புதுடெல்லி: கடந்த 2014-ம் ஆண்டு முதல் இதுவரை, அமலாக்கத்துறை பல்வேறு பணமோசடி வழக்குகளில் மேற்கொண்ட சோத னையில் ரூ.1.16 லட்சம் கோடி மதிப்புள்ள சொத்துகளை முடக்கியுள்ளது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
2014-ம் ஆண்டு முதல் பொருளாதார குற்றவாளிகளிடமிருந்து எவ்வளவு சொத்துகள் மீட்கப்பட்டுள்ள என்று மாநிலங்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய அரசின் பொதுமக்கள் குறைதீர்ப்பு மற்றும் ஓய்வூதிய துறையின் இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் நேற்று எழுத்துப்பூர்வமாக பதில் அளித்தார்.
அதில் அவர், “2014 ஜனவரி முதல் 2023 அக்டோபர் வரையில் ரூ.1.16 லட்சம் கோடி மதிப்புள்ள சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கியுள்ளது. இதில் 2019-க்குப் பிறகான 4 ஆண்டுகளில் மட்டும் ரூ.69,000 கோடி மதிப் புள்ள சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன” என்று அவர் தெரிவித்தார்.
விஜய் மல்லையா, நீரவ் மோடி உள்ளிட்டவர்கள் வங்கியில் பெரும் தொகை கடன் பெற்று, அதை முறையாக திருப்பிச் செலுத்தாமல் வெளிநாடு தப்பியோடினர். இந்நிலையில் 2018-ம் ஆண்டுக்கு பிறகு 10 பேரை தப்பியோடிய குற்றவாளிகளாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
இதுதொடர்பான கேள்விக்கு பதிலளித்த மத்திய இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் “கடந்த 4 ஆண்டுகளில், வெளிநாடு தப்பியோடிய பொருளாதார குற்றவாளிகளில் நால்வரை அமலாக்கத்துறை இந்தியாவுக்கு அழைத்து வந்துள்ளது. மேலும், 3 பேரை இந்தியாவுக்கு அழைத்து வருவதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.