தஞ்சாவூர் மாவட்டத்தின் கடற்கரை பகுதி சேதுபாவாசத்திரம். அங்குள்ள கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ளது சேதுபாவாசத்திரம் காவல் நிலையம். இப்பகுதியில் இருந்து, இலங்கை தமிழர்களுக்கு போலி ஆவணங்கள் மூலம், பாஸ்போர்ட் தயாரித்து விநியோகம் செய்யப்பட்டு வருவதாக புகார் எழுந்தது. இது குறித்த தகவல் தஞ்சாவூர் மாவட்ட க்யூ பிரிவு போலீஸாருக்கு கிடைத்துள்ளது. அதன் பேரில் இந்த விவகாரம் தொடர்பாக க்யூ பிரிவு போலீஸ் டி.எஸ்.பி., சிவசங்கரன், இன்ஸ்பெக்டர் பிரபாகரன் தலைமையிலான 10 பேர் கொண்ட குழுவினர் தொடர் விசாரணையில் இறங்கினர்.

இதில் சேதுபாவாசத்திரம் அருகே உள்ள ஆண்டிக்காடு கிராம அஞ்சலகத்தில், பணியாற்றி போஸ்ட்மேன் கோவிந்தராஜ் (64) கும்பகோணத்தைச் சேர்ந்த வடிவேல் (52) ராஜூ, ராஜமடத்தை சேர்ந்த சங்கர், சேதுபாவாசத்திரம் போலீஸ் ஸ்டேஷனின் தற்காலிக கணினி ஆப்ரேட்டர் பாலசிங்கம், திருச்சி கல்காண்டார்கோட்டை வைத்தியநாதன் ஆகிய 6 பேரையும் சில தினங்களுக்கு முன்பு கைது செய்தனர். அத்துடன் மல்லிப்பட்டினம் கிராம அஞ்சல் முன்னாள் போஸ்ட்மேன் பக்ரூதீன், திருச்சி உறையூரைச் சேர்ந்த இலங்கைத் தமிழர் சுந்தர்ராஜ் ஆகியோரை தேடி வருகின்றனர்.
இந்நிலையில் சேதுபாவாசத்திரன் காவல் நிலையத்தில் பணிபுரியும் சில போலீஸாருக்கு இதில் தெடர்பிருப்பதாக சொல்லப்பட்டது. இதையடுத்து தொடர் விசாரணையில் க்யூ பிரிவு ரகசிய விசாரணை செய்து வந்தனர். இதைதொடர்ந்து எஸ்.பி. ஆஷீஷ் ராவத், சேதுபாவாசத்திரம் போலீஸ் ஸ்டேஷனில் எழுத்தராக பணியாற்றி சேஷா என்பவரை போலி ஆவணங்கள் மூலம் பாஸ்போர்ட் பெற உடந்தையாக இருந்ததாக கூறி சஸ்பெண்ட் செய்தும், இந்த புகார் குறித்து முறையாக கவனித்து தகவல் தராமல் இருந்ததற்காக எஸ்.பி., தனிப்பிரிவு ஏட்டு சச்சிதானந்தம் என்பவரை பணியிலிருந்து விடுவித்தும் நடவடிக்கை எடுத்து உத்தரவிட்டார்.

இது குறித்து போலீஸ் வட்டாரத்தில் விசாரித்தோம், `மல்லிப்பட்டினம் போஸ்ட் ஆபீஸ் மூலம் போலி ஆவணங்களை கொண்டு, போலியான முகவரியை உருவாக்கி, இலங்கைத் தமிழர்களுக்கு 20 பாஸ்போர்ட் பெற்று கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு ஆண்டிக்காடு போஸ்ட் ஆபீஸ் மூலம் 29 பாஸ்போர்ட் பெறப்பட்டுள்ளது. மேலும், வேறு எங்கு எங்கு பாஸ்போர்ட் பெறப்பட்டுள்ளது என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது. இதன் மூலம் ஒரு பாஸ்போர்ட்டுக்கு இவ்வளவு என தொகை நிர்ணயம் செய்து வசூலித்து பங்கு போட்டு கொண்டுள்ளனர். இது குறித்த விசாரணை தொடர்ந்து வருகிறது’ என்றனர்.