India National Cricket Team: இந்திய அணி தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் 1-1 என்ற கணக்கில் சமன் செய்யப்பட்ட நிலையில், ஒருநாள் தொடர் நாளை (டிச. 17) முதல் தொடங்க உள்ளது. மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நடைபெற உள்ளது.
கடந்த மாதம் நிறைவடைந்த ஐசிசி உலகக் கோப்பை தொடருக்கு பின் இரு அணிகளும் விளையாடும் முதல் ஒருநாள் போட்டி இதுவாகும். வெள்ளை பந்து கிரிக்கெட்டில் புதிய அணியை கட்டமைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக, பேட்டிங், பீல்டிங், பந்துவீச்சு ஆகிய மூன்றிலும் பல மாற்றங்கள் இந்த தொடரிலேயே செய்யப்பட்டுள்ளது எனலாம்.
சாய் சுதர்சன், ருதுராஜ் கெய்க்வாட், ரிங்கு சிங், ராஜத் பட்டீதர் என ஒருநாள் அணியின் பேட்டிங் புது எழுச்சியை பெறும் என நம்பப்படுகிறது. சுப்மான் கில், ரோஹித் சர்மா (Rohit Sharma), விராட் கோலி (Virat Kohli), ஜடேஜா, சிராஜ், பும்ரா, ஷமி உள்ளிட்ட முன்னணி வீரர்கள் இடம்பெறவில்லை. மேலும், சஹால், ஆவேஷ் கான் ஆகியோரும் அணிக்கு திரும்பி உள்ளனர். கேஎல் ராகுல் கேப்டனாகவும், ஷ்ரேயாஸ் ஐயர் துணை கேப்டனாகவும் செயல்படுகின்றனர்.
அந்த வகையில், தற்போது புதிய அணி கட்டமைக்கப்பட்டு வரும் நிலையில், இந்திய அணிக்கு புது சிக்கல் ஒன்றும் ஏற்பட்டுள்ளது. இந்திய அணியின் வேகப்பந்துவீச்சு பிரிவும் தற்போது சுணக்கம் கண்டுள்ளத எனலாம். சிராஜ், ஷமி, பும்ரா என உலகக் கோப்பையில் மிரட்டிய மூன்று பேரும் இந்த தொடரில் இல்லை. ஆவேஷ் கான், அர்ஷ்தீப் சிங், முகேஷ் குமார், தீபக் சஹார் ஆகியோர்தான் வேகப்பந்துவீச்சாளராக தேர்வாகி உள்ளனர்.
ஆனால், இதில் தற்போது தீபக் சஹார் அவரது தந்தையின் உடல்நலக்குறைவு காரணமாக ஒருநாள் தொடரில் விளையாட மாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்மூலம், அவருக்கு பதிலாக ஆகாஷ் தீப்பை மாற்று வேகப்பந்துவீச்சாளராக பிசிசிஐ அறிவித்துள்ளது. மேலும், ஹர்திக் பாண்டியா இல்லாததால் ஆறாவது பந்துவீச்சு ஆப்ஷன் இல்லை. மூன்று வேகப்பந்துவீச்சாளர், ஒரு சுழற்பந்துவீச்சாளர், ஒரு சுழல் ஆல்-ரவுண்டர் (அக்சர் படேல்/வாஷிங்டன் சுந்தர்) உடன் இந்திய அணி களமிறங்கும் என தெரிகிறது.
மேலும், டெஸ்ட் தொடரில் இருந்து முகமது ஷமி (Mohammed Shami) தற்போது விலகி உள்ளார் என பிசிசிஐ (BCCI) உறுதிப்படுத்தியுள்ளது. 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணியில் (Team India) அவர் இடம்பெற்றிருந்தார். மேலும், ஷ்ரேயாஸ் ஐயர் முதல் ஒருநாள் போட்டிக்கு பின் டெஸ்ட் அணியுடன் இணைந்துகொள்வார் எனவும், அதனால் இரண்டாவது, மூன்றாவது ஒருநாள் போட்டிகளில் விளையாடமாட்டார் எனவும் பிசிசிஐ இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி, தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட், பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர், பந்துவீச்சு பயிற்சியாளர் பராஸ் மாம்ப்ரே, பீல்டிங் பயிற்சியாளர் டி.திலீப் ஆகியோர் டெஸ்ட் அணியுடன் முன் தயாரிப்பில் ஈடுபட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தீபக் சஹாருக்கு பதில் ஆகாஷ் தீப் அறிவிக்கப்பட்ட நிலையில், டெஸ்ட் அணியில் ஷமிக்கு மாற்று வீரர் அறிவிக்கப்படவில்லை.