பெலகாவி : பெலகாவியில் பெண்ணை நிர்வாணப்படுத்தி மின் கம்பத்தில் கட்டி வைத்து தாக்கிய வழக்கில், உண்மை கண்டறிய பா.ஜ., தேசிய தலைவர் நட்டா, ஐந்து பேர் கொண்ட குழுவை அமைத்து உள்ளார்.
பெலகாவி அருகே ஒசவந்தமூரி கிராமத்தை சேர்ந்தவர் துண்டப்பா நாயக், 25. இவரும் பிரியங்கா, 22 என்பவரும் காதலித்தனர்.
காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த பிரியங்காவின் பெற்றோர், அவருக்கு வேறு இடத்தில், திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர். இதனால் காதலனுடன் வீட்டைவிட்டு ஓடினார்.
ஆத்திரம் அடைந்த பிரியங்காவின் உறவினர்கள், துண்டப்பாவின் வீட்டில் புகுந்து, பொருட்களை சூறையாடினர். அவரது தாயை நிர்வாணமாக்கி ஊர்வலமாக அழைத்து சென்றனர். மின்கம்பத்தில் கட்டி வைத்து தாக்கினர். இந்த சம்பவம், தேசிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கர்நாடக உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து, வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறது.
நேற்று முன்தினம் நடந்த விசாரணையின் போது, ‘மஹாபாரதத்தில் திரவுபதி சந்தித்ததை விட மோசமான சம்பவம்’ என்று, நீதிபதிகள் வருத்தம் தெரிவித்தனர். இந்த பிரச்னையை பா.ஜ., தீவிரமாக எடுத்து உள்ளது. அக்கட்சியின் தேசிய தலைவர் நட்டா, பெலகாவி சம்பவத்தில், உண்மையை கண்டறிவதற்காக ஐந்து பேர் குழுவை, நேற்று அமைத்து உள்ளார்.
இந்த குழுவில் பா.ஜ., – எம்.பி.,க்கள் அப்ரஜிதா சாரங்கி, சுனிதா துக்கல், லாக்கெட் சட்டர்ஜி, ரஞ்சிதா கோலி, ஆஷா லக்கரா இடம் பெற்று உள்ளனர். பெலகாவிக்கு சென்று விசாரணை நடத்தி, அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டு உள்ளார்.
இதற்கிடையில் பெலகாவி சம்பவத்தை கண்டித்து, புதுடில்லி பார்லிமென்ட் முன்பு உள்ள, காந்தி சிலை முன், கர்நாடக பா.ஜ., – எம்.பி.,க்கள் நேற்று போராட்டம் நடத்தினர்.
பெலகாவியிலும் கர்நாடகா பா.ஜ., தலைவர் விஜயேந்திரா தலைமையில் நேற்று போராட்டம் நடந்தது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்