புதுடெல்லி: நாடாளுமன்ற அத்துமீறல் சம்பவத்தில் தொடர்புடைய 6-வது குற்றவாளி மகேஷ் குமாவத் நேற்று கைது செய்யப்பட்டு சிறையில் ஆஜர்படுத்தப்பட்டார். முக்கிய குற்றவாளி லிலித் ஜா, டெல்லியில் இருந்து தப்பிப்பதற்கு இவர் உதவியதாகவும், மற்ற குற்றவாளிகளின் செல்போன்களை அழித்ததாகவும் இவர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. அவரை விசாரணைக்காக 7 நாள் போலீஸ் காவலில் அனுப்ப சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.
மக்களவையில் கடந்த 13-ம் தேதி வண்ண புகை குப்பிகளை வீசி அத்துமீறலில் ஈடுபட்டது தொடர்பாக கைது செய்யப்பட்ட சாகர் சர்மா, மனோரஞ்சன், அமோல் ஷிண்டே, நீலம் தேவி, லலித் ஜா ஆகியோரிடம் டெல்லி போலீஸார் தீவிர விசாரணை நடத்தினர். இவர்கள் அனைவரும் லலித் ஜா உருவாக்கிய பகத் சிங் ரசிகர் மன்றத்தில் உறுப்பினர்களாக இருந்துள்ளனர். தாங்கள் மத்திய அரசுக்கு தெரிவிக்க விரும்பும் எதிர்ப்பை, மிகுந்த தாக்கத்துடன் எவ்வாறு தெரிவிக்கலாம் என பல திட்டங்களை ஆலோசித்துள்ளனர்.
தீப்பற்றாத ஜெல்: உடலில் தீப்பற்றாத ஜெல்லை தடவிக் கொண்டு தீக்குளிக்கும் திட்டம் குறித்து முதலில் ஆலோசித்துள்ளனர். பின்னர், இந்த திட்டத்தை கைவிட்டனர். அதன்பின் நாடாளுமன்றத்துக்குள் எம்.பி.க்களிடம் துண்டு பிரசுரங்களை விநியோகிக்கலாம் என்பது குறித்து திட்டமிட்டுள்ளனர். பின்னர் இறுதியாக மக்களவையின் பார்வையாளர் மாடத்தில் இருந்து வண்ண புகை குப்பிகளுடன் குதிக்கும் திட்டத்தை தேர்வு செய்ததாக விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களை, அவர்கள் சதி திட்டம் தீட்டிய இடத்துக்கு எல்லாம் அழைத்துச் சென்று போலீஸார் ஆய்வு நடத்தினர். நாடாளுமன்ற அத்துமீறல் சம்பவத்துக்குப் பிறகு, முக்கிய குற்றவாளியான லலித் ஜா, ராஜஸ்தானில் உள்ள நாகார் பகுதியில் தங்கியுள்ளார். அந்த இடத்துக்கும் லலித் ஜாவை அழைத்துச் சென்று போலீஸார் விசாரிக்க உள்ளனர். மேலும், செல்போன்களை அழித்த இடத்தையும் போலீஸார் ஆய்வு செய்யவுள்ளனர்.
தப்பிச் செல்ல உதவி: லலித் ஜா டெல்லியில் இருந்து தப்பித்துச் செல்வதற்கு, பகத் சிங் ரசிகர் மன்றத்தில் உறுப்பினராக இருந்து மகேஷ் குமாவத் என்பவர் உதவி செய்துள்ளார். போலீஸாரிடம் லலித் ஜா கடந்த 14-ம் தேதி இரவு சரணடைய வந்தபோது, மகேஷ் குமாவத்தும் உடன் வந்து சரணடைந்தார். இதையடுத்து இருவரும் டெல்லி சிறப்பு பிரிவு போலீஸாரிடம் விசாரணைக்காக ஒப்படைக்கப்பட்டனர். லலித் ஜா டெல்லியிலிருந்து தப்பிச் செல்ல, உதவி செய்ததையும், மற்ற குற்றவாளிகளின் செல்போன்களை உடைத்து அழித்ததையும் மகேஷ் குமாவத் ஒப்புக் கொண்டார்.
இதையடுத்து முக்கிய தடயங்களை அழித்ததாகவும், முக்கிய குற்றவாளி லலித் ஜா தப்பிக்க உதவியதாகவும், நாட்டில் அராஜகத்தை பரப்பும் சதியில் ஈடுபட்டதாகவும் மகேஷ் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்து டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் நேற்று ஆஜர்படுத்தினர். இதைத் தொடர்ந்து மகேஷ் குமாவத்தை விசாரணைக்காக 7 நாள் போலீஸ் காவலில் அனுப்ப என்ஐஏ வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிபதி ஹர்தீப் கவுர் உத்தரவிட்டார். நாடாளுமன்ற அத்துமீறல் சம்பவத்தை குற்றவாளிகள் மீண்டும் நடத்தி காட்டுவதற்கு நாடாளுமன்றத்தின் அனுமதியை போலீஸார் கோரலாம் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
லலித் ஜா குடும்பம் அதிர்ச்சி: நாடாளுமன்ற அத்துமீறல் சம்பவத்தின் மூளையாக செயல்பட்டவர் லலித் ஜா. இவரது குடும்பம் கொல்கத்தாவில் கடந்த 50 ஆண்டுகளாக வசித்து வருகின்றனர். இவர்களது சொந்த மாநிலம் பிஹார். சத் பூஜாவுக்காக லலித் ஜா குடும்பத்தினர் சொந்த ஊரான பிஹார் மாநிலத்தின் ராம்பூர் உதய் கிராமத்துக்கு சென்றனர். ஆனால் லலித் ஜா மட்டும் வரவில்லை. சொந்த வேலையாக டெல்லி செல்வதாக கூறியுள்ளார்.
சிறு வயது முதல் அமைதியாக இருந்து வந்த லலித் ஜா டியூசன் ஆசிரியராக இருந்துள்ளார். தொண்டு நிறுவனங்களுடன் சேர்ந்து பணியாற்றியுள்ளார். நாடாளுமன்ற அத்துமீறல் சம்பவத்தில் ஈடுபட்டதாக இவரது படம் டி.வி.யில் வெளியானதை பார்த்து அவரது குடும்பத்தினர் அதிர்ச்சியில் உறைந்தனர். லலித் ஜாவின் தந்தை தேவானந்த் கூறும்போது, ‘‘இது எப்படி நடந்தது என்றே தெரியவில்லை. இதற்கு முன் லலித் ஜா குற்ற சம்பவங்களில் ஈடுபட்டதில்லை’’ என்றார்.
சபாநாயகர் கடிதம்: நாடாளுமன்ற அத்துமீறல் சம்பவத்துக்கு எம்.பி.க்கள் பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து அவையில் விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தால் மக்களவையில் 13 எம்.பி.க்களும், மாநிலங்களவையில் ஒரு எம்.பி.யும் கூட்டத் தொடர் முழுவதும் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
இந்நிலையில் எம்.பி.க்களுக்கு மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா நேற்று அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: மக்களவை அத்துமீறல்சம்பவம் தொடர்பாக, மத்திய உள்துறை அமைச்சகம் அமைத்த உயர்நிலை விசாரணை குழுவின் அறிக்கை, அவையில் விரைவில் தெரிவிக்கப்படும். மேலும், நாடாளுமன்ற வளாகத்தின் பாதுகாப்பை அதிகரிக்கவும், இதுபோன்ற அத்துமீறல் சம்பவம் இனிமேல் நடைபெறாமல் இருக்க உறுதியான செயல் திட்டத்தை உருவாக்கவும் உயர் நிலைக் குழு ஒன்றை நான் அமைத்துள்ளேன். இவ்வாறு சபாநாயகர் ஓம் பிர்லா தெரிவித்துள்ளார்.