி’ எனப் பெயரிட்டு இருப்பதைக்கண்டு அதிர்ச்சியும் மன உளைச்சலுமானேன். கடந்த 2015-ம் ஆண்டே என் தயாரிப்பு நிறுவனமான சுமா பிக்சர்ஸ் பெயரில் அந்த டைட்டிலைப் பதிவு செய்திருந்தேன். அதை அறிந்த விக்னேஷ் சிவன் தன்னுடைய புதிய படத்திற்கு அந்தப் பெயரை தரக்கோரி தனது மேலாளர் மயில்வாகனன் மூலம் என்னை அணுகினார். ஆனால் ‘LIC’ என்கிற தலைப்பு நான் இயக்கும் படத்திற்கு மிகச்சரியாக பொருந்துவதாலும், கதையின் பலமே அந்தத் தலைப்பை ஒட்டி அமைந்திருப்பதாலும் நான் மறுத்துவிட்டேன். ஆக, இந்தத் தலைப்பை நான் முறைப்படி பதிவு செய்து வைத்திருக்கிறேன் என்பதை விக்னேஷ் சிவன் நன்றாக அறிவார்.

அப்படி இருந்தும் இந்தத் தலைப்பை அவர் தனது படத்திற்கு வைக்கிறார் என்று சொன்னால் அது சட்டத்திற்குப் புறம்பானது மட்டுமல்ல எளிய, சிறிய தயாரிப்பாளர்களை நசுக்கும் செயலாகும். இச்செயல் முழுக்க முழுக்க அதிகாரத்தன்மை கொண்டது. அவரின் இந்தச் செயலுக்கு நியாயம் கேட்டு ஊடகத்திற்கு முன் நிற்கிறேன். ‘LIC’ என்கிற தலைப்பு என்னிடம் மட்டுமே இருப்பதால் அதை விக்னேஷ் சிவன் தன் படத்தில் எந்த விதத்திலும் பயன்படுத்தக்கூடாது என்று இதன் மூலம் தெரியப்படுத்த விரும்புகிறேன். இனியும் இச்செயலை திரு விக்னேஷ் சிவன் தொடர்வார் என்றால் சட்டப்படி அவர் மீது நடவடிக்கை எடுப்பேன் என்பதையும் இதன் மூலம் தெரிவித்துக்கொள்கிறேன்” எனத் தன் அறிக்கையில் தெரிவித்திருந்தார் எஸ்.எஸ்.குமரன்.
இதுகுறித்து எஸ்.எஸ்.குமரனிடம் பேசினேன். “என்னுடைய கதைக்கான டைட்டிலாக ‘எல்.சி.ஐ’யைக் கடந்த 2015ல இருந்து பதிவு பண்ணி வச்சிருக்கேன். ஒவ்வொரு வருஷமும் அதைப் புதுப்பிச்சிட்டும் வர்றேன். போன ஜூன் மாசம், விக்னேஷ் சிவனின் மேனேஜர் எனக்கு போன் பண்ணி, எடுத்த எடுப்பிலேயே ‘எங்க டைட்டில் உங்ககிட்ட எப்படி வந்தது?’ன்னு பேசினார். எனக்கு அதிர்ச்சியாகிடுச்சு. ‘அந்த டைட்டில் உங்ககிட்ட இருந்தால், வைக்க வேண்டியதுதானே’னு சொன்னேன். கோயம்பேடு மார்க்கெட்ல பேசுற மாதிரி பேசுறீங்களே… டைட்டிலை முறையா பதிவு பண்ணி வச்சிருக்கேன். உங்ககிட்ட இருக்குதுனு எப்படிச் சொல்றீங்க?’னு கேட்டேன். நான் இப்படிக் கேட்டதும், அவர் ‘நீங்க பெரிய டெக்னீஷியன், இயக்குநர்’னு சொல்ல ஆரம்பிச்சார். அதன்பிறகு நான் கூப்பிடுறேன்னு சொல்லி போனை வச்சிட்டார்.

ஆனா, நேத்து அவங்க இந்த டைட்டிலை அறிவிச்சிருக்காங்க. எதுவும் கேட்குற முறைன்னு ஒண்ணு இருக்கு. தன்மையா கேட்டிருந்தால் கூட, நான் அதிர்ச்சியாகியிருக்க மாட்டேன். ஆனா, என்கிட்ட டைட்டில் இருக்கறது தெரிந்து, என்கிட்டேயே அதைப் பத்தி கேட்டிருக்காங்க… அவங்க பெரிய புராஜெக்ட்ஸ் பண்றாங்க. ஆனா, நான் சின்ன தயாரிப்பாளர். அவங்ககிட்ட சண்டை போடல. ஆனா, அடிப்படை உரிமை கூட எனக்கில்லையா? இப்ப தயாரிப்பாளர் சங்கத்துல புகார் அளிச்சிருக்கேன். திரும்பவும் பிரச்னை சரியாகலைன்னா, நீதிமன்றம் வரை போகப்போறேன்” என்கிறார் எஸ்.எஸ்.குமரன்.
“சமீபத்தில் திரைக்கு வந்த நயன்தாராவின் ‘அன்னப்பூரணி’ தலைப்பு கூட, இப்படிச் சர்ச்சையானது. ”ஜெய் பீம்’ நாயகி லிஜோமோல், லாஸ்லியா நடித்த படமான ‘அன்னப்பூரணி’யின் தலைப்பை அதன் இயக்குநர் லயோனல் ஜோஸ்வாவிடம் கேட்டும் அவர் கொடுக்காத நிலையில் நயனின் படத்தை முன்கூட்டியே ரிலீஸ் செய்திருந்தனர்’ என்ற குற்றச்சாட்டும் விக்னேஷ் சிவன் மீது இருக்கிறது” என்கிறார்கள்.