“சத்தீஸ்கரில் நக்ஸல்களுக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது” – புதிய முதல்வர் விஷ்ணு தியோ சிங்

ராய்ப்பூர்: சத்தீஸ்கரில் நக்ஸல்களுக்கு அச்சம் ஏற்பட்டுள்ளது என்று அம்மாநில புதிய முதல்வர் விஷ்ணு தியோ சிங் தெரிவித்துள்ளார்.

செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள அவர், ”நான் ஒரு விவசாயியின் மகன். மிகச் சிறிய வயதில் மிகப் பெரிய பொறுப்பு எனக்கு கொடுக்கப்பட்டுள்ளது. முதல்வர் பதவி எனும் மிகப் பெரிய பொறுப்பை நான் வகிப்பேன் என நினைத்ததே இல்லை. நான் 4 முறை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்திருக்கிறேன். பிரதமர் நரேந்திர மோடியின் அமைச்சரவையில் இணை அமைச்சராக இருந்து அவரது வழிகாட்டலின் கீழ் பணியாற்றி இருக்கிறேன். தொடர்ந்து இரண்டு முறை சட்டப்பேரவை உறுப்பினராக தேர்வாகி இருக்கிறேன். என் மீது மிகப் பெரிய நம்பிக்கை வைத்து இந்த பொறுப்பை வழங்கிய கட்சிக்கு நான் நன்றிக்கடன் பட்டுள்ளேன்.

கட்சியில் உள்ள மூத்த தலைவர்களின் ஆலோசனையின்படி செயல்படுவதன் மூலம் இந்த பொறுப்புக்குரிய கடமைகளை நிறைவேற்ற முடியும் என நம்புகிறேன். முழு அர்ப்பணிப்புடன் பணியாற்றுபவர்களுக்கு கட்சி நிச்சயம் வெகுமதி அளிக்கும். இது பாஜகவில் மட்டுமே சாத்தியம். மற்ற கட்சிகளில் வாரிசு அரசியல்தான் இருக்கிறது. அவற்றில் ஜனநாயகம் இல்லை.

சத்தீஸ்கரின் மிக முக்கிய பிரச்சினையாக நக்ஸல் பிரச்சினை உள்ளது. நக்ஸலிசத்துக்கு எதிராக பாஜக தொடர்ந்து போராடி வருகிறது. ஆனால், காங்கிரஸ் ஆட்சிக்கு வரும்போது எல்லாம் மாறிவிடுகிறது. காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், தங்கள் அரசு வந்துவிட்டது என நக்ஸல்கள் சொல்கிறார்கள். ஆனால், பாஜக வந்துவிட்டதால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்ற அச்சம் அவர்களுக்கு ஏற்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளார்.

விஷ்ணு தியோ சாய் பின்னணி: பழங்குடி சமூகத்தைச் சேர்ந்தவரான விஷ்ணு தியோ சாய், மாநிலத்தின் முக்கிய தலைவர்களில் ஒருவராக அறியப்படுகிறார். கடந்த 2020 முதல் 2022 வரை கட்சியின் மாநில தலைவராக இருந்துள்ளார். மோடி அமைச்சரவையில் சுரங்கம் மற்றும் இரும்பு துறை இணை அமைச்சராக பதவி வகித்துள்ளார். 59 வயதாகும் விஷ்ணு தியோ சாய், சத்தீஸ்கரின் முதல்வராக கடந்த புதன் கிழமை பிரதமர் மோடி முன்னிலையில் பதவி ஏற்றார். நடந்து முடிந்த சத்தீஸ்கர் சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தமுள்ள 90 தொகுதிகளில் பாஜக 54ல் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.