இயக்குனர் ரஞ்சித் பதவி விலக கோரி வலுக்கும் எதிர்ப்பு

மலையாள திரையுலகில் மிக முக்கியமான இயக்குநர்களின் ஒருவர் இயக்குனர் ரஞ்சித். மோகன்லால், மம்முட்டி ஆகியோரை வைத்து அதிக படங்களை இயக்கியுள்ள இவர் உணர்வுபூர்வமான படங்களை கொடுப்பதற்கு பெயர் பெற்றவர். அய்யப்பனும் கோசியும் படத்தில் பிரித்விராஜின் கோபக்கார தந்தையாக நடித்திருந்தது இவர்தான். சமீப காலமாக படம் இயக்குவதில் இருந்து ஒதுங்கியிருக்கும் இயக்குனர் ரஞ்சித் கேரள திரைப்பட அகாடமியின் சேர்மனாக பொறுப்பு வகித்து வருகிறார்.

அந்தவகையில் கேரள அரசு விருதுக்கான படங்களை, நபர்களை தேர்ந்தெடுப்பது, கேரளாவில் நடைபெறும் சர்வதேச திரைப்பட விழாக்களில் முக்கிய பங்கு வகிப்பது உள்ளிட்ட பொறுப்புகள் இவர் வசம் இருக்கின்றன. இதனாலேயே இவர் தங்களிடம் பாரபட்சம் காட்டி தங்களது படங்களை நிராகரிக்கிறார் என்கிற விமர்சனம் அவ்வப்போது இவர் மீது எழுவது உண்டு.

இதே கேரளா திரைப்பட அகாடமியில் தலைவராக இருக்கும் இயக்குனர் டாக்டர் பைஜூவுக்கும் இயக்குனர் ரஞ்சித்துக்கும் சமீபகாலமாக மோதல் போக்கு இருந்து வந்தது, சமீபத்தில் பைஜூ, நடிகர் டொவினோ தாமஸை வைத்து இயக்கிய அதிர்ஷிய ஜலகங்கள் திரைப்படம் சரியாக போகவில்லை. இது குறித்து இயக்குனர் ரஞ்சித் கிண்டலாக விமர்சித்துள்ளார். இதனைத் தொடர்ந்து ரஞ்சித்துக்கு தனது கண்டனங்களை தெரிவித்த டாக்டர் பைஜூ, தனது தலைவர் பதவியையும் ராஜினாமா செய்தார்.

இந்தநிலையில் கேரளா திரைப்பட அகாடமியில் உள்ள 15 உறுப்பினர்களின் 9 உறுப்பினர்கள், இயக்குனர் ரஞ்சித் தனது சேர்மன் பொறுப்பில் இருந்து விலக வேண்டும் என போர்க்கொடி தூக்கி உள்ளனர். அனேகமாக விரைவில் இது குறித்த கூட்டம் நடைபெற்று அதில் முடிவு எடுக்கப்படும் என்று தெரிகிறது. இல்லை தார்மீக பொறுப்பேற்று ரஞ்சித்தே விலகுவாரா என்பதையும் பொறுத்திருந்து பார்க்கலாம்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.