புதுடெல்லி: இந்தியா வந்துள்ள ஓமன் சுல்தான் ஹைதம் பின் தாரிக்-குக்கு குடியரசு தலைவர் மாளிகையில் சம்பிரதாய ராணுவ அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது.
ஓமன் சுல்தான் ஹைதம் பின் தாரிக் மூன்று நாள் பயணமாக நேற்று இந்தியா வந்தார். டெல்லி விமான நிலையத்தில் அவரை, வெளியுறவுத்துறை இணை அமைச்சர் வி. முரளிதரன் மற்றும் அதிகாரிகள் வரவேற்றனர். இதையடுத்து, குடியரசுத் தலைவர் மாளிகைக்கு இன்று வருகை தந்த ஒமன் சுல்தான் ஹைதம் பின் தாரிக்கை, குடியரசுத் தலைவர், பிரதமர் ஆகியோர் வரவேற்றனர். இதன் தொடர்ச்சியாக, ஹைதம் பின் தாரிக்-க்கு முப்படைகளின் ஒருங்கிணைந்த ராணுவ அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது.
இதனையடுத்து, டெல்லியில் உள்ள ஹைதராபாத் இல்லத்தில் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்து சுல்தான் ஹைதம் பின் தாரிக் பேச்சுவார்த்தை நடத்தினார். முன்னதாக, ஓமன் சுல்தானின் வருகை குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் கருத்து தெரிவித்திருந்த வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பக்சி, ஓமன் சுல்தானின் இந்திய வருகை இரு நாடுகளுக்கு இடையேயான நீண்ட கால நட்பு, ஒத்துழைப்பு மற்றும் வர்த்தகத்தை மேலும் வலுப்படுத்தும் என்று தெரிவித்திருந்தார். மேலும், பிராந்தியத்தின் நிலைத்தன்மை, முன்னேற்றம், வளம் ஆகியவற்றை மேம்படுத்த இரு நாடுகளும் இணைந்து செயல்படுவதற்கான வாய்ப்பாகவும் இந்த பயணம் அமையும் என்று இந்திய வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.
இந்தியாவின் நெருங்கிய அண்டை நாடான ஓமனுக்கும் இந்தியாவுக்கும் இடையே வரலாற்று, கலாச்சார, பொருளாதார உறவு பன்னெடுங்காலமாக இருந்து வருகிறது. 5 ஆயிரம் ஆண்டுகளாக இரு நாடுகளுக்கு இடையே மக்கள் தொடர்பு இருந்து வருகிறது. இரு நாடுகளுக்கும் இடையே 1955ல் தூதரக உறவு ஏற்படுத்தப்பட்டது. 2008 முதல் இரு தரப்பு உறவு மேலும் வலுப்படுத்தப்பட்டது. வளைகுடா பிராந்தியத்தில் இந்தியாவின் மிக நெருங்கிய பாதுகாப்பு பங்குதாரராக ஒமன் இருந்து வருகிறது.
டெல்லியில் ஜி20 உச்சிமாநாடு நடைபெற்றபோது இந்தியாவின் அழைப்பை ஏற்று சிறப்பு அழைப்பாளராக ஓமன் பங்கேற்றது. இந்தியாவின் தலைமையில் நடைபெற்ற ஜி20 சந்திப்புகளில் 150 சந்திப்புகளில் ஓமன் பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர். மேலும், ஜி20 அமைச்சரவைக் குழு கூட்டங்களிலும் ஓமன் பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர். இந்நிலையில், குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவின் அழைப்பின் பேரில் ஓமன் சுல்தான் ஹைதம் பின் தாரிக் இந்தியா வந்துள்ளார்.