ஆளுநர் ஆர்.என்.ரவி மனம் மாற வேண்டும்: முதல்வர் ஸ்டாலி்ன் எதிர்பார்ப்பு

சென்னை: ஆளுநர் மனம்மாறி தமிழகத்தின் நன்மைக்காகச் செயல்பட வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

‘தி இந்து’ ஆங்கில நாளிதழுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது: ‘மிக்ஜாம்’ புயலால் ஏற்பட்ட சேதத்தை பார்வையிட வந்த மத்திய குழு, சரியான நேரத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்ததால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது என்று பாராட்டி இருக்கிறது. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு தான் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி திருப்புகழ் தலைமையில் குழு அமைத்து, அவர்களது ஆலோசனைப்படி திட்டங்களை தீட்டி வருகிறோம்.

திருப்புகழ் கமிட்டி அறிக்கையின் அடிப்படையில் அரசால் மேற்கொள்ளப்பட்ட பணிகள், அவற்றின் தற்போதைய நிலை ஆகியவற்றை தொகுத்து விரைவில் அரசு பொதுவெளியில் அறிக்கை வெளியிடும். இரண்டரை ஆண்டுகளில் சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் எடுக்கப்பட்ட வெள்ளத் தடுப்பு நடவடிக்கைகள், அதற்கான செலவினம் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் வெகு விரைவில் பொது மக்களின் தகவலுக்காக வெளியிடுவோம்.

3 மாநிலத் தேர்தல் முடிவுகள், மக்களவைத் தேர்தல் முடிவை பாதிக்காது. பாஜகவுக்கு எதிரான வாக்குகளை அனைத்து மாநிலங்களிலும் ஒன்று சேர்க்கும் முயற்சிகளை ‘இண்டியா’ கூட்டணி செய்யும். அதன் மூலம் மக்களவைத் தேர்தலில் வெற்றியை பெறுவோம். தமிழகத்தின் ஆளுநராக ஆர்.என்.ரவி வந்த பிறகு, பலமுறை அவரை சந்தித்து இருக்கிறேன்; பேசி இருக்கிறேன். அரசு விழாக்களிலும் பலமுறை இருவரும் பங்கெடுத்து இருக்கிறோம். அப்போதெல்லாம் என்னிடம் இனிமையாகத்தான் பழகினார்; பேசினார்.

எனவே, நாங்கள் இருவரும் சந்திப்பது அல்ல பிரச்சினை. ஆளுநர் மனம்மாறி தமிழகத்தின் நன்மைக்காக செயல்பட வேண்டும் என்பது தான் ஒட்டுமொத்த தமிழக மக்களின் எதிர்பார்ப்பு. தமிழக வளர்ச்சிக்கு எதிரான சில சக்திகளின் கைப்பாவையாக செயல்படுவதைத் தவிர்த்து, தமிழகத்தின் வளர்ச்சிக்கு உறுதுணையாக அவர் இருக்க வேண்டும் என்பதுதான் எனது வேண்டுகோள். இவ்வாறு முதல்வர் கூறியுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.