டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு முடிவுகள் ஜன.12-ல் வெளியீடு

சென்னை: “குரூப் 2 தேர்வு முடிவுகள் ஜனவரி 12-ஆம் தேதி வெளியிடப்படும். விடைத்தாள்கள் திருத்தும் பணி விரைவுபடுத்தப்பட்டுள்ளது” என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், தொகுதி-II தேர்வு முடிவுகளை வெளியிடுவதில் காலதாமதம் உள்ளதாகக் குறிப்பிட்டு வெளியான செய்திகள் குறித்து பின்வரும் விவரங்கள் தெரிவித்துக் கொள்ளப்படுகின்றன. 15.12.2022 அன்று தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்ட தேர்வாணைய ஆண்டுத்திட்டம், 2023-ஆம் ஆண்டில் 15.03.2023 அன்று மேம்படுத்தப்பட்டு தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டது.

தேர்வாணைய ஆண்டுத் திட்டத்தின்படி 2023-ஆம் ஆண்டு அறிவிக்கை வெளியிடப்பட்ட அனைத்து தேர்வுகளும் (14 தேர்வுகள் நடத்தப்பட்டுள்ளன. இந்தத் தேர்வுகளில் 20 லட்சம் தேர்வர்கள் (தோராயமாக) கலந்து கொண்டுள்ளனர். தேர்வாணைய ஆண்டுத் திட்டத்தின்படி தேர்வுகள் நடத்தப்படுவதோடு 32 தேர்வுகளுக்கான (நடப்பாண்டில் அறிவிக்கப்பட்ட 9 தேர்வுகள் உட்பட) தேர்வு முடிவுகளை தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. வெளியிடப்பட்ட முடிவுகளின்படி, தோராயமாக 12,500 தேர்வர்கள் பல்வேறு அரசு பதவிகளுக்கான வேலை வாய்ப்பினை இந்த ஆண்டு பெற்றுள்ளனர்.

தொகுதி-II முதன்மை எழுத்துத் தேர்வு தொடர்பாக அதிக அளவிலான தேர்வர்களின் விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யும் பணிகள் இருந்ததாலும், மேலும், ஒரே நேரத்தில் மதிப்பீடு செய்ய வேண்டிய தேர்வுகள் மற்றும் பிறதேர்வுகள் நடத்தவேண்டியிருந்ததாலும், தொகுதி-II முதன்மை எழுத்துத் தேர்வு தொடர்பான தேர்வு முடிவுகள் தேர்வாணைய அட்டவணையில் டிசம்பர் 2023-இல் வெளியிடப்படுவதாக ஏற்கெனவே தற்காலிக தெரிவு முடிவு அட்டவணை (Tentative Result Declaration Schedule) குறித்த அட்டவணையில் அறிவிக்கப்பட்டது.

தேர்வு முடிவுகளை விரைந்து வழங்கவேண்டுமென்ற நோக்கத்துடன், தொகுதி-II முதன்மை எழுத்துத்தேர்வு விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் பணிகள் துரிதமாக (விடுமுறை நாட்கள் உட்பட) நடைபெற்று வருகிறது. ஒரே சமயத்தில் பல தேர்வுகள் நடத்தவேண்டிய சூழ்நிலையாலும் மற்றும் சமீபத்திய புயல் வெள்ளம் காரணமாக விடைத்தாள்கள் திருத்தும் பணிக்கு தற்போது கூடுதல் காலம் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. இத்தகைய சவால்கள் இருந்தபோதிலும், தொகுதி II தேர்வின் தேர்வு முடிவுகள் ஜனவரி 12-ம் தேதியில் வெளியிடப்படும். எனவே, விண்ணப்பதாரர்கள் தொகுதி II தேர்வு தொடர்பாக பரப்பப்பட்டு வரும் வதந்திகளை நம்ப வேண்டாம் எனக் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.