ரபா: காசாவில், பயங்கரவாதிகள் என நினைத்து, பிணைக்கைதிகள் மூன்று பேரை கொன்றுவிட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.
மேற்காசிய நாடான இஸ்ரேல் மீது, பாலஸ்தீனத்தின் காசா பகுதியை கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு கடந்த அக்., 7ல் திடீர் தாக்குதல் நடத்தியது.
தொடர் தாக்குதல்
இதையடுத்து, ஹமாஸ் பயங்கரவாதிகள் மீது இஸ்ரேல் ராணுவம் தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது.
இருதரப்புக்கும் இடையிலான போர், இரண்டு மாதங்களுக்கு மேலாக நீடித்து வருகிறது.
இதில் 1,200க்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். வெளிநாட்டவர் உட்பட, 200க்கும் மேற்பட்டோர் பிணைக்கைதிகளாக பிடித்து செல்லப்பட்டனர்.
அதேசமயம், பாலஸ்தீனர்கள் தரப்பில் 18,000க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.
இந்தப் போரில், வடக்கு காசா முற்றிலும் உருக்குலைந்துள்ள நிலையில், தெற்கு காசாவை குறிவைத்து இஸ்ரேலிய படை தாக்குதல் நடத்தி வருகிறது.
ஹமாஸின் முக்கிய இடமாக கருதப்படும் ஷெஜையா பகுதியில் இஸ்ரேல் ராணுவம் தாக்குதலை அதிகப்படுத்தியுள்ளது.
இந்த இடத்தில் இரு தரப்பினருக்கும் கடுமையான துப்பாக்கி சண்டை நடந்து வருகிறது.
இந்நிலையில், அப்பகுதியில் நுழைந்த, இஸ்ரேல் ராணுவம் பிணைக்கைதிகள் மூன்று பேரை பயங்கரவாதிகள் என கருதி, சுட்டுக் கொன்றது.
சண்டையின்போது, இஸ்ரேல் ராணுவ வீரர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தக் கூடிய நபர்கள் என தவறுதலாக கருதி மூன்று பிணைக்கைதிகளை சுட்டுக்கொன்றது, தற்போது தெரியவந்துள்ளது.
தெரியாமல் நடந்த இந்த சம்பவம் குறித்து இஸ்ரேல் ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில் ‘தவறுதலாக மூன்று பிணைக்கைதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்கள் அந்த இடத்துக்கு எப்படி வந்தனர் என தெரியவில்லை.
ஆறுதல்
‘இந்த சம்பவம் குறித்து போரிட்டு வரும் வீரர்களுக்கு தெரிவிக்கப்பட்டு உள்ளது. இனி இதுபோல் நடக்காமல் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். சோகமான சம்பவத்துக்கு இஸ்ரேல் ராணுவம் வருத்தம் தெரிவித்து கொள்கிறது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்துக்கு அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வருத்தம் தெரிவித்ததுடன், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறியுள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்